காளமேகப் புலவரின் மொழித்திறன் அமைந்த பாடல்கள் பாராட்டுக்குரியன. மெய்யெழுத்துகளில் வல்லினம் (க,ச,ட,த,ப,ற), மெல்லினம் (ஞ,ங,ண,ந,ம,ன), இடையினம் (ய,ர,ல,வ,ழ,ள) என்பன வரையறுக்கப்பட்டுள்ளன. மூவினங்களையும் வைத்துத் தனித்தனியே இப்புலவர் பாடியுள்ள பாங்கு குறிக்கத்தக்கது.
வல்லினம் அமையப் பாடியது
""துடித்துத் துடித்துத் துடுப்பெடுத்த கோடல்
தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் -
பொடித்துத்
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிப டைத்துக் காட்டிற்றுக் காடு''
இப்பாடலில் கார்காலம் வருணிக்கப்படுகிறது. அதாவது, தான் பார்க்கும் அக்காடு, அம்மழைத் தருணத்தில் ஒரு மணப்பந்தலின் தன்மையைப் பெற்றுவிட்டதாகப் பாடியுள்ளார்.
மின்னல் மின்னியதுபோல் ஒளியுடன் காந்தள் என்னும் மலர்கள் அரும்புகளாகிய துடுப்புகளை ஏந்தின. கொன்றை அரும்புகள் பொன் மாலைகள் போலத் தொங்கின. வளையணிந்த தோள்கள் அழகாகச் சிலிர்த்துத் துடிதுடிப்பனபோல மூங்கில்கள் சாய்ந்தாடின. மயிலினம், திருமணப் பந்தலில் நடனமாடும் நடனமாதர் போலக் கூத்தாடத் தொடங்கியது. தனக்குத்தானே மணம் செய்து கொண்டதுபோல, அதாவது மணப்பந்தல் போன்று, தான் பார்த்து ரசித்த அந்தக் காடு காட்சியளித்ததாகப் பாடியுள்ளார். இப்பாடலில் "ல்' என்ற இடையெழுத்தும், "ன்' என்ற மெல்லெழுத்தும் தவிரப் பிற அனைத்தும் வல்லெழுத்துகளே!
மெல்லினம் அமையப் பாடியது
""மானமே நண்ணா மனமென மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணும் - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்''
பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் பெண்ணோடு தொடர்புடைய "மனம்' குறித்துப் பாடப்பட்ட இப்பாடல், மெல்லின எழுத்துகளாலேயே யாக்கப்பட்டுள்ளது.
ஓர் அழகிய பெண்ணைப் பார்த்துவிட்ட ஓர் ஆடவனின் மனம் பட்ட பாட்டைக் காளமேகம் அழகாக விவரிக்கிறார். அந்த ஆடவன் கூறுகிறான், ""அரசனே! ஒப்பற்ற மணிபோலும் மான்போலும் மங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் அணிந்துள்ள நகைகள் மின்னல்போல் ஒளிவிட, என்முன்னே வருகிறாள். என் மனம் பெரிய யானையைப்போல வலிமை உடையது என்றாலும், இந்தப் பேரழகியை எதிரில் கண்டதும் அது வெட்கித் தாழ்ந்துவிடுகிறது. மானம் போற்றத் தவறும் இந்த மனத்தின் இயல்புதான் என்ன?'' என்று கூறி வியக்கிறான்.
இப்பாடலுக்கு இருபொருள் உண்டு. யானையைக் கண்டால் மான் மருளும். ஆனால், மான்போன்ற சாயலுடைய பெண்ணைக்கண்டு யானையைப் போன்ற வலிய மனம் படைத்த இளைஞனும் தடுமாறுகிறான் என்பது ஒரு பொருள். மற்றொரு பொருளோ, மின்னலையும் தோற்கடிக்கும் அழகுடையவள், மானின் சாயலுடைய இந்தப் பெண். இவள், என் நெஞ்சம் மானத்தைப் பறிகொடுக்கிறது என்று கூறி வெட்கப்படுகிறாள். எனவே, யானைப் படையை உடைய அரசனே! இவளைக் காத்தல் வேண்டும் என்பதாகும்.
இடையினம் அமையப் பாடியது:
""விரவலராய் வாழ்வாரை வெல்ல லொழிவா(ய்!)
யிரவு லவா வேலை யொலியே - வரவொழிவா(ய்!)
யாயர்வா யே யரிவை யாருயிரை யீராவோ?
யாயர்வாய் வேயோ யழல்''
இப்பாடலில், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தலைவன் தனதருகில் இல்லாததால் மிகவும் வருந்துகிறாள் தலைவி. அதுவோ இரவு நேரம். ஏற்கெனவே இடை வருந்த நடக்கும் பெண்களின் இடை, தலைவனைப் பிரிந்த துன்பத்தால் மேலும் மெலியுமே என்ற கருத்தில் இடையின எழுத்துகளைக் கையாண்டிருப்பது சிறப்பானது.
ஓயாமல் அலை வீசிக்கொண்டிருக்கும் கடலைப் பார்த்துக் கேட்கிறாள் தலைவி: ""கடலோசையே! என்னைப் போன்று, தமது தலைவனைப் பிரிந்து தனியாக வாடிக்கொண்டிருக்கும் பெண்களை உனது ஓயாத ஓசையால் துன்புறுத்துகிறாய். இச் செயலைச் செய்யாதே. ஏற்கெனவே எனது தாயின் கண்டிப்புடனான பேச்சுகள் எனது உயிரைப் பொடிப்பொடியாக்கியுள்ளன. இது போதாதென்று எங்கிருந்தோ வரும் ஆயர் ஊதும் புல்லாங்குழலின் ஒலியும் என் உயிரைச் சுட்டு வருத்துகிறது'' என்கிறாள்.
"காடு' பற்றிப்பாட வல்லின எழுத்துகளையும், "மனம்' குறித்துப்பாட மெல்லின எழுத்துகளையும், மெல்லிய "இடையாள்' பற்றிப் பேச இடையின எழுத்துகளையும் வைத்துப் பாடியிருப்பது, காளமேகப் புலவரின் கவித்திறனையும், மொழித்திறனையும் எண்ணியெண்ணி மகிழச் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


