சித்திரை முழு நிலவும் கண்ணகி வழிபாடும் - 3

ஆடித் தேய்பிறை அட்டமியன்று மதுரையை எரித்த பதினான்காம் நாள் சேர எல்லைக்குச் சென்ற கண்ணகி வானுலகம் அடைந்தாள். இதனைக் கண்ட குன்றக்குறவர்கள் கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டாடினர்.
சித்திரை முழு நிலவும் கண்ணகி வழிபாடும் - 3

ஆடித் தேய்பிறை அட்டமியன்று மதுரையை எரித்த பதினான்காம் நாள் சேர எல்லைக்குச் சென்ற கண்ணகி வானுலகம் அடைந்தாள். இதனைக் கண்ட குன்றக்குறவர்கள் கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டாடினர். கண்ணகி சேர எல்லையை அடைந்த பதினான்காம் நாள் என்பது ஆடி அட்டமியிலிருந்து அமாவாசை எட்டாம் நாளும் அதன்பின் வளர்பிறையில் ஆறு நாளுமான பதினான்காம் நாளாகும். இந்நாளில் கண்ணகி வானுலகம் சென்றதும் அன்றே அந்த இடத்தை வழிபடுதற்குரியதாக அமைக்க எண்ணி, சில நாள்களில் சிறு கோயிலாக ஏற்பாடு செய்து வழிபட்டனர்.

கண்ணகி நின்ற இடம், நினைவிடமாகக் கொள்ள அவள் வானுலகு சென்ற ஆடி வளர்பிறை முடிவில் வந்த முழு நிலா நாளில் சமாதி கோயில் போல் அமைத்து நாளும் வழிபாட்டைத் தொடர்ந்துள்ளனர். இதன் குறிப்பைத்தான் இளங்கோவடிகள் ""சிறுகுடியீரே! சிறுகுடியீரே!'' எனத் தொடங்கிக் கூறிய செய்திகள் உணர்த்துகின்றன.

இந்த வழிபாடு சேரன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து வழிபடுவதற்கு முன் நிகழ்ந்த வழிபாடாகும். ஆடித்திங்கள் பதினான்காம் நாளில் அவள் மறைந்தாலும் அவளை சமாதிக் கோயில் வழி, வழிபாடாக மேற்கொண்டது அவள் வானுலகம் சென்ற ஆடி வளர்பிறை முடிவிலான முழு நிலா நாள் ஆகும்.

சேரன், கண்ணகிக்கு இமயத்தில் கல் எடுத்துத் தங்கியிருந்தபோது, காலக்கணிவன் ஒருவன் நாம் வஞ்சியிலிருந்து புறப்பட்டுச் சிலைக்குக் கல் எடுத்து இற்றை நாள் வரை முப்பத்திரண்டு மதியம் சென்றதாகக் கூறினான். 32 மாதம் என்பது 2 தீ ஆண்டு. இதே 2 தீ ஆண்டு காலந்தான் அவன் மீண்டும் சேர நாட்டிற்குப் பயணப்பட்டு வஞ்சி மாநகரம் வந்திருக்க முடியும். இந்த 2 தீ + 2 தீ= 5 ணீ

ஆண்டுக் காலத்தை நுட்பமாகக் கணக்கிட்டால் சித்திரை முழுநிலவு நாளைக் கண்டறிய முடியும்.

குன்றக்குறவர்கள் சேரனிடம் கூறிய காலத்திலிருந்து கணக்கிடும்போது, ஓர் உத்தேசமாக ஆவணி முழு நிலவில் புறப்பட்டால் சித்திரை முழு நிலவுக்கு எட்டு மாதங்கள் ஆகும். இந்த எட்டு மாதங்களைக் கணிவன் கூறிய 32 மாதங்களிலிருந்து கழித்தால் 24 மாதங்கள். இந்த 24 மாதங்களாகிய ஈராண்டில் இரண்டு சித்திரை முழு நிலவு அமையும். இந்தக் கணக்கின்படி சித்திரை முழு நிலவின்போது சேரன் வடநாட்டிலிருந்து புறப்பட்டு அதே 32 மாதங்கள் பயணித்து வஞ்சிமா நகரம் அடைந்திருப்பான்.

