அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -49

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையாரும் நானும் எங்கள் சிற்றூரிலிருந்து கொளுத்தும் வெயில் நண்பகலில் புறப்பட்டு, வயல்வெளியின் குறுக்கே ஏழெட்டு மைல் நடந்து, மயிலாடுதுறையை அடைந்து, தொடர்வண்டி ஏறி மாலை சிதம்பரம் சென்றடைந்தோம்

Updated On :27 பிப்ரவரி 2016, 7:10 pm

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையாரும் நானும் எங்கள் சிற்றூரிலிருந்து கொளுத்தும் வெயில் நண்பகலில் புறப்பட்டு, வயல்வெளியின் குறுக்கே ஏழெட்டு மைல் நடந்து, மயிலாடுதுறையை அடைந்து, தொடர்வண்டி ஏறி மாலை சிதம்பரம் சென்றடைந்தோம். அங்கு எங்களைப் போலவே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த மக்கள் குவிந்திருந்தனர். அங்கங்கே கழிகள் கட்டிப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்த மண்தரையில் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். யாருக்காக அந்தக் கூட்டம்?

அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் ஜவாஹர்லால் நேருவைக் காண்பதற்காகத்தான் அத்தனை கூட்டம். அந்த ரோஜாவின் ராஜாவின் அழகிய உருவத்தைக் கண்டதும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் மிடுக்கோடு எட்டிப் பாய்ந்து மேடை ஏறி இருக்கையில் அமர்ந்தபோது, "குதிரையேற்றமோ?' என்று கூறி மக்கள் மகிழ்ச்சியில் சிரித்துக் கைதட்டினர். அவரோடு குடியரசின் துணைத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும் வந்திருந்தார். முதலில் அவர் இரு கைகளாலும் ஒலிபெருக்கியின் தண்டினைப் பிடித்தவாறு நின்று கணீர் என்று பேசி முடித்தார். அடுத்து நேரு பேசத் தொடங்கினார். உடனே மக்கள் ஆரவாரம். ""நான் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் வந்தேன். அப்போது நான் சுதந்திரப் போராட்ட வீரன்'' என்று பேச்சைத் தொடங்கினார். மீண்டும் ஆரவாரம். பேச்சினிடையே விமான விபத்தில் இராணுவப் படைத் தளபதிகள் சிலர் மாண்டதை வருத்தத்தோடு குறிப்பிட்டார். மக்கள் அதனைக் கேட்டு வருந்தினர். மகுடியின் இசைக்கு மயங்கும் பாம்புபோல் அவர் பேச்சுக்கு மயங்கிக் கிடந்தனர். இத்தகைய ஆற்றல் வேறு எந்தத் தேசியத் தலைவருக்கும் அக்காலத்தில் இல்லை.

அதே காலகட்டத்தில் தமிழகத்தில் குள்ளமான தோற்றம், கலைந்த தலை, காவியேறிய பற்கள், பொத்தானைக்கூடச் சரியாகப் போடாத சட்டை, கரகரப்பான குரல் இவற்றோடு ஒருவர் தமிழகத்தின் ஊர்தோறும் சென்று பேசிவந்தார். அவர் அழகர் அல்லர்; ஒப்பனையோடு மேடை ஏறியவர் அல்லர்; குரலிலும் இனிமை இல்லை. பேசும் போதே பொடியை உறிஞ்சிக் கொண்டார். பேச்சிலும் பொடிவைத்துப் பேசினார். ஒரு கூட்டத்திற்குக் கூடக் குறித்த நேரத்தில் வந்ததாக வரலாறு இல்லை. ஆனாலும், அவரின் பேச்சைக் கேட்கப் படித்த இளைஞர்களும் கூலிவேலை செய்யும் ஏழை பாழைகளும் தவங் கிடந்தனர். பேச்சுக்கு நுழைவுக் கட்டணம் விதித்தாலும் செலுத்திக் கேட்டு மகிழ்ந்தனர். இப்படித் தம் பேச்சைக் கேட்கும்படி மக்களைக் கவர்ந்த பேச்சாளர் யார்? அவர்தான் அறிஞர் அண்ணா!

