அயர்லாந்தில் டங்கனன் என்னும் இடத்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் என்னும் சகோதரி நிவேதிதாவும் அல்பேனியாவில் ஸ்கோப்ஜே என்னும் ஊரில் பிறந்த கொன்சா அக்னஸ் என்னும் அன்னை தெரசாவும் இந்தியாவில் பெருஞ்சிறப்போடு வாழ்ந்ததுபோல ஆங்கிலத்தில் பிறந்த சில சொற்கள் தமிழில் செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆங்கிலம் அறியாத எளிய மக்களும் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தி வருகின்றனர். Cycle, Bus, Villain போன்றவை அத்தகைய சொற்களில் சில. இச்சொற்களில் Villain என்பது கூடுதல் ஆற்றல் பெற்றது. அதற்கு ஆங்கிலத்தில் பெண்பாற்சொல் இல்லை. ஆனால், தமிழில் பெண்பாற் சொல்லும் உருவாகியுள்ளது. திரைப்படத்தில் வரும் தலைவனையும் தலைவியையும் ஹிரோ, ஹிரோயின் என்பது போலக் கொடியவனையும் கொடியவளையும் "வில்லன்', "வில்லி' என்று குறிக்கின்றனர்.
தமிழில் வில்லன், வில்லி என்னும் சொற்கள் உண்டு. ஆனால், அவை குறிக்கும் பொருள் வேறு. இரண்டனுக்கும் ஒரேபொருள்தான். கலித்தொகையில் தலைமகளிடம் பேசும் தோழி, "தொடைமாண்ட கண்ணியன் வில்லன் வரும்' (குறிஞ்சி.1) என்று தலைமகனைக் குறிப்பிடுகிறாள். உலாவரும் இராமனிடம் நெஞ்சைப் பறிகொடுத்த ஒருத்தி, இராமனின் முன்னே தன்னைக் கொல்கின்ற மன்மதனின் வலியவர் யார் என்று வினவித் தவிக்கிறாள். இதனைக் கம்பர், "கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற மாரவேளின் வலியவர் யார்?' என்று குறிக்கிறார். இங்கெல்லாம் அச்சொற்கள் வில்லை ஏந்தியவன் என்னும் பொருளையே தருகின்றன.
Villain என்னும் சொல் புதினம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் தன் தீய எண்ணங்களாலும், கொடிய செயல்களாலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் பாத்திரத்தைக் குறிக்கிறது. கதைகளில் வரும் முதன்மையான நல்ல பாத்திரம் தலைவன் என்றால், முதன்மையான தீய பாத்திரம் இவன் ஆவான். இவனும் தலைவன் போலவே கதை முழுவதும் நிறைந்திருப்பான். பாரதத்தில் துரியோதனனும் கல்கியின் "சிவகாமியின் சபத'த்தில் வரும் நாகநந்தியும் மனோன்மணீயத்தில் வரும் குடிலனும் கதைத்தலைவனுக்கு நிகரான இடத்தைப் பெற்றிருப்பதால் இச்சொல்லால் குறித்தற்குரியவர்கள். மிலிடன் இழந்த சொர்க்கத்தில் சாத்தானுக்கும், சேக்ஸ்பியர் ஒதெல்லோ நாடகத்தில் இயாகோவுக்கும் தலைமைப் பாத்திரத்தினும் அதிக இடம் கொடுத்திருப்பதாகத் திறனாய்வாளர்கள் கூறுவர். கம்பர், இராமனைப் பாடிய அளவிற்கு இராவணனையும் பாடியுள்ளார். அதனால் ஓரிரு காட்சிகளில் வருபவனை இச்சொல்லால் குறிக்க முடியாது. கோவலன் கொலைக்குக் காரணமாக அமைந்த பொற்கொல்லன் சிலப்பில் ஒரு காதையில் மட்டுமே வருகிறான். அவனைக் குறித்து மூன்று தொடர்களே உள்ளன. அவனைக் கொடியவன் என்று கூறலாமே தவிர Villain என்று கூற இயலாது.
