தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்

ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன.

News image
Updated On :25 அக்டோபர் 2014, 8:50 pm

முனைவர் ப.பாண்டியராஜா

ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றில் சில வழக்கங்கள் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டும் இருக்கின்றன. தமிழகத்துக் காவல் தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் அப்படிப்பட்டன. இறை வழிபாடு தவிர சங்க காலத்தில் இருந்த சில சமூகப் பழக்க வழக்கங்கள் இன்னும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அங்குமிங்கும் காணமுடிகிறது. அவற்றில் இரண்டைக் காண்போம்.

முயல் விரட்டிய கானவர்கள்

அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டின் சில மலையோரக் கிராமங்களில் "முயல்வேட்டை' என்ற ஒரு வழக்கம் இருந்துவந்துள்ளது. இதைச் சிலர் பாரிவேட்டை என்றும் கூறுவர்.

ஆண்டில் ஒருநாள், ஒரு கிராமத்து மக்கள் கம்பு, குத்தீட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்துப் பக்கம் சென்று விலங்குகளைப் பிடிப்பர். இதுவே பாரிவேட்டை. பின்னர் அவர்கள் ஊருக்குள் வந்து அந்த விலங்குகளை அடித்துச் சமைத்து ஒன்றாகச் சாப்பிடுவர். இன்றைக்கு இப் பழக்கம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆயினும், இப்பழக்கம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வருகிறது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். பெரும்பாணாற்றுப்படை இத்தகைய பாரிவேட்டை ஒன்றைக் குறும்படமாய் விவரிக்கிறது.

..... ...... பகல்நாள்

பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்

தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி

முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்

நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கு அற வளைஇ

கடுங்கண் கானவர் கடரு கூட்டுண்ணும்

(பெரும். 111-116)

பகற்பொழுதில், பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து, குவிந்த இடத்தையுடைய வேலியில் பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, முள்ளுள்ள தண்டுகளையுடைய தாமரையின் புறவிதழைப் போன்ற நீண்ட காதுகளையுடைய சிறிய முயல்களை வேறு போக்கிடம் இல்லாதவாறு வளைத்துப் பிடித்து, கடுமையான கானவர் காட்டில் கூட்டாகச் சேர்ந்து உண்ணும் என்பது இதன் பொருள். மிக அண்மைக்காலம் வரை இருந்த இந்த வகை வேட்டை, இனி இலக்கியத்தில் மட்டும் எந்நாளும் வாழும்.

நாள்செய்யும் கானவர்கள்

மணம் உறுதிசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் ஒரு நல்ல நாளில் அப்பெண்ணை அலங்கரித்து அவளுக்குச் சீர் முதலிய பரிசுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சில குடும்பங்களில் நடப்பதுண்டு. இதற்கு நாள்செய்தல் என்று பெயர். சிலர் இதனை ஒரு குடும்ப விழாவாகக் கோலாகலமாக நடத்துவர். இத்தகைய சொல் ஒன்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளும் மலைபடுகடாம் என்ற நூலில் காணப்படுகின்றன.

நன்னன் என்ற மன்னனுக்குக் காணிக்கையாகப் படைக்கும் பொருட்டு மலைக் குறவர்கள் சிறந்த கள்ளைத் தயாரித்தனர். பின்னர் அதனை நடுவேயிட்டு, தம் உடுக்கையடித்து, தம் பெண்டிரோடு கைகோத்துச் சுற்றிவந்து குலவையிட்டு வணங்கினர்.

திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என

நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு

மான் தோல் சிறு பறை கறங்க கல்லென

வான் தோய் மீமிசை அயரும் குரவை (மலை. 315-322)

திருத்தமாக செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்குப் புதிய குடியிறையாக அமையும் என்று கள்ளை நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற, கலகல என்னும் ஓசையுடன், விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடு செய்ய எழுப்பும் குலவை ஒலி என்பது இதன் பொருள்.

இங்கு காணப்படும் நறவு நாள்செய்த குறவர் என்ற தொடருக்கு "நறவை நாட்காலத்தே குடித்த குறவர்கள்' என்று உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். எனினும் "நாள்செய்த' என்ற சொல்லை ஒரு சிறப்புப்பொருள் கொண்ட சொல்லாகக்கொண்டு இன்றைய "நாள்செய்யும்' நிகழ்ச்சியோடு ஒத்துப் பார்ப்பதே சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.