இந்தவாரம் கலாரசிகன்

எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா? முடியும் என்று வாழ்ந்து காட்டுபவர் எழுத்தாளர் மெர்வின். தான் வாழ்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்க்கை சமுதாயத்துக்குப் பயன்படும் விதத்தில் இவர் வாழ்ந்து வருகிறார் என்பதுதான் சிறப்பு.
இந்தவாரம் கலாரசிகன்
Published on
Updated on
3 min read

எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா? முடியும் என்று வாழ்ந்து காட்டுபவர் எழுத்தாளர் மெர்வின். தான் வாழ்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்க்கை சமுதாயத்துக்குப் பயன்படும் விதத்தில் இவர் வாழ்ந்து வருகிறார் என்பதுதான் சிறப்பு. இவரது தன்னம்பிக்கையையும், சுய முன்னேற்ற சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கிறது. சாதனைகள் படைக்கத் தூண்டுதலாக இருந்திருக்கின்றன.

எனக்கும் மெர்வினுக்குமான நட்பு ஏற்பட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் மாம்பலம் ரயில் நிலையத்தில் காலையில் வந்து இறங்குவார் மெர்வின். அவரது கையில் ஒரு கைப்பை இருக்கும். அதில் முந்தைய நாள் இரவில் எழுதிய படைப்புகள் இருக்கும். சொந்தமாகப் புத்தகங்கள் வெளியிடுவதுடன், தி. நகரிலுள்ள சில புத்தகாலயங்களுக்கும் அவர் எழுதிக் கொடுத்து வந்த நேரம் அது.

எங்களுக்குள் நட்பு மலர்ந்தது எப்படி என்பதை இனி பகிர்ந்து கொள்கிறேன். திருத்தணியில் பவானி மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் பி.கே. கேசவராம், கல்லூர் சுப்பையா என்பவரை இயக்குநராக வைத்து "மூக்கணாங்கயிறு' என்கிற திரைப்படத்தைத் தயாரித்து வந்தார். மெர்வின், கதை விவாதத்தில் கலந்துகொள்ள வருவார். மெர்வினின் எழுத்துகளால் கவரப்பட்ட கல்லூர் சுப்பையா அவரை அழைத்திருந்தார். எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது அப்படித்தான்.

எந்தவித பத்திரிகைத் தொடர்பும் இல்லாமல், தன்னுடைய புத்தகங்களை மட்டுமே நம்பி எழுத்தாளராக பவனி வந்து கொண்டிருந்த மெர்வினைப் பார்த்து நான் வியப்படைந்தேன்! படைப்பிலக்கியவாதியாக இல்லாமல், சுய முன்னேற்ற நூல்களை எழுதியும்கூட ஒருவரால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதை முதன் முதலில் மெர்வின் மூலமாகத்தான் நான் உணர்ந்தேன். தனது வழிகாட்டி "அறிவுக்கடல்' அப்துற்றகீம் என்றும், அவரது அடிச்சுவட்டில் பயணிப்பதாகவும் என்னிடம் மெர்வின் கூறியதும் நினைவில் இருக்கிறது.

1970-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தனது எழுத்தின் வலிமையை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மெர்வினின் வாழ்க்கை வியப்புக்குரியது - பாராட்டுக்குரியது. "வாழ்க்கை உன் கைகளிலே' என்கிற அவரது முதல் புத்தகம் 1970-இல் வெளிவந்தது. இதுவரை ஏறத்தாழ அவர் சதம் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் அவரது பேனாவும் இயங்கிக் கொண்டேதான் இருக்கும்.

மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள், தி. நகர் பகுதியில் ஏதோவொரு அலுவலாகச் சென்ற எனக்கு அந்தநாள் ஞாபகம் வந்தது. பாண்டிபஜாரிலுள்ள சாந்தா பவன் உணவு விடுதியில் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை பிறந்தது. ஏன் அப்படி ஆசை பிறந்தது என்று தெரியாது. பழைய சாந்தா பவன் இப்போது பாலாஜி பவனாக மாறியிருந்தது. ஆனாலும் பரவாயில்லை, கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் அங்கே மதிய உணவு சாப்பிடுவது என்று நுழைந்து இருக்கையில் அமர்ந்தேன்.

