எழுத்தாளர்களின் முன்னோடி!

தமிழ் தென்றல்' திரு.வி. கலியாணசுந்தரனார் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (26.8.1883) தோன்றி, 20-ஆம் நூற்றாண்டின் நடுவில் (17.9.1953) மறைந்த ஒரு பல்துறை அறிஞர்.
எழுத்தாளர்களின் முன்னோடி!

தமிழ் தென்றல்' திரு.வி. கலியாணசுந்தரனார் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (26.8.1883) தோன்றி, 20-ஆம் நூற்றாண்டின் நடுவில் (17.9.1953) மறைந்த ஒரு பல்துறை அறிஞர். தமிழ் இலக்கியம், பல் சமய அறிவு, சாத்திரப் புலமையுடன் அரசியலில் நுழைந்த இவர், இந்திய தேசிய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர். பத்திரிகைத் துறையில் துணிச்சலுடன் பிரவேசித்தவர்; இந்திய தேசிய விடுதலை யூடே தொழிலாளர் முன்னேற்றம், பெண்ணுரிமை, இளைஞர் வளர்ச்சி, சமயப் பொதுமை, தமிழ் மொழி வளர்ச்சி முதலிய துறைகளில் ஈடுபட்டுப் பெரும் தொண்டாற்றிய இவர், எழுத்துத் துறையிலும் தன்னிகரற்று விளங்கினார். இவருடைய எழுத்துலகப் பணிகள், இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

"வாழ்க்கை வரலாற்று' ஆசிரியர்

தம் தமிழாசிரியர் நா. கதிரைவேல் பிள்ளையின் மறைவுக்குப் பின் (1907), அவர் வாழ்க்கை வரலாற்றை "நா. கதிரைவேல் பிள்ளை சரித்திரம்' (1908) என்னும் பெயரில் இவர் எழுதியதை நண்பர்கள் வெளியிட்டனர். அதன் நடை, தெ.பொ.மீ.யால் பெரிதும் பாராட்டி உரைக்கப் பெற்றது; பலரையும் ஈர்த்தது; ஈர்க்கும். ஆசிரியரின் அறிவுரைப்படி 1907 முதல் 1910 வரை "பெரியபுராண'த்திற்கு ஒரு குறிப்புரையுடன் "நாயன்மார் வரலா'ற்றை உரைநடையில் எழுதி, பகுதி, பகுதியாக வெளியிட்டார். 1934-இல் இவ்வுரைநடையைப் புதுப்பித்து நயமான நடையில் "நாயன்மார் வரலாறு' என்னும் தலைப்பில் ஒரு தனி வெளியீடாக்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸில், பாலகங்காதர திலகர் மறைவுக்குப் பின் (1920), அதனை மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்தினார். அவருடைய கொள்கைகளில் பேரீடுபாடு கொண்டு, அவரை அரக்கோணத்தில் ரயிலில் சந்தித்து, இனிய நினைவுகளோடு திரும்பினார் திரு.வி.க. பின் "தேசபக்த'னிலும் "நவசக்தி'யிலும் அவர் கொள்கைகளைத் தமிழ் மக்களிடையே தம் பேச்சு, எழுத்துகளால் பரவலாகவும் ஆழமாகவும் பரப்பினார். இதனால் திரு.வி.க.வை, "தென்னாட்டுக் காந்தி' என்று தமிழர் போற்றலாயினர். "காந்தியடிகள்' என்று மகாத்மா காந்தியைத் தமிழ் மரபுக்கேற்ப அழைக்கலானார்; திரு.வி.க.வின் அழைப்பு தமிழர் வழக்காயிற்று. இப்பற்றினால், திரு.வி.க. காந்தியடிகளின் வரலாற்றைச் சுருக்கமாகப் பத்திரிகைக் கட்டுரையாக எழுதி (1918), சிறு நூலாக (1921) வெளியிட்டு, பின்னர் பெரு நூலாக - ஓர் ஆராய்ச்சி நூலாகக் (1926) கொண்டு வந்தார். அதுவே "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்னும் நூலாகும்.

மேலும், இங்கிலாந்து நாட்டை ஆண்ட எட்வர்ட் கோமகன் தன் காதலுக்காக அரச பதவியைத் துறந்தார். இதனை மையமாக வைத்து, அவர் வரலாற்றை நுட்பமாக ஆராய்ந்து "முடியா? காதலா? சீர்திருத்தமா?'

(1938) என்னும் தலைப்பில் தம் "நவசக்தி' இதழில் தொடர்ந்து எழுதி நூலாக்கினார். அன்றியும், தம் மணிவிழாவுக்குப் (1943) பின்னர், தம்மைப் பற்றிச் சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் உலவுவதை அறிந்த திரு.வி.க., உண்மை விவரங்களைச் சொல்லுவதற்காகத் தம் வாழ்க்கை வரலாற்றை, "திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்' என்னும் பெரு நூலாக (1000 பக்கம்) எழுதி (1944) வெளியிட்டார். அதன் அணிந்துரையில் சமகால வழக்குரைஞரான ம. பாலசுப்பிரமணியம், "இந்நூல் தமிழகத்தின் நாற்பது ஆண்டுக்கால வரலாறாகும்' என்று கணித்துள்ளார். இதுவே இந்நூலின் தனிச் சிறப்பு எனலாம்.

