அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: ஈ - 1

'ஈ' என்பது உயிர் நெட்டெழுத்து. இது 19-ஆம் நூற்றாண்டு வரை இ என்பதன் மேல் ஒரு சுழியாகவே எழுதப்பட்டது. பின்னேதான் நிலைக் கால் வடிவும் புள்ளிகளும் "வீரமாமுனிவர்' செய்து, அடங்கலும் ஆகியது.

News image
Updated On :3 டிசம்பர் 2016, 8:17 pm

'ஈ' என்பது உயிர் நெட்டெழுத்து. இது 19-ஆம் நூற்றாண்டு வரை இ என்பதன் மேல் ஒரு சுழியாகவே எழுதப்பட்டது. பின்னேதான் நிலைக் கால் வடிவும் புள்ளிகளும் "வீரமாமுனிவர்' செய்து, அடங்கலும் ஆகியது.
"ஈ' என்பது உயிரொலி! இயற்கைக் கொடை. "ஈ' என்னும் உயிரி ஒலிப்பதைச் செவி கொடுத்துக் கேட்டவன், அதன் ஒலியையே அதற்குப் பெயராக்கினான். இன்றும் அதன் ஒலியைக் கேட்டுத் தெளிவு செய்யலாம்!
"ஈ' என்ன ஒரு வகையா? பெரிய ஈ இருக்கிறதே, அதற்கு "மாட்டு ஈ' என்பது பெயர். ஒரு தீனியைக் கண்டால் மொய்க்கிறதே - பல ஈக்கள் சேர்கின்றனவே! "ஈ' மொய்த்தல் போல் பலர் கூடி மணமகனுக்கு வழங்கும் கொடைதானே "மொய்'!
ஈ மொய்த்தல் மூலம்தானே மங்கல விழா "ஈ'கைக் கொடையாயிற்று. "ஈகை' என்றே ஓர் அதிகாரம் திருக்குறளில் ஆயதே! ""ஈதல் இசைபட வாழ்தல்'' என்பதுதான், சாவா வாழ்வு அல்லது புகழ் வாழ்வு!
ஒருவன் பல்லைக் காட்டிக் கையேந்துகிறான்; "ஈ' என்பதன் குறியீடுதானே அது. ""ஈ என்று பல்லைக் காட்டுகிறான்'' என்று பழிக் குறியும் ஆயதே!
""ஈ' என்று இரப்பது இழிவு, "ஈயேன்' என்பது அதனினும் இழிவு'' என்று சான்றோர் ஒருவர் உரைத்தாரே! ஈதல், ஈகை, ஈவு, ஈவோன் (இறைவன், ஆசிரியன்) ஈகையாளன் அல்லது ஈகையாளி (வள்ளல்) என்பவை ஈக் கொடைதானே!
ஈயாக் கருமி என்பதற்கும் ஈ வந்ததே! ஈ அல்லாமல் ஈப் போல் பறந்து ஒரு நாள் போதில் இறகை இழந்து முடிகிறதே அதன் பெயர் என்ன? "ஈ' அல்லாதது ஆதலால், "ஈயல்' என்பதுதானே பெயர். "ஈசல்' என மக்கள் வழங்கினாலும் என் பெயர் "ஈயல்' எனக் காட்டிவிடுகிறதே அது!
சோறு போட்டால் வாங்காமல் அரிசி வாங்குவார் இலரா? அரிசி தந்தால் வாங்காமல் "காசு' என்று கேட்பார் இலரா? ஆதலால், ஈகை என்பதற்குக் கொடைப் பொருளை அன்றி, உயர்ந்த பொருளாக மதிக்கப்படும் பொன் என்னும் பொருளும் உண்டாயதே!
"ஈ' சேர்க்கும் ஒன்று மாந்தரால் சேர்த்தற்கு அரிய பொருளாக உள்ளதே! ஈ ம்- தேன் ஈ - தேடி வைத்ததுதானே தேட்டு! தேடுதல் வேட்கை - தேட்டுச் சேர்த்து வைக்கும் வகை - தேட்டால் விருந்தும் மருந்தும் உதவியும் உயர்வும் எல்லாமும் கற்பிக்கும் நல்லாசான் எனத் தேனீ விளங்குகின்றதே!
தேனீ கொள்வது மட்டுமா - கொள்ளும் மென்மை மட்டுமா - எழுப்பும் இசை மட்டுமா - இனத்தைப் பெருக்கும் கொடை வளமும் சேர்த்து அல்லவோ செய்கின்றது! ""ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்'' என்பதற்குப் புலமையாளர் இருபொருள் காணும் இன்பத்தையும் ஈகின்றதே ஈ!
""கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'' எனச் சங்கச் சான்றோரும், "கோத் தும்பி' என மணிவாசகரும் பட்டம் வழங்கிப் பாராட்டும் வாழ்வு அல்லவோ பெறுகின்றது! இன்னோர் ஈயை மேலே பார்ப்போம்!

- தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.