அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -39

ஒரு நாட்டுக்கு மலைகளும் ஆறுகளும் கடல்களும் அழகையும் வளத்தையும் சேர்க்கின்றன. நம் நாட்டுக்கு இமயமலை, விந்தியமலை, கிழக்கு மேற்குத் தொடர்ச்சிமலைகள் முதலியவை வளம் சேர்க்கின்றன

Updated On :19 டிசம்பர் 2015, 7:32 pm

ஒரு நாட்டுக்கு மலைகளும் ஆறுகளும் கடல்களும் அழகையும் வளத்தையும் சேர்க்கின்றன. நம் நாட்டுக்கு இமயமலை, விந்தியமலை, கிழக்கு மேற்குத் தொடர்ச்சிமலைகள் முதலியவை வளம் சேர்க்கின்றன. கங்கை, கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் நீரூட்டி உயிர்களைக் காத்துவருகின்றன. கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் கடல்கள் பாதுகாப்பு எல்லைகளாக அமைந்திருக்கின்றன. இப்படிப் பயன்படும் மலைகளும் ஆறுகளும் கடல்களும் கடத்தற்கு அரியனவாய் மக்களின் இயக்கத்திற்குத் தடையாய் அமைகின்றன. எப்படிக் கடப்பது என்னும் மலைப்பை உண்டாக்குவதால் "மலை' என்று பெயர் பெற்றதாக அறிஞர்கள் கூறுவார்கள். கடல் கடப்பதற்கு அரியதாய் இருத்தலால்தானே அப்பெயர் பெற்றது!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்தடைகளை மனிதன் கடந்து வென்றுள்ளான். முற்காலத்தில் ஆறுகளைத் தோணிகளில் ஏறிக் கடந்தான். இன்று ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டி எளிதில் பயணம் செய்கிறான். மலைகளைக் குடைந்து வழியமைக்கும் வல்லமையும் பெற்றுள்ளான். தொடர்வண்டிப் பாதை, சாலை, நீர்வழி இவற்றிற்காகப் பல நாடுகளில் மலைகளைக் குடைந்துள்ளார்கள். மனிதனின் திறமை நிலத்தடியில் மட்டுமின்றிக் கடலுக்கு அடியிலும் பாதை அமைத்துத் தொடர்வண்டி இயக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

உலகிலேயே மலையினூடே செல்லும் மிக நீளமான தொடர்வண்டிப் பாதை சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆல்ப்ஸ் மலையினூடே செல்லும் அதற்குக் "கோத்தார்டு பேஸ் டன்னல்' என்பது பெயர். இன்றைய தேதியில் அத்தகைய நீளமான தொடர்வண்டிப் பாதை நிப்பான் நாட்டில் உள்ள செய்கன் டன்னல் ஆகும். நார்வே நாட்டில் "லேர்டல்' என்னும் இடத்தையும் "அவுர்லேண்ட்' என்னும் இடத்தையும் இணைக்கும் சாலையே உலகின் மிக நீளமான மலையூடு செல்லும் சாலை. மலையூடு செல்லும் நீளமான நீர்ப் பாதை அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ளது. அதன் பெயர் "டிலாவர் நீர்ப்பாதை'. மெக்ஸிகோ நகரில் உள்ள டன்னல் எமிசோர் ஓரியட் நீளமான கழிவுநீர்ப்பாதை ஆகும். பிரிட்டனில் உள்ள போல்க்ஸ்டோனையும் பிரான்சில் உள்ள கோகுயில்ஸையும் கடலுக்கடியில் தொடர்வண்டிப் பாதை அமைத்து இணைத்துள்ளார்கள்.