இத்தகைய வலிமையான பாத்திரத்தைக் குறிக்கத் திட்டமான தமிழ்ச்சொல் இன்னும் உருவாகவில்லை எனலாம். தமிழ் அகரமுதலிகள் வில்லன், பாவி, போக்கிலி, முக்கியப் பகைவன் போன்ற சொற்களைத் தெரிவித்துள்ளன. முன்னைய அறிஞர் சிலர் தீக்குணன் என்றும், எதிர்தட்டுத் தலைவன் என்றும் குறித்துள்ளனர். எஸ். சுரேஷ் வில்லன், வில்லவன், முரடன் என்றும் குறிக்கலாம் என்கிறார். சி. இராமச்சந்திரன், வெ. ஆனந்த கிருஷ்ணன், ச. கிருஷ்ணசாமி, என்.ஆர். ஸத்யமூர்த்தி ஆகியோர் பகைவன், தீயன், கொடூரன், கொடியன், வஞ்சகன், கயவன், கீழ்மகன் இவற்றுள் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர். சந்திரா மனோகரன், குரூரன்; அ. கருப்பையா எதிர்ப்பாளன்; கோ. மன்றவாணன் எதிராளி, எதிர்நாயகன், பண்பிலி; அ. புவனா அங்குராஜ் எதிரவன், எதிராளன் என்றும் தமிழாக்கம் செய்யலாம் என்று கருதுகின்றனர். ப.இரா. இராசஅம்சன் முரணாளி, சோரன், அநாயகன் ஆகிய சொற்களைக் குறித்துள்ளார். படிறன், பண்புப் பகைவன், அறங்கொல்லி என்பவை கா.மு. சிதம்பரம் பரிந்துரைத்துள்ள சொற்கள். தி. அன்பழகன் வம்பன் என்னும் சொல்லைக் குறித்துள்ளார்.
என். சுரேஷ் "வில்லன் என்பது தமிழ் வழக்குப்போல் இருத்தலின் அதனையே ஆளலாம் என்கிறார். அதனை ஏற்றுக்கொண்டால் இலக்கியங்களில் வரும் வில்லேந்தியவன் என்பதனோடு மாறுபட்டுக் குழப்பத்தை விளைவிக்கும். சேரர்கள் தங்களுக்குரிய அடையாளமாக வில்லைக் கொண்டிருந்தமையால் வில்லவன் என்பது சேரமன்னனைக் குறிக்கும் பெயராகும். சோரன், அநாயகன், குரூரன் என்பவை வடசொற்கள். முரடன் பண்படாதவன் என்றும், எதிராளி எதிரவன், எதிராளன், ஆகிய சொற்கள் எதிராக இருப்பவன் என்றும் பொருள்படும். முரடனும் பகைவனும் எதிராளியும் நேர்மையானவராகவும் இருக்கலாம். ஆகையால் இத்தன்மை யுடையவரை எல்லாம் Villain என்று முத்திரை குத்திவிட முடியாது. முரடன், பகைவன், தீயன், வஞ்சகன், கயவன், போக்கிலி, பண்பிலி, படிறன், வம்பன் இவற்றின் மொத்த உருவம் Villain ஆவான். அறங்கொல்லி என்பது எளியவர்க்குப் புரியாது. கொடுமையே அவன் முதன்மைக் குணம். ஆதலின் கொடியவன் எனலாம்.
தலைவன் என்பதை நிகர்த்த சமன்பாடுடைய ஒரு சொல்லை உருவாக்கினால் சிறப்பாக அமையும். இக்கொடியவனின் முதன்மை நோக்கம் தலைவனுக்குத் துன்பம் தருவதாகும். "உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்றன வெறுப்பின் வந்த வெகுளி நான்கே' என்னும் நூற்பாவில் வருத்துதல் என்று பொருள்படும் அலை என்னும் ஒரு சொல்லைத் தொல்காப்பியம் குறிக்கிறது. "நாளும் அலை (கேடு) வாராமல் நாயேனைச் சற்குருவா ஆளுமலை அண்ணா மலை' என்பது குருநமச்சிவாயர் வாக்கு. இதனையொட்டித் தலைவனுக்கு எதிரானவனை அலைவன் என்று கூறலாம். அது பிறர்க்குத் துன்பந்தந்து அலைக்கழிப்பவன் என்று பொருள்படும். புதிய சொல்லாக்கந்தான். திரும்பத் திரும்ப ஆண்டால் இயல்பாகிவிடும். முயன்று பார்க்கலாமே!
Villain - கொடியவன் அல்லது அலைவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

