மகாபாரதத்தில் கிளைக்கதையாகக் கூறப்படும் நளன்-தமயந்தி வரலாற்றை, தனது தமிழ்த் திறத்தால் வெண்பா யாப்பில் சுவையான சிற்றிலக்கியமாக வழங்கியுள்ளார் புகழேந்திப் புலவர். இதனால் "வெண்பாவில் புகழேந்தி' எனப் புகழப்படுகிறார். அந்தச் சிற்றிலக்கியத்தில் பல்வேறு உவமைகளைக் கூறிக் கதையின் நிகழ்ச்சிகளை விளக்குகிறார்.
விதியின் தலைவிதியையே மாற்றியமைத்தவர்கள் நம் கற்பரசிகள். அக் கற்பரசிகளுள் தலைசிறந்தவர் நளனின் நாயகியான தமயந்தி. நளன்-தமயந்தியின் கதையை வெண்பாவில் யாத்த புகழேந்திப் புலவர், அந்தச் செய்யுள்களில் உவமை நயம் பல இடங்களில் உயர்ந்தோங்கியுள்ளனவாகவும் இயற்றி இருக்கிறார். இரு பாடல்களில் உள்ள உவமை நயத்தை மட்டும் காண்போம்.
தமயந்தியின் குணநலன்கள்:
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு பெண்மை குணங்களும், நால்வகைச் சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் அமைச்சர்களாகவும், ஒலி எழுப்பும் சிலம்பே அழகிய முரசமாகவும், கண்களே வேலாகவும், வாளாகவும் கொண்டு, முகமாகிய நிலாவட்டக் குடையின்கீழ் தமயந்தி எனும் பெண்ணரசி ஆளுகிறார் என்கிறார்.
நாற்குணமும் நாற்படையா, ஐம்புலனும் நல்அமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக்குடைக் கீழ்
ஆளுமே பெண்மை அரசு
ஒரு சிறந்த அரசுக்கு நால்வகைச் சேனைகளும், சிறந்த அமைச்சர்களும், உரிய முரசமும், வேல்-வாட்களும், வேண்குடையும் அணிகலன்களாக விளங்கும். அவை போன்று ஒரு சிறந்த பெண்ணிற்கு நாற்குணங்களும், அறிவுடைய ஐம்புலன்களும், ஒலி எழுப்பும் காற்சிலம்பும், அழகிய கூர்மையான கண்களும், முழுமதி போன்ற முகமும் அணிகலன்களாகும் என்பதையும், இவ்வணிகலன்கள் அனைத்தையும் தமயந்தி பெற்றிருந்தாள் என்பதையும் நல்ல உவமை நயத்தோடு சிறப்பாகக் கூறியுள்ளார்.
விதர்ப்ப நாட்டரசன் பெற்றெடுத்த சிறந்த அழகி தமயந்தி. அவளின் அழகினை பலவாறு சிறப்பித்து, சுயம்வரம் மண்டபத்திற்கு அவள் வரும் காட்சியையும் உவமை நயத்துடன் கூறுகிறார்.
தான் ஏற்கெனவே பார்த்த ஓர் இயற்கைக் காட்சி புலவரின் நினைவுக்கு வருகிறது. ஒரு சிறு குளம். அக்குளத்தில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கின்றன. செந்தாமரை மலர்கள், தனது செம்மை நிறத்தை அக்குளம் முழுதும் நிரப்பியுள்ளன. அன்னப்பறவை ஒன்று அக்குளத்தின் அருகே வருகிறது. அவ்வன்னப்பறவை வெண்ணிறத்தை உடையது. செந்நிறமுற்ற அக்குளத்தின் ஊடேயும் அவ்வெண்ணிறப் பறவை மிதந்து வருகிறது. இக்காட்சியைத் தன்மனத்திற்குக் கொண்டு வருகிறார் புகழேந்தியார்.
அன்றாடம் நிகழக்கூடிய காட்சியை உவமையாகக் கூறி, கதை நிகழ்வுகளை விளக்குவது புலவர்களின் புலமையைக் காட்டுவதாகும். அதன்படியே, புகழேந்தியும் தனது நளவெண்பா நூலில் ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
ஓர் ஏழை, ஒரு தனவந்தனிடம் உதவி கேட்பதென்றால், எவ்விதம் அணுகுவான்? அத் தனவந்தனிடம் செல்வம் இருக்கும் சமயம் உதவி கேட்பான். அதுமட்டுமன்றி அச்செல்வன் இரக்கமுடைய மனம் உடையவனா என்பதையும் அறிந்து செல்வான். நல்ல சூழ்நிலையில் இருக்கும் சமயம் சென்று கேட்பான். மேலும், அச்செல்வந்தன் முகமலர்ச்சியுடன் இருக்கும்போதுதான் தனது தேவையை எடுத்துக் கூறுவான். அப்படிக் கேட்டால்தான், அவனுக்குச் செல்வந்தனிடமிருந்து உதவி கிடைக்கும். இதை உவமை ஆக்குகிறார் புகழேந்தி.
தமயந்தி மீதுள்ள தனது காதலை அவளிடம் தெரிவிக்க, நளன் அன்னத்தைத் தூதாக அனுப்புகிறான். தமயந்தியைச் சந்தித்துத் திரும்பிய அன்னத்திடம் தமயந்தியின் மனநிலை குறித்து அறிய நளன் விழைகிறான். தூது சென்ற அன்னம் நளனிடம் திரும்பியது. இக்காட்சியைப் புலவர் குறிப்பிடுகிறார்
முகம் பார்த்து அருள்நோக்கி முன்இரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப்போல மிகும்காதல்
கேளா இருந்திட்டான் அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.
இங்கு செல்வனிடத்துச் சென்று இரஞ்சும் வறியவனை நளனுக்கு உவமையாகவும், கொடுக்கின்ற செல்வந்தனை அன்னத்திற்கு உவமையாகவும் கூறியுள்ளார்.
தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளை விளங்கிக் கொள்ளுமாறு, தெரியப்படுத்துவதுதான் உவமை என்று கூறுவர். அதன்படி பல உவமைகளைப் புலவர் புகழேந்தி தனது நளவெண்பாச் செய்யுட்களில் எடுத்துக் காட்டும் நயம் வியக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

”தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்!” MK Stalin வெளியிட்ட விடியோ | DMK

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

