கல் என்னும் ஒலியொடு அருவி வீழ்ந்த இடம் பள்ளமாகியதை முன்னர் அறிந்தோம். அதனால், கல்லுதல் "தோண்டுதல்' பொருள் தந்ததையும் அறிந்தோம். "கல்' வழியாகக் கிடைத்த சொல், "கல்வி'; கல்வியின் இலக்கணம், ஆழ்ந்து அகன்று விரிதலாய், நுண்பொருள் காண்பதே கல்வியின் - கல்வி அறிவின் இலக்கணம். ""நுண்மாண் நுழைபுலம்'' என்பது வள்ளுவம். இதனையே "வாலறிவன்' இலக்கணமாக, ""ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே'' என்றார் மணிவாசகர்.
கல்வி நான்கு சுவர்களுக்குள் அடங்கி விடுவதா? கற்பித்ததைப் பெற்று, கற்றவர் தம்மளவில் நிறுத்திக் கொள்வதா? செல்வாக்கு என்பது என்ன? ஓரிடத்து ஒருவர் சொன்ன சொல், பலவிடங்களிலும் பலப்பலர் இடத்தும் அடைந்து, பயன் செய்வதுதானே, "செல்வாக்கு'! அது, தங்கியோ தேங்கியோ போய்விட்டால், அது தோன்றிய பயன்தான் என்ன?
கல்வி, கற்றுக் கொண்டவர் அளவில் நில்லாமல், ஊர்ந்து செல்ல வேண்டும்! பள்ளத்து வளையுள் - புற்றுள் கிடந்த உயிரி, உயர்ந்து "ஊரி' யாகவில்லையா? காளையும் யானையும் குதிரையும் தேரும் ஊர்தியாதல் பண்டே உண்டுதாமே! அப்படியே கல்வியும் ஊரி (உயரி - ஊரி)யாய் உலா வர வேண்டும். அதனால் ஏற்பட்ட கலைச் சொல்லே "கல்லூரி'யாம்!
சிந்தாமணி தந்த காப்பியக் கொடை, "கல்லூரி'ச் சொல்லாம். கல்லாதவர் உளர் என்றால், ஆள்பவரும் அலுவலரும் கற்றவரும் கற்பிப்பவரும் இச் சொல்லின் பொருளை உணர்ந்து கடைப்பிடித்துக் கொள்ளாமையால்தான்!
""கல்வி இல்லா ஊரினைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்'' என்பது கல்வி அவாவிய மகாகவி பாரதி பார்வை! அவர்தம் தாசன் பார்வை, ""கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் ஆங்குண்டாம்!'' என்றார். கற்றவர் அனைவரும் அவரவர் அளவில் கற்பிப்பவராக இருந்திருந்தால், கல்லார் என எவரேனும் இருந்திருப்பரா?
உழவு, மருத்துவம், நெயவு, கொல்லு, தச்சு முதலாம் தொழில்கள் எல்லாம் குடும்பத் தொழிற் கல்வித் துறையாய்த்தானே வளர்ந்தன! வானார்ந்த மதில், கோட்டை, கோபுரம், மாளிகை எல்லாம், தொழிற்கல்விக் கூடங்களில் கற்றா வாய்ந்தன, வளர்ந்தன? சிற்பம், சித்திரம், சிலம்பம் எல்லாம் வழிவழியே வாய்க்கவில்லையா? இனிக் கல்லில் இருந்து பிறந்தது "கலை' என்னும் கலைச் சொல்!கலைதான் எண்ணி முடியுமா? ஒரு காலத்தில் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்றனர். இன்று அவ்வளவிலா கலைகள் உள்ளன? மருத்துவத் துறை ஒன்றாக இருந்தது. அறிவு மருத்துவம், சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என! வீட்டு மருத்துவம், பாட்டி மருத்துவம் எனவும் இருந்தன. ஆனால், உறுப்புவாரி மருத்துவக் கல்லூரிகள் பெருகிப் பெருகி வருகின்றனவே!
"கையறி மடைமை', செய்ந்நேர்த்தி எனப்பட்ட சமையல், வீட்டிலே வழிவழிக் கற்றுக்கொண்ட தல்லாமல், கல்வி நிலையங்களில் கற்பிக்கவா பட்டன? இன்று மனை இயற் கல்லூரி, அட்டில் கலைக் கல்லூரி என உண்டாகி உள்ளனவே! அதனில்தான் புல்லுணவு, புலாலுணவு, வடநாட்டு உணவு, மேல்நாட்டு உணவு என எத்தனை பிரிவுகள். கலை, பெருக்கமாகுமே அல்லாமல் சுருக்கமாகுமா?
கல், கல்வி, கலை என்ற அளவில் நின்றுவிட்டதா?
-தொடர்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


