
நம்மாழ்வார் பாசுரங்களில் ஹைக்கூ' எனும் தலைப்பில் பேரா.க.அன்பழகன், இரு பாசுரங்களை எழுதி, ஹைக்கூ வடிவத்தையும் ஹைக்கூ கவிதைகளாக உள்ளது எனவும் கூறியுள்ளார். முதல் பத்தியிலேயே ஹைக்கூ குறித்தான வரையறையினைச் சொல்கிறார். இதில் ஹைக்கூ கவிதையின் மூன்றாவது வரி என்பது ஒரு வெடிகுண்டைப் போலவும், ஒரு தீக்குச்சியைப் போலவும் இருக்க வேண்டும் எனும் வரையறையினைப் பார்க்க மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
நம்மாழ்வார் எழுதிய பாசுரங்கள் யாப்பிலக்கணத்தின் வஞ்சித்துறையைச் சார்ந்ததாகும். அவருடைய பாசுரங்கள் பக்தி உணர்வின் இறை நயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹைக்கூ கவிதைகள் இயற்கை, மானுடத்தையே சுற்றி வருகிறது. இறைவன் குறித்தான ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் வருவதில்லை. எந்தவொரு கவிதைக்கும் கவித்துவமும், தனித்துவமும் முக்கியம். இது ஹைக்கூவுக்கும் பொருந்தும்.
மூன்றுவரிக் கவிதையே ஹைக்கூ. அனுபவப் பகிர்வுகளில் ஓர் அதிர்வை, ஆன்மாவில், அடிமனத்தில் நிகழ்த்தச் செய்கின்ற வலிமை கொண்டது ஹைக்கூ கவிதைகள்.
நம்மாழ்வாரின் பாசுரங்களில் ஹைக்கூவுக்கான எந்த முகாந்திரமும் இல்லை.
""ஹைக்கூவின் மூன்றாவது வரி சுண்டக் காய்ச்சிய பாலின் சுவையாக இருக்க வேண்டும்'' எனக் கவிஞர் அப்துல் ரகுமான் கூறுவார். அதே நேரம், ""ஹைக்கூவின் மூன்று அடிகளும் தர்க்கக் கோட்பாடு போல அமைந்துவிடலாகாது. முதல் அடி, மூன்றாம் அடி இரண்டும் உணர்ச்சி இணக்கம் கொண்டவையாகவும், இடை அடி மற்ற இரு அடிகளுக்குக் கருத்தாலும், நயத்தாலும் பாலமாய் அமைய வேண்டும். இறுதி அடியில் கவித்துவ நிறைவு உணர்ச்சி ததும்பலாய் அமைந்திட வேண்டும்'' என்பார் கவிஞர் தமிழ்நாடன்.
இப்படி ஹைக்கூ புரிதலுக்கான பல்வேறு கருத்துகளினூடே கால்லெர்ஸ் கர்ùஸரெங் என்பவரின் கவிதைக்கான கூற்றை இங்கு நோக்குவது சிறப்பாக இருக்கும். ""கவிதையின் வரிகளுக்கிடையில் வெடிகுண்டொன்றை வையுங்கள். வாசிப்பின் இறுதியில் வரிகளை உடைத்துக்கொண்டு புதிதாய்ப் பிறக்கிறது இந்த வாமனக் கவிதை'' என்பார்.
எனவே, நம்மாழ்வாரின் பாசுரங்களின் வடிவத்தை வைத்து மட்டுமே ஹைக்கூ கவிதைகள் எனக் கூறுவது தமிழ் இலக்கிய ஹைக்கூவுக்குப் பொருத்தமாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.