என்ன ஆச்சரியம், பழைய நண்பர் மெர்வின் நடைபாதையில் சென்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. உடனே ஓடிப்போய் அவரை அழைத்ததும் அவருக்குப் பெருமகிழ்ச்சி. இருவரும் ஒன்றாக உணவு அருந்தி, பழைய நினைவுகளை அசைபோட்டுப் பிரிந்தோம். அவரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் எனக்கு அப்படியொரு ஆசையை ஏற்படுத்தினான் போலும்.

"முயற்சியே முன்னேற்றம்', "வெற்றி உங்களுக்குத்தான்', "உயர்வு தரும் உன்னத சம்பவங்கள்', "காசு இங்கே, இயேசு எங்கே', "உழைப்போம் உயர்வோம்' என்று அவர் எழுதிய புத்தகங்களைப் பட்டியல் இட்டால் நீண்டுகொண்டு போகும். எழுதிக் குவித்திருக்கிறாரே மனிதர்!

மெர்வின் என்றொரு நண்பர் எனக்கு இருக்கிறார் என்பதையும், இப்படியும் ஓர் எழுத்தாளர் நம்மிடையே வாழ்கிறார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் என்கிற எனது நீண்டநாள் எண்ணம் இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. அதற்குக் காரணம் "மெர்வின் நூல்களின் மதிப்பும் மாண்பும்' என்கிற மதிப்புரைக்கு வந்திருக்கும் சிறு நூல். இனிய நண்பர் மெர்வினுக்கு எனது இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்!

சங்க கால சமுதாயத்தில் மகளிரின் நிலை எப்படிப்பட்டது? அவர்கள் இன்றைய மகளிர் போல சுதந்திரமாகச் சிந்தித்து, செயல்பட முடிந்ததா இல்லை குடும்பத்தைப் பேணும் பெண்டிராக மட்டுமே இருந்தார்களா? இத்தகைய கேள்விகளுக்குப் பலரும் பல கோணங்களில் விடையிறுக்கிறார்கள். சங்க காலப் பெண்டிரின் நிலை மிகவும் அடிமைத்தனமாக இருந்தது என்று வாதிப்பவர்களும் உண்டு, இல்லை இல்லை, அவர்கள்தான் அன்றைய சமுதாயத்தையே பின்னிருந்து இயக்கியவர்கள் என்று கூறுபவர்களும் உண்டு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர். க. திலகவதி, சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல, வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி என்று அனைத்திலுமே ஆழங்காற்பட்ட புலமையுடையவர். அற்புதமான மேடைப் பேச்சாளரும் கூட. கடந்த மார்ச் மாதம் தஞ்சை பூண்டி கல்லூரி நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது அவர் எழுதிய "சங்க கால மகளிர் வாழ்வியல்' என்கிற புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.

ஆறு பகுதிகளைக் கொண்ட அந்த நூலில், சங்க காலத்தில் மகளிர் வாழ்ந்த சமுதாயச் சூழல், இல்லறத்தில் மகளிர் பங்கு, கல்வி, கலை, விளையாட்டுத் தொழிற் வகுப்புக்கள், வாழ்க்கை மரபுகள், அவர்களது ஆடை அணிகலன்கள் ஆகியவை அலசப்பட்டிருக்கின்றன. "சங்க கால மகளிரும் பிற்கால மகளிரும்' என்கிற இறுதிப் பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு முனைவர் திலகவதி ஓர் ஆய்வு செய்யலாம் என்பது எனது பரிந்துரை. அப்படி ஒரு புத்தகம் இன்றைய காலக்கட்டாயம்.

சங்க கால மகளிர் வாழ்வியல் பற்றி மட்டுமல்ல, பொதுவாக சங்க இலக்கியம் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும் புத்தகமாக இது அமைந்திருக்கிறது.

கவிஞர் குமர விருச்சிகன் என்கிற முனைவர் ஆ. குமாரவேல், நாமக்கல் கால்நடை மருத்துவப் பல்கலைக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் பேராசிரியர். இவர் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு ""முட்புதரும் பேனாக் கத்தியும்'. அதிலிருந்து ஒரு சின்னக் கவிதை-

நான் அப்பாவாகிய பின்

எனக்கு அன்பு அதிகமானது.

குழந்தை மீதல்ல, என்

அப்பாவின் மீது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com