நல்ல நடிகர் என்றாலும் முதன்மையான நடிகர் அல்லர். ஆனால், அவர் படங்களைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். தாம் சார்ந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கித் தேர்தலில் பெருவெற்றி பெற்று, மறையும்வரை முதலமைச்சராகத் திகழ்ந்து வரலாறு படைத்தார். எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது. அவர்தான்

எம். ஜி.ஆர்.

இவர்களைக் காணவும் பேச்சைக் கேட்கவும் மக்களைச் சுண்டி இழுத்த அந்தத் தனிப்பண்பு எது? அதனைத்தான் ஆங்கிலத்தில் இட்ஹழ்ண்ள்ம்ஹ என்கின்றனர். இதனைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

தி. அன்பழகன் பரிந்துரைக்கும் சொல் செம்மதி வளம். கா.மு. சிதம்பரம் உருவாக்கியுள்ள சொல் அருள் ஆளுமை. டி.வி.கிருஷ்ணமூர்த்தி புகழ்வளர்ச்சி என்றும், இராஜசிம்மன் தலைமைப்பண்பு என்றும், ச.கிருஷ்ணசாமி கவர்ச்சி (கவர்ந்தவர்) என்றும் குறிக்கலாம் என்கின்றனர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி தம் பெயரைப் போலவே நீளமான "தனிநபர் கவர்வு விசை' என்னும் தொடரைத் தந்து ஆங்கிலச் சொல்லின் முழுப்பொருளையும் கொண்டுவர முயன்றுள்ளார்.

சந்திரா மனோகரன் கவர்ந்திழுக்கை, கவர்ச்சிச்செறிவு என்றும், எஸ். சுரேஷ் முக கவர்ச்சி, முக ஈர்ப்பு என்றும், பி.சுப்பிரமணியன் ஈர்ப்பாளுமை என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன் வசீகரம், வசப்படுத்தும் ஆளுமை என்றும், ப.இரா. இராசஅம்சன் வசிய ஆற்றல்,

ஆட்கவர்ச்சி, இறைமைத்திறன் என்பவற்றையும் ஏற்ற சொற்கள் என்கின்றனர்.

ஆட்கொள் கவர்ச்சி, கொள்ளைகொள் கவர்ச்சி, கவர்ச்சிப்பிழம்பு இவை பொருத்தமாக இருக்கும் என்பது என்.ஆர். ஸத்யமூர்த்தி கருத்து. இவரது தமிழாக்கம் வறிதே கவர்ச்சி என்பது முழுப்பொருளையும் தராது என்று கருதுவதனைக் காட்டுகிறது. கோ. மன்றவாணன் அருளளி, ஈர்ப்பொளி, கவர்ச்சி போன்ற சொற்களோடு வசப்படுத்துதல் என்னும் பொருளில் வயமை என்று ஒரு புதுச்சொல்லையும் உருவாக்கித் தந்துள்ளார். முன்பே சொற்கள் இருக்கும்போது புதுச்சொல் தேடுவதைத் தவிர்க்கலாம்.

இச்சொற்குவியலில் கவர்ச்சி, ஈர்ப்பொளி ஆகிய இருசொற்கள் கருதத்தக்கன. இறைவனை "என் உள்ளம் கவர்கள்வன்' என்கிறார் ஆளுடைய பிள்ளை. "ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே' என்கிறார் மணிவாசகர். Attraction கவர்ச்சி ஆகும். Charisma வெறுங்கவர்ச்சியன்று. அது Compelling attraction. அதனைத் தனிக்கவர்ச்சி எனலாம். இதனினும் தனி ஈர்ப்பு என்பது சிறப்பாகத் தோன்றுகிறது. "திரு' என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை' என்று திருக்கோவையார் உரையில் பேராசிரியர் விளக்கம் தந்துள்ளார். அதனையொட்டி இதனைத் தனித் திரு என்றும் குறிக்கலாம். "தனி' நிகரற்றது என்று பொருள்படும்.

Charisma  - தனி ஈர்ப்பு அல்லது தனித் திரு.

அடுத்த வாரத்திற்குரிய சொல் :  Penfriend

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.