இந்தியாவில் மலையூடு செல்லும் தொடர்வண்டிப் பாதைகள் மகாராட்டிர மாநிலத்தில் பத்தும் காஷ்மீர், கோவா, அஸ்ஸாம், கருநாடகம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஒன்றிரண்டும் உள்ளன. இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பிர் பஞ்சால் ரயில்வே டன்னல் என்னும் மிக நீளமான மலையூடு செல் தொடர்வண்டிப் பாதையும் இமாசலப் பிரதேசத்தில் ரோட்டேங் டன்னல் என்னும் மிக நீளமான நிலத்தடிச் சாலையும் கட்டப்பட்டுவருகின்றன. இந்தியா-இலங்கைக்கிடையே நீரடிப்பாதை அமைக்கப்படும் என்று நடுவண் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இப்படி மலை, நிலம், நீர் வழியாக அமைவது Tunnel. இதற்குத் தக்க தமிழ்ச் சொல் என்ன?

* வெ. ஆனந்த கிருஷ்ணன் - சுரங்கப்பாதை

*ஆசுகவி ஆராவமுதன் - சுருங்கை

* எழில் சோம.பொன்னுசாமி - சுருங்கை, குடைவழி

* எஸ். சுரேஷ் - சுரங்கப்பாதை, குகை

* கே.எம்.டி.முத்துக்குமார் - சுரங்கப் பாதை, மலைகுடைவுப் பாதை

*கோ.மன்றவாணன் - சுருங்கை, குடைபாதை, குகைவழி,

ஊடுபாதை, துளைவழி, குடைதடம்

* கா.மு. சிதம்பரம் - சுருங்கை வழி, குடைவு வழி, தூம்புவழி

* என்.ஆர்.ஸத்யமூர்த்தி - குடைவழி, ஊடுவழி, அகழ்தடம்,

அடிச்சாலை

* உ. இராசமாணிக்கம் - துளைவழி, குகைவழி

* கோ.தமிழரசன் - மறைவு அதர்

இவற்றுள் சுருங்கை மறைவான பாதை; கள்ளப் பாதை; நிலத்தடியில் மட்டிலும் அமைவது. குகை இயற்கையாய் அமைவது. Tunnel கள்ளப் பாதையோ, நிலத்தடியில் மட்டும் அமையும் பாதையோ, இயற்கைப் பாதையோ அன்று. மறைவு அதர் என்பது ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், காலதர் போன்ற இலக்கியப் பகுதிகளை நினைப்பிக்கிறது. எனினும் இதனைக் குறிக்க ஏற்றதாக இல்லை. எஞ்சிய சொற்களில் குடைவழி என்னும் சொல் நிலத்தையும் மலையையும் குடைந்து உண்டாக்கப்படும் வழியைக் காட்டுவதால் ஏற்கத்தக்கது.

பாரதியார் "ரெயில்வே ஸ்தானம்' என்னும் சிறுகதையில் செங்கோட்டைக்கும் திருவனந்தபுரத்துக்குமிடையே மலைகளை உடைத்து ரயில் ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட பாதையை மலைப்புழை என்று குறித்துள்ளார். குறுகலான மலைப்பாதையை அச்சொல்லால் சுட்டுகிறார். புழை என்பதற்குக் குறுகலான வழி என்பதனோடு துளை, குழாய் என்னும் பொருள்களும் உள்ளன. ப.இரா. இராசஅம்சன் குறித்துள்ள ஊடுபுழை என்னும் சொல்லும், சந்திரா மனோகரன் குறித்துள்ள அடிநிலப் புழை என்னும் சொல்லும் பாரதியாரின் அடியொற்றி அமைந்துள்ளன. Tunnel என்பதற்குப் புழை என்பதைத் தக்க சொல்லாகக் கொண்டால், தூம்பு வடிவில் நிலம், நீர், மலை இவற்றினூடே செல்லும் பாதைகளை அச்சொல் சுட்டும். தெளிவு கருதி வேண்டுமானால் அவற்றை முறையே நிலப்புழை, நீர்ப்புழை, மலைப்புழை என்றும் வழங்கலாம்.

Tunnel - புழை அல்லது குடைவழி

அடுத்த வாரத்திற்குரிய சொல் :Petrichor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.