கல்லின் நிறமென்ன, கருமை! அதுதான் தொடக்கப் பெயர். கருங்கல் பின்னே பல வண்ணங்களைக் கொண்டன. வெள்ளைக் கல், செம்போர்க் கல், பொன்னிறக் கல் (பொன்மலை) என்பவை முதலாக நிறத்தாலும் திண்டுக்கல், குண்டுக்கல், வட்டக்கல், சிப்பிப் பாறை, மைப் பாறை முதலாக வடிவத்தாலும் பெயர் பெற்றன.
செய் பொருளாய்ச் செங்கல் வந்தது, நீர் ஆவி ஆதலால் உப்புக் கல் கிடைத்தது. கல்லுடைப்பு, பாறைகளிலும் மலைகளிலும் என்றால், மக்களுக்குள்ளும் உண்டாயது கல்லீரல்! கல்லடைப்பு! கல்லடைப்பு உண்டானால், உயிர் காக்கக் கல்லுடைப்பு (அ) கல் கரைப்பு மருத்துவமும் ஏற்பட்டது.
கல் மண்டபம், கல்லால், கல்லத்தி, கல் மூங்கில், கல்லெடுப்பு, வீரர்கள் பீடு பெயரும் எழுதிய "நடு கல்' என்பவை எல்லாம் உண்டாயின! கல் அம் சேர்ந்து, "கலம்' ஆயது. உண்ணும் உணவுக்கு ஆகியது, உண் கலம்; கல்லால் செய்யப்பட்டு, பின்னர்ச் சுடுமண் கலமாய், பொலவகைக் கலமாய், வெள்ளிக்கலம், வெண்கலம் பொற்கலம் என ஆயது. வாழையிலை "பறிகலம்' ஆயது. உண்ணப்படும் கெட்டியான திருவோடு "கல்லை' ஆயது.
போரில் ஏவப்படும் கல்லில் இருந்து "கலம்' உண்டாயது. அது படைக்கலம் எனப்பட்டது. கலம் வைக்கப்பட்ட இடம் "படைக்கலக் கொட்டில்' ஆயது. கல் பதித்த அணிகள் "அணிகலம்' எனப்பட்டன. பரு மரத்தைத் துளைத்துப் பள்ளமாக்கி நீருள் செல்லப் பயன்படுத்தியதால், மரக்கலம், "கலம்' எனப்பட்டன. கலங்கரை விளக்கமும் இலங்கின.
இசைக் கருவிகள் துளைத்து ஆக்கப்பட்டதால் கலங்கள் ஆயின. ""காவினேம் கலமே'' - புறம். கலம் "கலன்' எனவும்; நலம் "நலன்', நிலம் "நிலன்' என்பவை போல அமைந்து, வழங்கலாயிற்று.
கூர்ங்கல்லால் மண்ணைத் தோண்டியவன், இரும்பைக் கண்ட பின், "கலப்பை' உண்டாக்கினான். மேல் மண்ணையும் கீழ் மண்ணையும் கலந்ததால் கலப்பை எனப்பட்டது.மணலும் கன்மாவும் (அ) மணலும் சாந்தும் கலந்து பயன்பட்ட கட்டுமானப் பொருள் "கலவை' ஆயது. சந்தனமும் பிற மணங்களும் கூடியதும் கலவையாயது.
இருவர் உள உடற் கலப்பு "கலவி' எனப்பட்டது. உள்ள பயிர் செறிவானால் ஊடு பறித்துக் கலப்பு ஆக்கப்பட்டது. கலப்பு உரம், கலப்பு உணவு என்பவை, அறிவியல் தந்தது. தின்பண்டத்துள் ஒன்று கலவை (மிக்சர்). சோற்று வகையுள் ஒன்று கலவைச் சோறு. ஒருப்படா உள்ளம் கலங்கல் உள்ளம். வயிற்றில் கலக்கல் அன்றி, மருந்துக் கலக்கல் வகையும் உண்டு.
இருவர் உளம் மாறுபட்டாலும், ஊர் மக்கள் பகைத் தெழுந்தாலும் "கலக மாதல்' ஏற்படும். பல உறுப்புகள் செறிந்த சிற்றிலக்கியம் "கலம்பகம்' ஆகும். பல வண்ணப் பூக்கள் கலந்த மாலையும் கலம்பகம் (அ) கதம்பம் எனப்படலாயிற்று.
கல்லால் திண்டு அமைத்து, அதன் மேல் பணப் பெட்டி வைத்ததால் கல்லாப் பெட்டி ஆயது. சரளைக் கல் பரவிக்கிடக்கும் ஆறு கல்லாறு. கற் பள்ளத்தில் அமைந்த குடிநீர் நிலை கல்லூரணி. கல்லால் ஆகிய மேடு கல்லாம் மேடு (கல்லா மேடு). கல்லைப் பயன்படுத்திய பழங்காலம், பழங்கற்காலம், புதுக் கற்காலம். கல்லால் கட்டப்பட்ட கோயில் "கற்றளி'.
கெட்டியான தன்மையமைந்த தோலுடையதும் ஆமை போல் வடிவினதும் "கல்லாமை'; மாம்பழம்."கல்லார் நெஞ்சில் நில்லான் இறைவன்' என்றது, கல்லுள்ளத்தவரை! "கல்லார் மிக நல்லர்' என்பது, பண்பாட்டடிப்படையில்!
கருங்கல் மனமும் கரைந்துருகச் செய்வது "திருவாசகம்'. கல், "கர்' ஆகத் திரிந்தாய விரிவைப், பின்னே காண்போம்.
- தொடர்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


