அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: சல சல

'சல சல' என்பது ஒலிக் குறிப்பு. பனையின் காய்ந்த ஓலை சலசலக்கக் கேட்கலாம். ஆனால், பசுமையான ஓலையில் சலசலப்பு இராது.

News image
Updated On :22 அக்டோபர் 2016, 8:24 pm

'சல சல' என்பது ஒலிக் குறிப்பு. பனையின் காய்ந்த ஓலை சலசலக்கக் கேட்கலாம். ஆனால், பசுமையான ஓலையில் சலசலப்பு இராது. அதனால், ""பச்சோலைக் கில்லை ஒலி'' எனப்பட்டது. சிலர் வாயால் வீரம் பேசி அடக்கப் பார்ப்பர். அவரை அறிந்தவர் ""இந்தச் சல சலப்புக்கெல்லாம் அஞ்சும் ஆள் நானில்லை'' என்பதை, ""இந்த நரி, அந்தச் சலசலப்புக் கெல்லாம் அஞ்சாது'' என்று தம் துணிவை உரைப்பர்.
நீர் ஓட்டம் "சலசல' என இரையும். அதனால், "சலம்' எனப்பட்டது. வீட்டுச் சமையல் அறையில் உள்ள வடிகால், உள் துளை இருப்பதால் "அங்கணக் குழி' எனப்படும். அகம் (உள்ளே) கண் (துளை) இருப்பதால் அகங்கண்ணம் - அங்கணம் எனப்பட்டது. ஊர் வடிகாலை, ""ஊரங் கண நீர்'' என்றனர்.
""ஊரங் கண நீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்'' என்றனர். ""ஊர் வடிகாலும் ஆற்று நீரொடும், கடல் நீரொடும் சேர்ந்தால், புனித நீராகிவிடும்'' என்றது இது.
அங்கணத்திற்குச் "சல தாரை' என்பதொரு பெயர். சலம் - நீர்; தாரை - நீண்டு ஓடுவது! சலக் கால் புரை என்பதும் இது. புரை - துளை.
நீரின் இயல்பு, வழிந்து நீண்டு பள்ளம் நோக்கி ஓடுதல்தானே! அதனால்தானே நீள், நீளி எனப்பட்டது. சலமாகிய நீர் சேரும் கடல் "சலதி' எனப்பட்டது. சலதியில் அலை எழுந்தும் விழுந்தும் எதிரிட்டும் ஏறியும் செல்வதால் "வஞ்சகம்' என்பதும் "சலம்' எனப்பட்டது.
""வஞ்சகமான மாதவியால் என் பொருளெல்லாம் இழந்தேன்'' என்னும் கோவலன்,

""சலம் புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம் தரு வான்பொருள் குன்றம் தொலைந்தேன்''

என்பதாகச் சிலம்பு பாடுகிறது. "சலசல' "சல்சல்' என்னும் ஒலியுடையது "சலங்கை' எனப்பட்டது. மாட்டுக் கொம்பிலே கட்டப்பட்ட "சலங்கை', குழந்தையர் காலணியாகவும் மாறியது. அது "சலங்கை' எனப்பட்டது. "சதங்கை' எனவும் வழங்கப்பட்டது. "சிலங்கை' பேச்சு வழக்காம்.

""அரை வடங்கள் கட்டிச் சதங்கை
இடுகுதம்பை பொற் சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து''

என்கிறார் அருணகிரியார். "சல்லரி' என்பது இசைக் கருவிகளுள் ஒன்று. சலங்கை கட்டப்பட்ட மாட்டு வண்டி ஓட்டம் விரைவாம். "சல்சல்' என்னும் ஒலியும் மிகுதியாம். அவ் விரைவினைக் கேட்டவர் விரைந்து வா என்பதைச் ""சல்தியாக வா'' என்றனர்.
வெளியூர்களிலிருந்து வரும் கடிதங்களைப் பெரிய ஊர்களுக்குக் குதிரை வண்டிகளில் விரைந்து கொண்டு வந்தனர். அவ்வண்டிக்குத் தடையாகாமல், வழிவிட்டு ஒதுங்க, "சல்சல்' என மணி ஒலிக்கும்; அவ் வண்டிக்கு "அஞ்சல்' வண்டி எனப் பெயராயது; தனிக் குதிரையில் கொண்டு சென்றால் "அஞ்சல்' குதிரை எனப்பட்டது. சலங்கை கட்டிய கம்புடன் சிற்றூர்களுக்குக் கொண்டு சென்றவர் "அஞ்சல்காரர்' எனப்பட்டார். அவ்வழியில் அஞ்சல் என்பது "கடித'மாகவும், "விரை'வாகவும் பொருள் தந்தது. "கடி' என்னும் உரிச் சொல்லும், படி நாள் தொட்டே விரைவுப் பொருள் தந்தது. "கடிதம்' "அஞ்சல்' என்பவையோ இந்நாள் பெரு வழக்கு.
""ஓரஞ்சலில் வந்து விடுகிறேன்'' என்பது இன்றும் சிற்றூர் மக்கள் வழக்கு.
அஞ்சல் - விரைதல் - தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.