பண்டைக் காலந்தொட்டுப் பாரதத் திருநாடெங்கும் பரவி நிலைப்பெற்றுள்ள இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள் எனப்படும். பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் "அர்ச்சுனன் தபசு' திறந்தவெளி சிற்பத் தொகுதியில் மகாபாரதத்தில் இடம்பெறும் சிவபெருமானிடம் அர்ச்சுனன் பாசுபதம் பெறும் காட்சியும், பொய்த்தவப் பூனையின் கதையும் இடம்பெற்றுள்ளன.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட புள்ளமங்கை பசுபதீசுவரர் கோயிலில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்களில் பாரதம், இராமாயணம் தொடர்பான சிற்பங்கள் கும்பகோணம், மதுரை, தாரமங்கலம், திருநெல்வேலி, திருவில்லிபுத்தூர், தென்காசி, கிருட்டிணாபுரம், சுசீந்திரம், தர்மபுரி ஆகிய திருக்கோயில்களில் காணப்படுகின்றன.
திருக்கோயில்களில் மகாபாரதம், இராமாயணம் வாசிப்பவருக்கும் விரிவுரை செய்வோருக்கும் ஊர்ச் சபையினர் இறையிலி நிலம் அளித்துள்ளனர். இது பாரதப் பங்கு, பாரதப் புறம், பாரத விருத்தி, மகாபாரத விருத்தி என்று கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தில் பாரத மண்டபம் ஏற்படுத்தியதும், அவற்றில் பாரதம் படிப்போருக்கு மானியம் அளிக்கப்பட்டதையும் கூரம் செப்பேடு கூறுகிறது. செந்தலைக் கல்வெட்டில் ""ஸ்ரீபாரதம் வாசிக்க பெரும்புலியூர் ஆத்ரையகோத்ரத்து வைகாநஸ ஸýத்ரத்து ஸிங்கி நசிஸ்வர பட்டனுக்கு இறையிலியாக குடுத்ததோம் ஸபையோம்'' என்ற வாசகம் காணப்படுகிறது.
திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு ""திருத்தங்கலூரன் முன்பு மகாபாரதம், இராமாயணம் வாசிப்பதற்காகத் திருவரங்கதேவன் குன்றெடுத்தானும் அவன் தம்பி திருவரங்கதேவன் உய்யக் கொண்டாழ்வானும் இணைந்து மூன்றரை மா நிலம் தானம்'' செய்துள்ளதைக் கூறுகிறது. பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோயிலில் உள்ள முதலாம் இராசராசன் காலத்திய கல்வெட்டு பாரதம், இராமாயணம் வாசிப்பிற்கு விருத்தியாக விடப்பட்ட நிலம் பற்றிக்கூறுகிறது.
இக்கோயிலில் உள்ள சதாசிவதேவமகாராயர் கல்வெட்டு, ""இறைவனுக்குத் திருப்போனக வகைக்கும் பாசியம் படிப்பதற்கும் விட்டலதேவ மகாராயரின் காரியகர்த்தர் இமைப்பநாயக்கர் அய்யன் என்பவன் நிலதானம்'' வழங்கியதைக் குறிப்பிடுகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் கோயில் முன்புறமுள்ள பாறையில் உள்ள கல்வெட்டு, ""ஸ்ரீநட்டாலத்து ஆழ்வார்கோயிலில் மகாபாரதம் வாசிப்பதற்குக் கண்ணன் என்பவர் நிலக்கொடை வழங்கியுள்ளார்'' என்கிறது.
திருபுவனை வரதராசப் பெருமாள் கோயிலில் உள்ள முதலாம் இராசாதிராச சோழன் கல்வெட்டில் ஓதுவோர், ஓதுவிப்போர், கேட்பிப்போர் எனப் பலர்க்கும் நெல் வழங்கப்பட்டுள்ளன. இதில் இருக்கு, யஜுர், சாம வேதங்களும் சத்யா ஜாதம், வாஜஸ்நேயம் போன்ற வேதப் பிரிவுகள் ஓதப்பட்டதையும் "ரூபாவதாரம்' எனும் இலக்கண நூல் கேட்கப்பட்டதையும் இராமாயணம், மகாபாரதம் வாசிக்கப்பட்டதையும் காணமுடிகிறது. பாரதமும் ஸ்ரீராமாயணமும் வாசிப்பான் ஒருவனுக்கு நெல் ஒரு தூணிக் குறுணியும் ஸ்ரீமனுசாத்திரங் கேட்பிப்பான் ஒருவனுக்கு நெல் தூணியும் வழக்கப்பட்டுள்ளது. புள்ளளூர் கயிலாசநாதர் கோயிலில் பாரதம், இராமாயணம், பிற புராணங்களைப் படிக்க பாரத விருத்தியாக இறை நீக்கி நிலமளிக்க சபையினர் மூலம் ஏற்பாடு செய்துள்ளதை இராசேந்திரசோழன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் மகாபாரதம் குறித்த செய்தியினை 13.9.1962 பதிவு செய்துள்ளார். ""தற்போது பெரிய கோயில்களில் பாரதம் வாசிக்கிறது இல்லை. ஆனால் கிராம தேவதைகளின் கோயில்களிலே பாரதம் வாசிக்கிறதைப் பார்க்கிறோம். ஒரு நல்லதைக் கேட்க வேண்டுமென்றால் பாரதம் கேட்கத்தான் போக வேண்டும். ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முந்தி இருக்கிற செப்பேட்டிலும் அதற்குப் பின்பும் ஒவ்வொரு கோயிலிலும் பாரதம் வாசிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்'' என்கிறார்.
சுவாமிகள் அன்று கூறியதுபோல, இன்று திரெüபதி அம்மன் கோயில் திருவிழா காலத்தில் மட்டுமே மக்கள் பாரதக் கதை சொற்பொழிவைக் கேட்டும்,
பாரதக் கூத்தைப் பார்த்தும் வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!

புதுச்சேரியில் விஜய் சாலைவலம்! | Vijay | TVK
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


