"வேட்கோவர்' வரலாறு!

பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப் பெட்டிகளாகப் பயன்படுத்தியதாக அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.
Updated on
2 min read

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

பண்டைக் காலத்தில் கிராம சபைகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பானைகள் ஓட்டுப் பெட்டிகளாகப் பயன்படுத்தியதாக அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

""கயிறு பிணிக்குழிசி ஓலை கொண்மார்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்'' (அகம். 77:7-8)

இறந்தவர்களை மண் பானைக்குள் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பதை,

""சுடுவோர் இடுவோர் தொடுகுழி படுப்போர்

தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்''

என மணிமேகலை குறிக்கிறது. சோழ மன்னன் கிள்ளிவளவன் இறந்தபொழுது அவனைப் புதைக்க, தாழியைச் செய்யும் குயவனைப் பார்த்து ஐயூர்முடவனார் கேட்பதாக ஒரு பாடல் (""கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே'' புறம்.228:11-15) புறநானூற்றில் வருகிறது.

இன்னொரு பாடலில், "போரில் மாண்ட என் கணவரை அடக்கம் செய்யும் ஈமத்தாழியிலேயே என்னையும் சேர்த்து அடக்கம் செய்ய சற்றே அகன்ற வாயுடைய பெரிய தாழியாகச் செய்து தர வேண்டும்' என்று வேட்கோவை வேண்டுகிறாள் (புறம்-256) என்ற செய்தி காணப்படுகிறது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் முதுமக்கட்தாழிகள் ஆதிச்சநல்லூர், கொற்கை, அமரிதமங்கலம், பூம்புகார், செம்பியன் கண்டியூர், கோவலன் பொட்டல், எடமணல் (சீர்காழி அருகில்) முதலிய பல இடங்களில் தொல்லியல் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பிற்கால வரலாற்றிலும் "வேட்கோவர்' சிறப்பிடம் பெற்று விளங்குவதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மண் பானை செய்பவர்கள் "வேட்கோவர், வேட்கோ, கலமிடும் குசவன், மண்ணுடையார், பெருங்குசவன்' என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.

குயவர்கள் கோயில் ஊழியர்களாகப் பணிபுரிந்துள்ளனர். திருக்கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள் போன்றவற்றை செய்து அளித்துள்ளனர். திருவக்கரை கோயிலுக்கு செம்பியன் மாதேவியரால் அளிக்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடும் கல்வெட்டில்,

""கலங்களும் மற்றுஞ் சால்களும்

குடங்களும் பெருந்திருவமுதுக்கு பானைகளும்

சட்டிகளும் திருமுளைக்கு பாலிகைகளும்

இடும் குசவன்''

எனக் குறிப்பிடப்படுகிறது. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்கு அமுது படைக்கப்படும் மண்பானை "கூன்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலில் மடங்கள், மடைப்பள்ளிகளிலும் அவர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நிலங்களும் அளிக்கப்பட்டன. கிராம சபைகளும் அவர்களுக்கு நிலம் அளித்துள்ளது. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் "குசக்காணி, குசவன் நிலம், குசப்பட்டி, குலால விருத்தி, வேட்கோவக்காணி' என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.

கோயிலில் பணிபுரிபவருக்கு வீட்டுமனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. குயவர்கள் செய்யும் தொழிலின் மீது குசக்காணம், சக்கர காணிக்கை, திரிகை ஆயம் போன்ற வரிகளும் விதிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து வழிபடும் பக்தர்களின் வசதிக்காக உணவு அளிக்கப்பட்டுள்ளது. அது "சட்டிச்சோறு' எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்காக அளிக்கப்பட்ட நிலம் "சட்டிச்சோறுபுறம்' என அழைக்கப்பட்டது.

நன்னிலம் அருகே உள்ள திருவீழிமிழலைத் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏழு நாள்கள் நடைபெற்ற போது குயவர்கள் அந்த ஏழு நாள்களும் "அடுகலன்களும் நீர்கலன்களும்' அளிக்க தானம் அளிக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருக்கோயில்களுக்கும் வேட்கோவர்கள் தானம் அளித்துள்ளதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் "ஊர் கணக்காக' செயல்பட்டு வந்ததை திருவீழிமிழலை கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாகப்பட்டினத்தில் பெüத்த விகாரம் அமைக்க ஆனைமங்கலம் என்ற ஊர் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அளிக்கப்பட்டது. அதனை வரையறுக்கும்பொழுது சாத்தமங்கலம் என்ற ஊரின் சார்பாக வேட்கோவன் நேந்திரன் சாத்தனான நானூற்றுவ பெருங்கோவேளான் கையெழுத்திட்டதை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது.

மனிதனின் எல்லா சடங்குகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குவதைப் போன்று தமிழக பண்பாடு - வரலாற்றில் வேட்கோவர்கள் முக்கிய இடம் பெற்று விளங்குவதை வரலாற்றுச் சான்றுகளால் அறிந்து பெருமை கொள்ள முடிகிறது.

இக்கட்டுரை, "வேட்கோவர்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 1979-ஆம் ஆண்டு நடத்திய "தமிழ்நாடு அரசு கருத்தரங்கில்' படிக்கப்பெற்று நூலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com