போரில் தோற்ற மன்னன் ஒருவன் உளம் நொந்து ஒரு குகையுள் படுத்திருக்கிறான்! "சில்' என ஒலிக்கும் ஓர் ஈ ஒரு மூலைக்கும் மற்றொரு மூலைக்கும் தாவப் பார்க்கிறது. முடியவில்லை! ஒரு முறைக்கு ஆறு முறை முயன்றும் முடியவில்லை. ஆயினும் சோர்வு அடையாமல் ஏழாம் முறை தாவிப் பிடித்துத் தன் நூலை ஒட்ட வைத்து வலையும் பின்னி, தன் வாழ்வுக்கு மூலமாம் உணவுக்கும் வழி செய்து விடுகின்றது.
இதைக் கண்ட மன்னன் ஆறு முறை தோற்றவன், எழுந்தான். வலை பின்னிய ஈயின் எழுச்சியோடு! சென்றான் போருக்கு! வென்றான் பகையை! மீண்டும் அரசன் ஆனான் "இராபர்ட்டு புரூசு' என உலக வரலாற்றில் அழியாப் புகழும் பெற்றான்! சிலந்தி தந்த ஈகைதானே அவ்வரசு! அந்த "ஈ', "சிலந்தி'. "சில்' என்னும் மெல்லொலி எழுப்பக் கேட்ட கூர்ஞ் செவியன் "சிலந்தீ' என்றான்! வழக்கில் "சிலந்தி'யாகி நாம் வீடு கட்டுவதுபோல் கூடு கட்டி வாழ்கிறது. கூடா அது? ஆம்!
""வான் குருவியின் கூடு வல்லரக்கு தொல்கறையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதாம்-யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாங் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது''
என்று ஐவகைக் கூடுகளுள் ஒன்றாகக் கூறிவிடவில்லையா? நம் உடலும் கூடுதானே! இதில் சிலந்தியின் உண்மைப் பெயரையும் அதன் பொருள் விளங்கச் சொல்லிவிடுகிறாரே பாட்டியார். என்ன பெயர்? "சிலம்பி'!
சிலம்பு என்பது என்ன? ஒலி செய்வதுதானே! என்ன வொலி "சில்' என்னும் ஒலி அல்லவா! காலில் போடும் "சிலம்பு', கையில் எடுத்து விளையாட்டாகவும், பாதுகாப்பாகவும், பகை வெல்லவும் கொள்ளும் சிலம்பாட்டம், எதிரொலி செய்தலால் பெயர் கொண்ட சிலம்பு (மலை),
சிலம்பு அணிதலால் கொண்ட "அம் பொற் சிலம்பி' சிலம்பாயி, சிலம்பரசி என்னும் பெயர்கள் "சிலம்பி' வழங்கிய கொடைகள் அல்லவா!
ஆயர் குடியிருப்பிலே விடி பொழுதிலே சென்றால் தயிர் கடைந்து மோராக்கி வெண்ணெய் எடுக்கும் நாட்கடன் சிறப்பாக விளங்கும். மோர் அல்லது தயிர் கடைதல் என்பது என்ன? "சிலம்புதல்', "சிலுப்புதல்' என மக்கள் வழக்கில் உள்ளது.
சிலம்பின் கொடைதானே முத்தமிழ்க் காப்பியமாய் - தமிழ் முதற் காப்பியமாய், ""சேரன் தம்பி செய்ததாம் செஞ் சிலம்பு'' என்னும் சிலப்பதிகாரம்! "ஈ'யின் ஒலி, சிலம்பொலியாகிச் சிறப்பது நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வளம் அல்லவா!
- தொடர்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


