ஏழில் மூன்று!
பாடலின் ஈற்றில் உள்ள தை, மாசி, பங்குனி என்று வெளிப்படையாக மூன்று மாதப் பெயர்களைக் குறிக்கும்


பெயர் தெரியாத புலவர் ஒருவர் பாடியது இத்தனிப் பாடல்.
""பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு வுரித்ததுவும் சக்கரத்தோன் - ஊணதுவும்
எம்மானை ஏத்துவதும் ஈசனிடத் தும்சிரத்தும்
தைமாசி பங்குனிமா தம்'' (தனி.பா.தொகுதி-1:43)
பாடலின் ஈற்றில் உள்ள தை, மாசி, பங்குனி என்று வெளிப்படையாக மூன்று மாதப் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் பாடலின் உட்பொருளுக்குக்கேற்ப அவை தை, மாசி, இபம், கு, உனி, மாது, அம் என ஏழு சொற்களாகப் பிரித்து ஏழு தனித்தனி பொருளைத் தருவதாகப் பாடப்பட்டுள்ளது.
பாடலின் பொதுப்பொருள்: 1. பாணரிடம் சொல்லப்படுவதும், 2. குளிர்ந்த நீரை மூடுவதும், 3. தாணு எனப்படும் சிவபெருமான் உரித்ததும், 4. திருமாலுக்கு உணவாக இருந்ததும், 5. இறைவனை வணங்குவதும், 6. சிவன் தன் இடப்பாகத்தில் கொண்டதும், 7. சிவன் தன்
தலையில் கொண்டதும், தை, மாசி, பங்குனி மாதப் பொருள்களாகும்.
பாடலின் சிறப்புப் பொருள்
1. பாணர் என்ற சொல் தையல்காரரைக் குறிக்கும். "தை' எனக் கூறியதற்கேற்ப மாதத்தைக் குறிக்கும் அச்சொல் - வினைச் சொல்லாய், தையல்காரரிடம் சொல்லப்படும்போது துணியைத் "தை' என்ற வினைப் பொருள்படும்.
2. மாசி என்ற மாதச் சொல், தூசு என்ற கருத்தில் மாசு என உரைக்கப்படும்போது ஒரு பாத்திரத்தில் மூடப்படாமல் வைக்கப்பட்ட தண்ணீர் தூசி படிந்து காணப்படும்போது மாசால் மூடப்பட்டதாகக் கருதுவதைத்தான் பாடல் "பைம்புனலை மூடுவதும்' என்கிறது.
3. இபம் - யானை (வேள்வியில் வந்த), தாணு - சிவன். சிவன் யானைத் தோலை உரித்துப் போர்த்தியதை, "தாணு வுரித்ததுவும்' என்கிறது.
4. கு என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குப் "பூமி' என்று பொருள். திருமால் கண்ணன் அவதாரத்தில் மண்ணை உண்டு வாய்க்குள் உலகத்தைக் காட்டியதாகப் புராண வரலாறு உண்டு. இதைத்தான் புலவர் பூமியை உண்டதாகக் கூறியுள்ளார்.
5. உனி என்றால் "உன்னி' என்ற சொல்லின் இடைக்குறையாகும். உன்னுதல் என்றால் நினைத்தல் } தியானித்தல். மானத்தை உடையவர் மானி என்பதுபோல உன்னுபவர் உன்னி எனப் பெயர் பெறுவது வினையால் அணையும் சொற்பொருள் விளக்கத்தாலாகும்.
6. மாது - சிவனின் இடப்பாக மாதாகிய உமையம்மையைக் குறிக்கும்.
7. அம் என்றால், தண்ணீராம் கங்கையைக் (சிவன் தலையில்) குறிக்கும்.
ஆக, ""தை மாசி பங்குனி மாதம்'' என்ற சொற்றொடர்
தை + மாசு + இபம் + கு + உனி + மாது + அம் என்னும் ஏழு சொற்பிரிப்பாய் பிரிந்த நிலையில், ஏழு பொருள் உணர்த்தியதால், இத் தனிப்பாடலை ஏழில் மூன்று என்று சுருக்கமாகக் கூறி சொற்பொருள் இன்பம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...