தலைவன், பரத்தையரிடம் சென்ற காலத்தில், தலைவியின் ஊடலைத் தீர்க்கும் வாயிலாகப் பலரை தொல்காப்பியர் குறித்துள்ளார். அவர்களில் விருந்தினரும் அடங்குவர். தலைவன், பாணன், தோழி முதலியவர்களால் ஊடல் நீக்க முடியா நிலையில் விருந்தினரை அழைத்து வருவான். விருந்தினரை ஓம்புதல், மனையறக் கடமைகளில் ஒன்றாகும். அதனால், தலைவி விருந்தினரைக் கண்டவுடன் ஊடலை மனத்தில் அடக்கி, விருந்தினரையும் தலைவனையும் முகமலர்ச்சியுடன் வரவேற்பாள். அந்த விருந்தோம்பல் நிலையில் ஊடல் ஓடிவிடும்.
தலைவன் பரத்தமை ஒழுக்கம் பூண்டான். அதனால் தலைவி ஊடல் கொண்டாள். இதை அறிந்த தலைவன் அஞ்சி, தலைமகள் இருந்த வீட்டிற்கு வந்தான். ஊடல் தீர்க்க பாணன் முதலியோரை விடுத்தும் பயனில்லை. வேறுவழி தெரியாமல் தலைவன் இருந்தபோது, விருந்தினர் ஒருவர் அவன் மனைக்கு வந்தார். அவருடன் தலைவன் தன் மனைக்குள் புகுந்துவிட்டான். இன்முகமும் இன்சொல்லும் கொண்டு, வந்த விருந்தை தலைமகள் வரவேற்றது அவனுக்குப் பேரின்பம் தந்தது. விருந்தொடு புகுந்த தலைவனிடமும் இன்சொல் வழங்கினாள்.
தலைவியின் வீடு பெரிதாக இருந்தது. அக்காலத்தில் மாடுகள்தாம் செல்வ வளத்தைக் காட்டின. பெரிய கொம்புகளை உடைய வளமான எருமைகளின் இளங்கன்றுகள், தூண்கள்தோறும் கட்டப்பட்டிருந்தன. தலைவி செழுமையான காதுகளில் வளைந்த குழை அணிந்திருந்தாள். காந்தள் மலர் போன்ற விரல்களில் கற்கள் பதித்த மோதிரம் அணிந்திருந்தாள். அவள் விருந்தினருக்கு மீன் உணவு சமைக்க விரும்பினாள். தன் மெல்லிய விரல்கள் சிவக்குமாறு வாளை மீனை அரிந்து வகைப்படுத்தினாள். சமையல் அறை புகை, கண்களைக் கரித்தது. பிறை நுதலில் நுண்ணிய வியர்வைத் துளிகள் அரும்பின. அதை அழகிய முந்தானையில் துடைத்தாள். அவள் செய்வன செய்து நின்ற திருவுடைத்தோற்றம், தலைமகன் உள்ளத்தில் நன்கு பதிந்தது. அவளுடைய பார்வை அவனிடத்தில் செல்லும்போது, அவள் உள்ளத்தே கிடந்த புலவிக் குறிப்பைக் காட்டியது. முகம் மாறுபட்டு நோக்கினாள். விருந்தினர் அகங்குழைந்து நீங்குவர் என்ற அச்ச மிகுதியால் அன்புடன் விருந்தோம்பினாள். விருந்தினரோடு தலைவனையும் பேணிய செயல், தலைமகனுக்கு எல்லையற்ற இன்பத்தைத் தந்தது. அதுவே வாயிலாகத் தலைவி உள்ளத்தில் பொங்கி நின்ற புலவியும் வெம்மையும் அவிந்துபோயின; அதைக்கண்ட தலைவன், விருந்தினரின் சிறப்பை வியந்தான். "தினந்தோறும் விருந்தினர் வரவேண்டும். அப்போது தலைவி வெகுளியால் கண்சிவக்க மாட்டாள். சிறிய முள் போன்ற கூரிய பற்கள் தோன்ற, முறுவல் புரிவாள். அந்த அழகிய முறுவல் விளங்கும் முகத்தை நான் காணவேண்டும்' என்ற தன் ஆசையை விளக்கினான். இந்த அற்புதமான சொல்லோவியத்தை மாங்குடி மருதனார் பாடியுள்ளார். மருதத் திணையில், "விருந்து வாயிலாகப் புக்க தலைமகன் கூற்றாக' புலவர் இதை அமைத்துள்ளார்.
""தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்ந்த கண்ணன் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாளன்று
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே!'' (நற்.120)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு!

ஹூண்டாய் மோட்டார்ஸ் 4வது காலாண்டு லாபம் 22% சரிவு!
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்!
விடியோக்கள்

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