இந்த 32 மாதங்கள் என்பதில் இரண்டு ஆண்டுகள் (இரண்டு சித்திரை முழு நிலவும்) அடங்குவதுடன் எஞ்சிய எட்டு மாதங்கள் என்பது கார்த்திகை முடிந்த நிலையில் ஆகும். மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய எஞ்சிய நான்கு மாதங்களில் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து, சித்திரை முழு நிலவில் விழாவைக் கொண்டாடியிருக்கக்கூடும் என அனுமானிக்கலாம்.

எந்த விழாவையும் முழு நிலவை ஒட்டியே செய்ததாக ஞானசம்பந்தர் மயிலாப்பூர்த் தேவாரத்தில் சுட்டுவதால் இவ்வழக்கம், ஞானசம்பந்தருக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்த வழக்கமானதைக் குறிப்பதால், அதன்படி, சேரன் முன் குறித்த காலத் தொடர்ச்சியில் சித்திரை முழு நிலா நாள் என்பதை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையைச் சேரன் கட்டிய கோயில் இல்லாததால் ஏற்பதற்கில்லை எனக்கூற முடியாது. ஏனெனில், சங்கம் மருவிய காப்பிய காலத்திற்குப் பின் அதாவது கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் களப்பிரரின் இருளார்ந்த ஆட்சி தமிழகத்தைக் கவ்வியிருந்ததால் அக்காலத்தில் சேரன் கட்டிய கோயில், அரண்மனை முதலியன சிதைந்து பாழ்ப்பட்டிருக்கலாம்.

ஆனால், சோழன் பெருங்கிள்ளி என்பவன் சோழத் தலைநகரான உறையூரில் (கோழியூரில்) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து சித்திரை முழுநிலவில் கொண்டாடியிருக்கலாம் என்ற உண்மை, ""சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து ...பத்தினிக் கடவுளாகும் நங்கைக்குப் பத்தினிக் கோட்டம் சமைத்து'' என்ற சிலப்பதிகாரப் பதிகத்திற்குப் பின்னர் கூறும் உரைபெறு கட்டுரையில் ஓரளவு யூகிக்க இடந்தருகிறது. இதிலுள்ள "கோழியகத்து' என்பதை நுட்பமாக உணர வேண்டும். உரையூரைத்தான் அது கோழி என்கிறது. உறையூரில் உக்கிரம் அமைந்த வெய்க்காளி அம்மன் (வெக்காளி) கோயில் ஒன்று உள்ளது. அந்த அம்மனைக் கோபமுற்ற கண்ணகியின் மூர்த்தமாகவே கருதலாம்.

களப்பிரர் காரணமாக உள்நாட்டுக் கோயில் அழிந்துபட்டாலும் சேர நாட்டின் எல்லைப்புற மலைவாழ் மக்களிடத்தில் உள்ள கண்ணகி வானுலகு சென்ற இடத்தின் சமாதிக் கோயில் களப்பிரரின் அழிவுக்கு ஆட்படாமல் தப்பித்த காலத்தில் தமிழ் மலையாள எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள மங்களா தேவியாம் கண்ணகிக் கோயில் வழிபாடு சித்திரை முழு நிலவிற்குத் தொடர்புடையதாக நிலைத்தது எனலாம். ஆக பல நிலைகளில் சித்திரை முழுநிலா நாள் தொடர்பு கண்ணகிக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.

மேலும், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரியைக் கண்ணகி படிமமாகச் சிலர் கூறுகின்றனர் என்ற ஞானச்செல்வன் கூற்றும் சரியன்று. ஒருமுலை இழந்த கண்ணகியாய் அவள் வந்ததை அர்த்தநாரியாகக் கற்பனை செய்ய முடியாது. அந்தக் கருத்தின்படியான கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடு, மற்றும் திருமுறை போன்ற இலக்கியச் சான்றுகள் ஏதும் இல்லாததால் பொய்மொழியாகக் கூறும் சிலரின் கூற்றை ஏற்க முடியாது.

ஆக, எந்த வகையில் உணர்ந்தாலும் கண்ணகி மதுரையிலிருந்து திருச்செங்கோட்டிற்கு வந்து தெய்வம் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சித்திரை முழு நிலவு நாள் விழா கண்ணகிக்கு முத்திரை பதித்த உண்மை என்பது அறியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com