இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தாயும் சேயும் பாடிய மாலையும் தூதும்!

தமிழகத்தில், தமிழ் இலக்கண - இலக்கிய அறிவு மிக்கவராகத் தாயும் மகனுமாக இருவர் வாழ்ந்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூலை 2016, 9:44 pm

தமிழகத்தில், தமிழ் இலக்கண - இலக்கிய அறிவு மிக்கவராகத் தாயும் மகனுமாக இருவர் வாழ்ந்துள்ளனர். பல பொருள்களைத் தரும் சிலேடை நூலான "நவமணிமாலை' என்ற நூல் தாய் நாகரத்தினம் அம்மாள் எழுதியது. அத்தாயின் மகன் மே.சி.கலியாண சுந்தரன் எழுதிய நூல் "நெஞ்சு விடு தூது'. இருவராலும் பாடப்பெற்ற பாட்டுடைத் தலைவர், திருத்துருத்தி இந்திரபீடம் ஸ்ரீகரபாத்திர சுவாமிகள் ஆதீன வழிவந்த ஸ்ரீமத் தே.அ. சாமி குப்புசாமி. 1933 -ஆம் ஆண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

நாகரத்தினம் அம்மாள் எழுதிய நூலுக்கு அணிந்துரை எழுதியவர்களே மகன் கலியாண சுந்தரன் எழுதிய நூலுக்கும் அணிந்துரை எழுதியுள்ளனர். கோ. வடிவேல் செட்டியார், த. கோவிந்தசாமிப் பிள்ளை முதலிய எழுவர் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளனர்.

இந்நூலின் அணிந்துரையால் அறிய வருவன: "இவர் நவமணிமாலை இயற்றியதால் தன் பாவம் அறச்செய்தவர்; "மாது மொழி கேளேல்' என்ற ஒüவை மொழியை இந்நூலாசிரியர் மறுத்துள்ளார்; இவர் மாது சிரோன்மணி ஆவர்; கூர்த்திடும் மெய்ஞ்ஞானம் உடையவர்; மங்கையர்க்கரசியார்; நற்குணம் வாய்க்கப் பெற்றவர்; அன்னையென யாவரையும் உபசரிக்கும் அளக்க அரிதாம் அன்பு மிக்கவர்; மனச்சேட்டை அடக்கி அறிவாக நிற்கும் நற்பயனை எய்திட இந்நூலை எழுதினார்; சிவம் பெருகு நாகரத்தினம் அம்மாள்; நயமாய்ச் சிலேடையாய்ப் பாகமுறச் செய்தாள்; பண்ணாரின் தமிழ் ஓர்ந்த கலியாண சுந்தரநற்பாவலோன்; விஞ்சுதமிழாய்ந்துணர்ந்த கலியாண சுந்தரராம் விபுதன்; அருங் கற்புறு நாகரத்தினம்மாள் ஈன்ற கொஞ்சுமொழிக் கலியாண சுந்தர நற்கவிவாணன்; நெஞ்சுவிடு தூது எனும் நூல் இயற்றி உளங்களித்தான்; முடியேறு செந்தமிழும் ஆங்கிலமும் நயம் மலிய முறையாகக் கற்றுப் படியேறு புகழ் படைத்த கலியாண சுந்தரனாம் பாவலோனே; தோமில் கலியாண சுந்தர நற்சுத்த குணன்; மாலையைப் போல் மிக அழகாய்ப் புனைந்து அளித்தான் புத்தமுதநிகர் தமிழ் தேர் கலியாண சுந்தரனாம் பகலவன்'.

நாகரத்தினம் அம்மாள் எழுதிய சிலேடை வெண்பா இது. சிவனுக்கும் குப்புசாமிக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளதை விளக்குகிறது.

மதிக்குறை முடித்தலால் மாநீற்றுப் பூச்சால்

விதிக்கருமை யாலூர்மால் மேலால் - துதித்தலால்

பூவாளி யேவான் புறந்தரலால் ஒக்குமே

பூவாளி யேவான் புரிந்து!

சிவன்:- மதிக்குறை - குறைந்த சந்திரனை (பிறையை) முடித்தலால் - சூடுவதனால்; மாநீற்றுப் பூச்சால் - சிறந்த விபூதியைப் பூசியிருப்பதனால்; விதிக்கு அருமையால் - பிரம்மாவுக்குக் காண்பதற்கு முடியாததால்; ஊர்மால் மேலால் - மால்மேல் ஊர் ஆல் - விஷ்ணு (ரிஷபம்) மேல் ஊர்ந்து செல்வதனால்; துதித்தலால் - அன்பர்கள் துதிப்பதனால்; பூவாளி - மன்மதன்; ஏவான் - (அம்புகளை) ஏவாதவனாய் (முன் சாம்பல் ஆனமையால் பயந்து); புறந்தரலால் - முதுகு காட்டி ஓடுதலால்; ஒக்கும். சிவனுக்குச் சொல்லியது போல குப்புசாமிக்கும் உரை சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். மகன் எழுதிய நெஞ்சுவிடு தூதில் பரமசிவன் பற்றிய காப்புச் செய்யுள் இது:

எவ்வுயிர்க்கும் தான்முதலாய் எங்கும் நிறைந்து இயக்கி

எவ்வுயிர்க்கும் தண்ணருள்செய் எம்பிரான் - செவ்வி

மிழற்றா மரையன்மால் வேண்டிடநின் றாடும்

கழற்றா மரையன்றே காப்பு.

இவ்வாறு தாயும் மகனும் குப்புசாமியின் சிறப்புகளை நூல் வடிவாக்கித் தந்துள்ளனர். ஒரே நூலில் இரண்டு பகுதிகளாக இவை அமைந்துள்ளன. கவிதை நூலையும் யாத்து உரையையும் அவர்களே எழுதியுள்ளனர்.

தே.அ. சாமி குப்புசாமியின் சிறப்புகளாக அறியப்பெறுபவை: "தத்துவ ஞானம் உடையவர்; சாது மகாத்மா என நல்லறிஞர் புகழ்வர்; குப்புசாமி வள்ளல்; சீர்த்தியுற அறங்கள் செயும் குப்புசாமி; செம்மல்; எளியார் தமக்கு அன்னதானம் அளிப்பவர்; அன்பர் யார்க்கும் இயற்றி இன்புறுவதோடு ஈகையால் வாகை பெறலாம் என உலகோர்க்கு உணர்த்திய மாதவர் குப்புசாமி; கருணை மிக்கவர்; தவம் பெருகும் தன்மையர்'.

தமிழ் இலக்கிய வரலாற்றில் இத்தகு நெருங்கிய (தாய்}மகன்) உறவுள்ளோர் கவிஞர்களாக இருந்ததற்கான குறிப்பு இல்லை. ஆனால், தாயும் மகனும் தமிழ்க் கவிஞர் என்பது வியப்புக்குரிய செய்தியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.