கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்த வார கலாரசிகன்

சங்ககாலப் புலவர் பெருமக்கள் பலர் வேம்பத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

Updated On :

சங்ககாலப் புலவர் பெருமக்கள் பலர் வேம்பத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. பழைய திருவிளையாடற்புராணம் இயற்றிய பெரும்புலவர் வேம்பத்தூர் நம்பி, புலவர் வேம்பத்தூர் குமரனார், செளந்தர்யலஹரி இயற்றிய கவிராஜ பண்டிதர் என்று வேம்பத்தூருடன் தொடர்புடைய புலவர் பெருமக்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒளவைப் பிராட்டிக்குக் கோட்டம் அமைக்க வேண்டும் என்பதைத் தனது வாழ்நாள் கனவாகச் சுமந்து கொண்டிருக்கும் "சுடர்மணிக் கவிஞர்' வேம்பத்தூர் கிருஷ்ணனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

திரைத்துறையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அனுபவமும், உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவமும் இருந்தும்கூட, வேம்பத்தூர் கிருஷ்ணனின் நினைவும், செயலும் "ஒளவை' என்கிற இரண்டெழுத்துத் தமிழ் மூதாட்டி பற்றியதாக மட்டுமே இருந்து வருகிறது.

""நாங்கள் இந்திய தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமேயன்றி, ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒருப்பட மாட்டோம்'' என்று மெக்காலே என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்கிறார். அதுபோல, "தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களேயாயின், மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை, அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக் கொள்ளவல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்'' என்பான் மகாகவி பாரதி.

பாரதியைப் போலவே ஒளவைப் பிராட்டியின்பால் அபரிமிதமான பக்தியும், ஈர்ப்பும் கொண்டு ஒளவைப் பிராட்டியார் எழுதிய அத்தனை நூல்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் வேம்பத்தூர் கிருஷ்ணன். ஒளவையின் நூல்களைத் தொகுத்ததுடன் நின்றுவிடவில்லை அவர். ஒளவைப் பிராட்டியார் பற்றிய செய்திகள், அவரைப் பற்றிப் பிற பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துகள், கட்டுரைகள் என்று ஒன்றுவிடாமல் தொகுத்து "ஒளவைத் தமிழ்க் களஞ்சியம் 2015' என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறார் அவர்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை தமிழால் ஒருங்கிணைத்து, அவர்களுக்குள் இருந்த பகையை நீக்கி ஒளவைப் பிராட்டி இணைத்த இடம் குமரி மாவட்டத்திலுள்ள "முப்பந்தல்' என்கிற இடம். அந்தத் திருத்தலத்தில் கடந்த 27.1.2015 அன்று வேம்பத்தூர் கிருஷ்ணன் தொகுத்திருக்கும் "ஒளவைத் தமிழ்க் களஞ்சியம்' வெளியிடப்பட்டிருக்கிறது.

மழலையர் பள்ளிகளில் ஒளவைப் பிராட்டியின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய நான்கு நூல்களும் கட்டாயம் பாடமாகக் கற்றுத்தரப்பட வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டாலே போதும், வருங்காலச் சந்ததியினருக்கு நாம் தமிழை மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டையும் காப்பாற்றித் தந்து விடுவோம்.

இல்லந்தோறும் ஒளவையைக் கொண்டு செல்லும் பணியில் தமிழ்ச் சமுதாயம் முனைப்புக் காட்டுவதுதான் வேம்பத்தூர் கிருஷ்ணன் போன்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

------------------------------------------

சமீப காலமாக வியப்புடன் பேசப்படும் செய்தி, சோமாலிய நாட்டின் கடற்கொள்ளை. உலக நாடுகள் இந்த அளவுக்கு முன்னேறிய பிறகும் கடற்கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது பலராலும் நம்பவே முடியாத நிகழ்வு. திரைப்படங்களில் மட்டுமே கடற்கொள்ளையர்கள் பற்றிப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் பற்றிய செய்தியும், செயல்பாடும் நம்பவே முடியாத அதிசயங்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிகவும் பலம் பொருந்தியவர்களாகி இருக்கின்றனர். மிகப்பெரிய கப்பல்களின் மீதுகூடத் தாக்குதல்களை நடத்திக் கைப்பற்றும் அளவுக்கு அவர்களிடம் நவீன ரக ஆயுதங்கள் இருக்கின்றன. செமி ஆட்டோமாடிக் பிஸ்டல்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மட்டுமல்ல, ஜி.பி.எஸ். கருவிகளும்கூட இருக்கின்றன. நான்கு பிரிவுகளில் செயல்படும் கடற்கொள்ளையர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் நாட்டைப் பாதுகாக்கும் பணியிலும் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறிக் கொள்வதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 1990 முதல் பல ஐரோப்பிய நாடுகள், தங்களது நாட்டு அணு உலைகளின் கதிர்வீச்சு மற்றும் ரசாயனக் கழிவுகளை சோமாலிய பகுதியிலுள்ள கடற்பகுதியில்தான் கொட்டி வந்தனர். சுனாமியின்போது கடலிலிருந்து வெளிவந்த குப்பைகளில், பல சர்வதேச நாடுகளிலிருந்து கொட்டப்பட்ட கதிர்வீச்சு மற்றும் ரசாயனக் குப்பைகள் கரையில் ஒதுங்கி, இது வெட்ட வெளிச்சமானது. இந்தக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கடலோரத்தில் வாழும் மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

சோமாலிய கடற்கரையில் கொள்ளையர்களின் நடமாட்டத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் அணுஉலைக் குப்பைகள் கொட்டுவது முற்றிலுமாக நின்றுவிட்டது. இப்போது வேறு எந்த அப்பாவி நாடு மாட்டிக் கொண்டிருக்கிறதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பா. முருகானந்தம் எழுதிய "கடற்கொள்ளையர்கள்' என்கிற புத்தகம் இதுபோன்ற பல சுவாரஸ்யமான, அதே நேரத்தில் உபயோகமான தகவல்களைத் தருகிறது. 39 பிரபல கடற்கொள்ளைக்காரர்கள் பற்றிய விவரங்கள் பிரமிப்பூட்டும் ருசிகரமான தகவல்கள். கடற்கொள்ளை பற்றிய அத்தனை விவரங்களையும் தொகுத்தளித்திருக்கிறார் பா. முருகானந்தம்.

------------------------------------------------

வளவ. துரையனைப் பொறுப்பாசிரியராகவும், முனைவர் ந. பாஸ்கரனைத் துணையாசிரியராகவும் கொண்டு நடத்தப்படும் தனிச்சுற்றுக்கு மட்டுமான "சங்கு' மாத இதழில், கடந்த மாத இதழில் வெளிவந்த கவிதை இது. "வரலாறு' என்கிற தலைப்பில் கவிஞர் தேவதேவன் எழுதிய இந்தக் கவிதை வெளிப்படுத்தும் உண்மை நிஜமாகவே சுடுகிறது!

எத்துணை பெரிய வெட்கக் கேடு

இன்னும் மனிதன்

மனிதனிடமிருந்தே வரும் கொடுமைகளிலிருந்து

தப்பித்துக் கொண்டே வருவது

இயற்கையின் கருணையினால் மாத்திரமே என்பது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.