"தமிழ்' காட்டும் உணர்வு!

"தமிழ்' என்ற சொல்லின் பொருள் அடியாகவும், அதையொட்டிப் பிறந்த சொற்கள் அடியாகவும் புலப்படும் உணர்வு அறியத் தகுந்தது.
"தமிழ்' காட்டும் உணர்வு!

"தமிழ்' என்ற சொல்லின் பொருள் அடியாகவும், அதையொட்டிப் பிறந்த சொற்கள் அடியாகவும் புலப்படும் உணர்வு அறியத் தகுந்தது.

"தமிழ்' என்ற சொல் மொழி, நாடு, மக்கள் என்ற மூன்று பொருள்களில் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை "தமிழ் நூல்களில் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு' என்ற நூலில் கிருஷ்ணன் என்பவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

மொழி - தமிழ்கெழு கூடல் (புறநா.58:73); நற்றமிழ் - முழுதறிதல் (புறநா.50:10)

நாடு - தண்டமிழ்க் கிழவர் (புறநா.35:3); தண்டமிழ்ப் பொதுவெனப் பொறா அன்(புறநா.51:5); தமிழ் கெழு மூவர் (அகநா.31:14)

மக்கள் - தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் (புறநா.19:2); கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறிந்து (பதிற்று.63:9)

இவற்றிற்கு மேலாக சங்க இலக்கியங்களில் பகுபதமாகவும் (தமிழகம்-புறநா.168:18), தொடர்மொழியாகவும் (தண்டமிழ் வரைப்பகம் - புறநா.198:12), தமிழ் நாட்டகம்- பரிபாடல் திரட்டு.8), நாட்டைக் குறிப்பதற்கும் மக்களைக் குறிப்பதற்கும் (தண்டமிழ்க் குடிகள்- பரிபா.1), தமிழ் அடியாகப் பிறந்த சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் குறிப்பாக, மூவர் தேவாரத்தில் "தமிழ்' என்ற சொல் மொழியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட ""தமிழ் சொல்லும் வட சொல்லும் தாள் நிழல் சேர'' (ஞானசம்பந்தர்-77.4.3), ""முத்தமிழும் நான்மறையும்''(அப்பர்-23.9.1), மக்களைக் குறிக்க இன்னொரு பகுபதச்சொல் தமிழன் ""ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' (அப்பர்- 23.5.1) பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காணலாம். இவற்றின் உள்கிடை என்ன?

பரிபாடலில் (9.25) ""தள்ளாப் பொருள் ஆய்வின் தண்டமிழ் ஆய்வந்தில்லார்'' (9.26) என்று தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தையும், குறிப்பாக அக இலக்கியத்தையும் குறிப்பதற்குக் கையாளப்பட்டுள்ளது மொழி என்ற பொருளின் வளர்ச்சியாகக் கொள்ளலாம்.

இங்கு பலபொருள் ஒரு மொழியாக இருந்த சொல்லை, மொழி என்னும் பொருளை மட்டும் குறிக்கத் தக்கவைத்துக்கொண்டு பிற இரண்டு பொருள்களையும் சுட்ட ஆக்கச் சொற்களோ அல்லது தொகைச் சொற்களோ உண்டாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. இதன் உள்கிடை என்ன?

தென்னகத்து பிறமொழிகைளைப் பொருத்தவரையில் மொழியையும் நாட்டையும் குறிக்கப் பயன்பட்டச் சொல்லை நாட்டைக் குறிக்கவும், வேறு தனிச் சொல்லை மொழியைக் குறிக்கவும் ஆக்கிக்கொண்டதைக் காணமுடிகிறது. "ஆந்திரா' என்பது மொழியையும் நாட்டையும் குறித்தது. பின்னர், நாட்டுக்கே ஆகி, மொழியைக் குறிக்கத் "தெலுங்கு' என்ற சொல் அமைத்துக் கொள்ளப்பட்டது. அப்படியே கருநாடகம் -கன்னடம்; கேரளம் - மலையாளம். இங்கெல்லாம் பொதுச்சொல்லை நாட்டைக் குறிக்க தக்கவைத்துக் கொண்டு, மொழியைக் குறிக்கப் புதிய சொல் உண்டாக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழில் பொதுச் சொல்லை மொழியைக் குறிக்க தக்கவைத்துக் கொண்டு, நாட்டையும், மக்களையும் குறிக்க ஆக்கச்சொற்கள் அதாவது, தொகைச்சொற்கள் உண்டாக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

புதிய சொல் புதிய பொருளை உணர்த்தவே பயன்படும் என்ற உண்மையையொட்டிப் பார்க்கும்போது தமிழகத்தில் மொழி உணர்வு முதலில் தோன்றி, நாட்டுணர்வும் மக்களுணர்வும் பிற்காலத்திலேயே ஏற்பட, பிறமொழிகளில் மொழியுணர்வு பிற்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ள வேண்டியதாகிறது.

 ஒரு நாட்டினத்தை, நாட்டை அறிமுகப்படுத்துவதற்கு மொழியையே சிறப்புக் குறியீடாகப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது என்று கிருஷ்ணன் விளக்கியுள்ளதாலும் இந்தக் கருத்து உறுதியாகிறது.

சங்ககாலத்தில் தமிழ் என்பது இலக்கியத்தையும், குறிப்பாக அக இலக்கியத்தையும் குறித்தது என்பது மேலே குறிப்பிடப்பட்டது. உண்மையில் பரிபாடல்,

""நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது

காதற் காமம் காமத்தில் சிறந்தது .....

தள்ளாப் பொருள் ஆய்வின் தண்டமிழ்

ஆய்வந்தில்லார்

கொள்ளார் இக்குன்று பயன்'' (9.11-15, 25-6)

என்று வேதம், வேதத்தோடு சமயச்சடங்குகள் போன்று ஆரிய வாழ்க்கையை எதிர்த்துத் தமிழையும், தமிழிலக்கியத்தையும் சிறப்பித்துக் கூறும் முயற்சியின் விளைவோ இது என்று கருதவேண்டியிருக்கிறது. அதேசமயத்தில் தங்களின் தனித் தன்மையைக் குறிக்க மொழிப்பெயரைப் பயன்படுத்தியதும் கவனிக்கத் தகுந்தது.

-செ.வை.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com