அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: தீ

தீயும் ஐம் பூதங்களுள் ஒன்றே. வெளி, வளி, "ஒளி' என மூன்றாம் பூதம் அது. கதிரொளி, விண்மீன் ஒளி, மதியொளி முதலாம் கோள் ஒளி இருந்தாலும் வீட்டுள் ஒளி வேண்டியுள்ளதே!

News image
Updated On :26 நவம்பர் 2016, 8:18 pm

தீயும் ஐம் பூதங்களுள் ஒன்றே. வெளி, வளி, "ஒளி' என மூன்றாம் பூதம் அது. கதிரொளி, விண்மீன் ஒளி, மதியொளி முதலாம் கோள் ஒளி இருந்தாலும் வீட்டுள் ஒளி வேண்டியுள்ளதே!
குத்து விளக்கு இல்லாத வீடு உண்டா? கோயில் உண்டா? நிகழ்வு உண்டா? கதிரோன் வழிஞர் சோழர்; திங்கள் வழிஞர் பாண்டியர்; தீயின் வழிஞர் சேரர் என்பது பழ மரபு.
தீயோ இயற்கையாலும் வெளிப்பட்டது; செயற்கையாலும் வெளிப்பட்டது. மூங்கில் உராய்ந்து ஏற்படுதலும், கல்லோடு கல் முட்டி மோதி ஏற்படலும் இயற்கை. (தீத்தட்டிக் கல், சக்கை முக்கிக் கல் என்பனவும் அது). தீயாக்கு தேய்வைக் கல்லைக் கண்டு, பஞ்சை வைத்துப் பற்றச் செய்வதும், தீக்கடை கோலால் ஆக்கியதும் செயற்கை.
கானல் தாது மணலை, இரவு (அ) இருள் போதில் காலால் ஏற்றினால் தீப்பிதிர் எழும்பக் காணலாம். கதிரோன் ஒளிபடக் குவியாடியை (கண்ணாடியை)ப் பிடித்துப் பஞ்சை வைத்தால், தீப்பற்றல் கண்கூடு. இது கால் உண்டாம் மின்கசிவுத் தீயை எவர் அறியார்? அணுவா, அணுகத் தக்கதா?
தீ என்பதன் முன்னிலை என்ன? கல்லையும் கல்லையும் தேய்த்தல்! கோலையும் கோலையும் தேய்த்தல்! தேய்த்ததன் பெயர் என்ன? தேயு! தேய்த்தலால் பிறந்தது தீ! தீப் பெட்டியில் எரிமப் பூச்சு! தீக்குச்சியில் எரிமக் குப்பி! இரண்டும் உராய்ந்தால் - தேய்த்தால் - வெளிப்படுவது தீ!
தீக்கு மூன்று தன்மைகள் உண்டு. 1. ஊறு. 2. ஒலி. 3. ஒளி. ஆதலால், ""தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி'' என்றார் மாணிக்கவாசகர். தீ, வெளி, வளி, ஒளி என விரிந்த பூதம்தானே! முக்குணங்களின் சேர்க்கைதானே அது! "தீயினுள் தெறல் நீ' என்றார் கடுவென் இளவெயினனார் (பரிபாடல் 3:63). பாரதியாரோ, ""தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத் தீண்டு மின்பம் தோன்றுதடா நந்தலாலா'' என்றார். தீ ஆக்கமே செய்யுமா? ஆக்கமும் செய்யும்; அழிவும் செய்யும்! மற்றை நீரும் நிலமும் ஆக்கமும் அழிவும் செய்யவில்லையா?
இரு வேறு - எதிர் எதிர் - தன்மைகளைத் தம்மிடத்தே எல்லாப் பூதங்களும் கொண்டமையால் தானே ""இரு வேறு உலகத்து இயற்கை'' என்றார். பொய்யா மொழியார் (திருக். 374). இத் தன்மை மாறுமா? எப்படி மாற்றினாலும் தன்னியற்கை மாறாமையைத் தெளிந்துதானே ""பேரா இயற்கை'' என்றார் (திருக். 370).
சோறாக்க - இருள் போக்கப் பயன்படும் தீ, ஊரே எரிய ஆவது இல்லையா? தீயவன் ஒருவன் ஒரு வீட்டில் வைக்கிறான்; காட்டில் ஓரிடத்தில் வைக்கிறான், ஒரு தீக்குச்சியை உராய்ந்து! ஊரே கரிக்காடு ஆகின்றது; காடும் கரிக்காடு ஆகின்றது. தீயே தேடிப் போய் வீட்டையோ, காட்டையோ எரித்ததா? அதற்கு உயிர் உண்டா? அறிவு உண்டா? பகை உண்டா? தீ மூட்டிய தீயனுக்குத்தானே, அவையெல்லாம் உண்டு! அதனால் தீக் கேட்டுக்கு மூலவன் தீயவனேயாம்! அதனால்தான்,

""தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்''

என்றார் வள்ளுவர் (202). தீயினால் சுடப்பட்ட புண், வெளியும் உள்ளும் ஆறினாலும் தீயவன் வாயால் - சொல்லால் - சுட்ட தீ என்றும் மாறா - மறையா - வடுவாக இருக்கும் என்கிறாரே (129). இனிமையையும் இனிமை இல்லா இன்னாததையும், எவ்வளவு அருமையாகக் காட்டினான் முந்தைத் தமிழன்!
தீங் கனி ஷ் தீக் கனி
தீஞ் சுவை ஷ் தீச் சுவை
தீந் தேன் ஷ் தீத் தேன்
தீம் பால் ஷ் தீப் பால்
தீயின் மெல்லினச் சார்பும், வல்லினச் சார்பும் வியப்பூட்டுகின்றன அல்லவா!
- தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.