அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -37

இன்று இந்தியர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. சராசரி வாழ்க்கை அறுபத்தைந்து ஆண்டு என்கிறார்கள்.

Updated On :5 டிசம்பர் 2015, 8:25 pm

இன்று இந்தியர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. சராசரி வாழ்க்கை அறுபத்தைந்து ஆண்டு என்கிறார்கள். இதற்குக் காரணம் மருத்துவத்துறையில் நிகழ்ந்துள்ள விரைந்த வளர்ச்சி. பல மருத்துவ முறைகள் இருந்தபோதிலும் தமிழர் கண்ட சித்த மருத்துவம், வேதவழிப்பட்ட ஆயுர்வேத மருத்துவம், ஆங்கில மருத்துவம் ஆகிய மூன்றுமே பெரிதும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் முன்னவை இரண்டும் பக்க விளைவு இல்லாத மருத்துவம் என்பர். இவற்றிற்கு ஆகும் செலவும் மிகக் குறைவு. ஆங்கில மருத்துவம் பக்க விளைவுகளைத் தந்தாலும் நோய்களை விரைந்து போக்கக்கூடியது. நோயைக் கண்டறிவதிலும் அறுவைமுறை மருத்துவத்துறையிலும் அதன் வளர்ச்சி வியப்பளிப்பது. ஆனால், அதிகச் செலவு பிடிப்பது.

அறுவை மருத்துவம் தமிழர் அறிந்த ஒன்றுதான். கம்பரின் இராம காதையில் வீடணன் கும்பகருணனைப் போர்முனையில் சந்தித்து இராவணனிடமிருந்து பிரிந்து இராமனோடு சேர்ந்து வாழுமாறு வேண்டுகிறான். முதன்முதலில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு ஆளை இழுக்க முயற்சி மேற்கொண்டவன் வீடணனே. அவன் கும்பகருணனிடம், உடலில் ஒரு கட்டி ஏற்பட்டது என்றால் அதனை அறுத்துக் குருதியை வெளியேற்றி, அதனை ஒரு மருந்தினால் சுட்டு வேறொரு மருந்தினால் ஆற்றித் துயரம் தீர்வார்கள். அதுபோல நீயும் தீயவனாகிய உன் அண்ணன் இராவணனோடு தொடர்பை அறுத்துக்கொண்டு இராமனைச் சேர்ந்து உயிர் வாழ்தலே உயர்வு என்கிறான்.

கம்பருக்கு முன்னர் வாழ்ந்த குலசேகரப் பெருமாள், மருத்துவன் உடலை வாளால் அறுத்து மருந்தினால் சுட்டாலும் தன் நன்மைக்கே அப்படிச் செய்கிறான் என்று கருதி அவன் மீது அழியாத அன்பு கொள்ளும் நோயாளியைப் போல வித்துவக்கோட்டில் உறையும் பெருமானே, நீ எனக்கு மீளாத் துயரத்தைத் தந்தாலும் உனக்கே ஆளாய் உன் அருளையே எதிர்நோக்கி இருப்பேன் என்கிறார்.

பதிற்றுப்பத்தில் பரணர் பாடியுள்ள நான்காம் பத்து இரண்டாம் பாட்டில் அறுவைமுறை பற்றிய அரிய குறிப்பு காணப்படுகிறது. இக்குறிப்புகள் நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறுவை முறையை அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகளாய் அமைந்த போதிலும் இன்று இத்துறையில் ஆங்கில மருத்துவம் அடைந்திருக்கும் முன்னேற்றம் அவர்கள் அறியாதது என்பது திண்ணம்.

அண்மைக் காலம்வரை இருதயத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு இருதய அறுவை செய்து, பின் மெல்ல மின்சாரத்தால் அதனைத் தூண்டித் துடிக்கச் செய்தார்கள். இன்று இருதயம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அறுவை செய்து உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி இருதயத் துடிப்பில் உள்ள குறைபாட்டை Pace maker என்னும் கருவியை மார்பில் பொருத்திச் சரி செய்கிறார்கள். இதனைத் தமிழில் எவ்வாறு குறிக்கலாம்?

என். ஆர். ஸத்யமூர்த்தி இருதய இயக்கி, இருதய ஊக்கி, துடிப்பு ஊக்கி ஆகிய சொற்களைத் தந்துள்ளார். கா. மு. சிதம்பரம், "துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே' (திருமந்திரம், 2133) என்னும் தொடரை எடுத்துக்காட்டி இருதயத்திற்கு நல்ல தமிழாக்கம் துடியில்லம் என்று குறித்துள்ளார். திருமூலர் இருதயத்தைக் குறிக்கத் தந்த அருமையான தமிழாக்கம் இது. பலரும் அறியாதது. அதனையொட்டித் துடிப்புச்சமனி, துடியூக்கி, துடிப்பூக்கி ஆகிய சொற்களைத் தந்துள்ளார். ப.இரா. இராசஅம்சன் இருதய நலக் கருவி, இருதய நுழை நுண்கருவி, இருதய நன்செயலாக்கு கருவி என்றும்; கோ. மன்றவாணன் நெஞ்சூக்கி, நெஞ்சியக்கி, நெஞ்ச மின்தூண்டி, இருதய முடுக்கி, இருதயத் துடிப்பியக்கி, இருதய மின்தூண்டி என்றும்; சந்திரா மனோகரன் இருதய முடுக்கி, இருதயச் செயல் கருவி, இருதயமியக்கி ஆகிய தமிழாக்கங்களையும் குறித்துள்ளனர். எஸ். சுரேஷ் இருதயச் சீர் ஒலியெழுப்பி என்று அக்கருவியின் பொருள் விளங்கும் வகையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

இவற்றுள் மூன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட தமிழாக்கங்களை விடுத்துச் சுருக்கமாக உள்ள சொற்களைக் கருதலாம். ம்ஹந்ங்ழ் என்னும் சொல்லை உளத்தில் கொண்டு இயக்கி, ஊக்கி, தூண்டி, முடுக்கி என்னும் சொற்களை இணைத்து இருதய இயக்கி போன்ற சொற்களை உருவாக்கியுள்ளனர். அது தேவையில்லை. அதுபோலக் கருவி என்பதையும் விட்டுவிடலாம். இவை இல்லாமலே சொல்லை அமைக்கலாம். இக்கருவி மின்சாரத்தால் இயங்குவது. மன்றவாணன் இதனால்தான் மின்தூண்டி என்று குறித்துள்ளார். திருமூலர் தந்துள்ள சொல் துடி (துடிப்பு) என்பது. அதனை எடுத்துக்கொண்டு அதற்குமுன் மின் என்பதை அமைத்து மின்துடி என்று குறிக்கலாம். மின்சாரத்தால் துடிப்பது என்னும் பொருளைத் தந்து கருவி என்பதனைக் காட்டும். வழங்குவதற்கும் எளிமையாக இருக்கும்.

ஞா. அருண்மொழி மின் நாடி என்னும் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார். நோயாளியின் மணிக்கட்டைப் பிடித்து நாடியின் நடையைக் கொண்டே நோயினைக் கண்டறிவதில் வல்லவர்கள் நாட்டு மருத்துவர்கள். நாடி என்னும் சொல் இருதயத் துடிப்பைக் குறிப்பதாகும். அதனால் மின் நாடி என்றும் குறிக்கலாம்.

Pace maker - மின்துடி அல்லது மின்நாடி

அடுத்த வாரத்திற்குரிய சொல் : Socialite

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.