சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 2

மண்ணின் வளம் முழுவதும் உலகம் கண்டு கொண்டதா? ஒரு பகுதியாவது கண்டு கொண்டதா? எத்தனை அறிவர்கள் தோன்றி ஆய்ந்தாலும் கணக்கிட முடியாமல் தோற்றே போவர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 8:30 pm

மண்ணின் வளம் முழுவதும் உலகம் கண்டு கொண்டதா? ஒரு பகுதியாவது கண்டு கொண்டதா? எத்தனை அறிவர்கள் தோன்றி ஆய்ந்தாலும் கணக்கிட முடியாமல் தோற்றே போவர். நீரில் நாம் நடாமல், நிலத்தில் இருக்கும் இடம் தெரியாமல், புதைந்து கிடந்த தாமரை, ஆம்பல், கொட்டி என்பவை தாமே முளைத்து, நீர்மேலே இலையும் பூவும் தேனும் பூம்பொடியும் வண்டும் ஈயும் ஒருசேரக் காண்கிறோமே!

மண்ணுள் புதையுண்டு கிடந்த கிழங்குதானே, அவற்றின் மூலம்! தாமரைக்குளம், தாமரைத் தடாகம், அல்லி (ஊர்ப்பெயர்) இலஞ்சி (ஊர்ப்பெயர்) ஆக விளங்கவில்லையா? இலக்கிய வாணர்களைக் கொள்ளை கொள்ளவில்லையா? ஓவியர்களை வண்ணம் தீட்ட வைக்கவில்லையா? சிற்பிகளையும் விட்டுவைத்ததா? "சிற்றண்ணல் வாயில்' சான்று இல்லையா? நீரின் அளவு நிமிர்ந்தும், படிந்தும் நமக்குக் காட்சிதரும் அளவு, வாழ்வியல் அளவாம் உள்ளத்து அளவு காட்டுவது இல்லையா?

""வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு''

""நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தாம்கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு''

என்பவை நினைவில் எழுமே! நீரில் பிறங்கிய மலர்தான் தாமரை. மருதநில வளமாம் அது, ""பூவெனப் படுவது பொறிவாழ் பூவே'' எனச் சிறப்புப் பெற்றாலும், மல்லிகை, முல்லை மணம் அதற்கு உண்டா? அல்லி, குவளை ஆயவற்றுக்கு உண்டா? இல்லை! நீர்ப்பூவாம் அவை, நிலப்பூ மணத்தை ஒட்டவில்லை! எட்டவும் இல்லை!

காய், கனி, பிஞ்சு, பிருக்கு எனவும் வித்து, கொட்டை எனவும் வளப்பயன் உண்டா? இல்லையே! ஏன்? மண்ணில் இருந்து கிளம்பும் மண்+அம்=மணம் அதற்கு இல்லாமை, இயற்கைப் படைப்பாளி வைத்த ஒழுங்கு முறை அல்லவா!

மழை பெய்கிறது; எங்கோ பெய்கிறது! மணம் இங்கே வந்துவிடுகிறது அல்லவா? விண்ணும் மண்ணும் கலந்த மணம்தானே அது! நீரில் மணமில்லை! மண்ணில் மணம் இருந்தது. இரண்டும் கலந்தன; மண்ணின் மணத்தை வெளிப்படுத்தியது. வளி உதவியது; நம் மூக்கின் மூன்றாம் அறிவுக்கு வேலை தந்துவிட்டது!

மண்ணில் வளரும் பூவின் நறுமணம், நீரில் கிளரும் பூவுக்குக் குன்றிய அளவு அமைந்ததும், நீரற்ற காலத்து நிலத்தாயின் வயிற்றில் கிடந்து, நீர்வரக் கிளர்ந்து, தன் பிறவி வனப்பையும் பொலிவையும் தேன் கொடையையும் இனப்பெருக்கப் பூம்பொடியையும் தந்து, பொருட்டு என்னும் அளவில் நின்றது. நிலத்தில் பிறந்த கொடியின் மணம், மண்ணில் பிறந்ததால் பெருகியது. மண்+மணம்=மணம் ஆய அரிய "பெயர் சூட்டு விழா'வைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.