உரையாசிரியர்

தம் "பெரியபுராண' நூலை (1907-1910), ஆராய்ச்சிக் குறிப்புரையாகப் புதுக்கி 1934-இல் மறுபதிப்பாக வெளியிட்டார். இப் புத்துரை அனைவராலும் பாராட்டப்பெற்றது. அதனால், திரு.வி.க.வோடு பழகிய பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் சென்னை, "சேக்கிழார் ஆராய்ச்சி மைய' வெளியீடாகத் திரு.வி.க.வின் குறிப்புரையையும் ம. பாலசுப்பிரமணிய முதலியாரின் அரும்பொருள் விளக்கத்தையும் சேர்த்து 1993-இல் வெளியிட்டார். இதில் சிற்சில பகுதிகளைப் பதிப்பாசிரியர் நீக்கியதனால், திரு.வி.க. பதிப்பாக இல்லை. எனவே, திரு.வி.க. நூல்களை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இக்கட்டுரையாசிரியர், திரு.வி.க.வின் 1934 வெளியீட்டையே ஒரு நூற்றாண்டுப் பதிப்பாக, 2010-இல் கொண்டு வந்தார்.

இதன் பின்னர், திரு.வி.க., குசேலோபாக்கியானம் (1915), திருநாவுக்கரசர் தேவாரம் (1919), காரைக்காலம்மையார் திருமுறை (1932) ஆகியவற்றுக்குக் குறிப்புரை எழுதித் தனிநூலாக வெளியிட்டுள்ளார். அடுத்து, பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டுக்கு விருத்தியுரை (1913) எழுதியுள்ளார். இது 1923-இல் நூலாக வெளிவந்தது. அடுத்து, திருக்குறள் முதல் 100 பாடல்களுக்குத் தம் நவசக்தி இதழில் தொடர்ந்து விரிவுரையாக எழுதிய திரு.வி.க., அவற்றைப் "பாயிரம்', "இல்லறவியல்' என்று பிரித்து முறையே 1939, 1941-இல் வெளியிட்டார்.

கட்டுரை ஆசிரியர்

திரு.வி.க. ஒரு சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் பேசுவது போலவே எழுதுவார்; எழுதுவது போலவே பேசுவார். இஃது இவருக்கே உரிய கைவந்த கலையாகும். இதனால் "திரு.வி.க. நடை' என்றே தமிழ் உரைநடை உலகில் வழங்கப்பெற்றது; அதனைப் பலரும் பின்பற்றினர்.

"தேச பக்தன்' (1917-1920) நாளிதழ், "நவசக்தி' (1920-1940) வார, மாத இதழ் ஆசிரியராகவும் விளங்கினார். இவ்விரண்டிலும் இவர் அரசியல் சமுதாயம், இலக்கியம் முதலிய துறைகளில் அவ்வக்கால நிலைமைகளுக்கு ஏற்பக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' (1921), "என் கடன் பணி செய்து கிடப்பதே' (1921), "தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' (1923), "முருகன் (அல்லது அழகு)' (1925), "கடவுட் காட்சியும் தாயுமானாரும்' (1928), "சன்மார்க்க போதமும் திறவும்' (1934) முதலியவை தம் இதழ்களிலும் பிறர் இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளேயாம்.

தேசபக்தன் நாளிதழில் இவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகளின் தொகுப்பே "தேசபக்தாமிர்தம்' (1919) என்னும் நூலாகும். அடுத்து, "நவசக்தி' (1920-1940) வார இதழில் எழுதிய தலையங்கம் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து, "தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு' என்னும் பெயரில் இரு பகுதிகளாக 1935-இல் வெளியிட்டார். இந்நூல்களின் மூலம் பல தமிழ்ச் சொற்களை உருவாக்கினார். அவை இன்றும் வழக்கில் உள்ளன.

சொற்பொழிவாளர்

அரசியல் மாநாடுகளில் திரு.வி.க. தலைமையேற்றுப் பேசியவற்றைத் தொகுத்து "தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு' (1928) என்னும் நூலாக்கினார். பல்வேறு அமைப்புகளின் கூட்டத் தலைமை மற்றும் பேச்சுகள் எழுத்துருவம் பெற்று நூல்களாயின. அவை "சைவத்தின் சமரசம்' (1925), "சைவத் திறவு' (1929), "தமிழ் நூல்களில் பெüத்தம்' (1929), "சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து' (1930), "நினைப்பவர் மனம்' (1930), "இமயமலை அல்லது தியானம்' (1931), "சமரச தீபம்' (1934), "சித்த மார்க்கம்' (1935), "உள்ளொளி' (1942), "ஆலமும் அமுதமும்' (1944) ஆகும்.

நூலாசிரியர்

"மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' (1926), "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை' (1927), "இந்தியாவும் விடுதலையும்' (1940), "திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்' (1944), "பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி' (1949), "உள்ளொளி' (1942) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.

கவிஞர்

இவருடைய கவிதை நூல்களுள் சில: உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல் (1931), திருமால் அருள் வேட்டல் (1938), பொதுமை வேட்டல் (1942), கிறிஸ்துவின் அருள் வேட்டல் (1945), சிவனருள் வேட்டல் (1947), இருளில் ஒளி (1950), அருகன் அருகே அல்லது விடுதலை வழி (1951), பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் (1951), முதுமை உளறல் (1951) என்பவையாம். வாழ்வில் இறுதியாகத் தம் 71-ஆவது வயதில் (1953) "வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்' என்னும் நூலை எழுதித் தம் எழுத்துப் பணிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இங்ஙனம், தம் 70 ஆண்டு வாழ்க்கையில் 1908 முதல் 1983 வரை எழுதிய நூல்கள் பலவற்றோடு (57), வெளிவராத நூல்கள் பலவும் மக்களுக்குப் பயன்தரும் வகையில் அமைந்தது நாம் பெற்ற பேறாகும். அவ்வகையில், திரு.வி.க.வின் 131ஆவது பிறந்தநாளில் (26.8.14) அவரை நினைவுகூர்வது சிறப்பானதாக அமையும்.

-முனைவர் அ. நாகலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com