இந்த வாரம் கலாரசிகன்

எஸ். குருமூர்த்தியைப் பத்திரிகையாளர் குருமூர்த்தி என்று குறிப்பிடுவதை இனிமேல் யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் சோ சாரின் மறைவைத் தொடர்ந்து, "துக்ளக்' வார இதழின் ஆசிரியராகி விட்டார்.
இந்த வாரம் கலாரசிகன்

எஸ். குருமூர்த்தியைப் பத்திரிகையாளர் குருமூர்த்தி என்று குறிப்பிடுவதை இனிமேல் யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் சோ சாரின் மறைவைத் தொடர்ந்து, "துக்ளக்' வார இதழின் ஆசிரியராகி விட்டார். அவரை ஆசிரியர் எஸ். குருமூர்த்தி என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழக அரசியலை தேசிய அரசியலுடன் இணைத்து நிறுத்திக் கொண்டிருப்பதில் "துக்ளக்' இதழுக்குப் பெரும் பங்கு உண்டு. சினிமா செய்திகளையும், பரபரப்புச் செய்திகளையும் வெளியிடாமல், அறிவார்ந்த விவாதங்களுக்கு வழிகோலுவதில் "துக்ளக்'கின் பங்களிப்பு கணிசமானது.
சோ சார் அமர்ந்த நாற்காலியில் அமர்வதற்கான தகுதி படைத்த ஒரே நபர் எஸ். குருமூர்த்தி மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பல்வேறு பிரச்னைகளில் ஓரளவுக்கு சோ சாரின் கருத்துடன் ஒத்துப்போகக் கூடியவரும் அவர் மட்டுமே. "துக்ளக்' வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர், பிடித்தமானவர். இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன் நான் நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி - "சரியான தேர்வு'!
வாஜ்பாய் 1998-இல் பிரதமரானபோது, எஸ். குருமூர்த்திதான் நிதியமைச்சர் பதவிக்கு அவரது முதல் தேர்வு. காஞ்சி மாமுனிவர் பரமாச்சாரியாரிடம், தான் எந்தவித அரசுப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதில்லை என்று கொடுத்த உறுதிமொழிக்காக அவரைத் தேடி வந்த நிதியமைச்சர், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் போன்ற பதவிகளை அவர் நிராகரித்தார். அதற்கு எவ்வளவு துணிவும், பற்றற்ற தன்மையும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் எஸ். குருமூர்த்தி எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விடுகிறார்.
எஸ். குருமூர்த்தி "துக்ளக்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சி. இவரைப் போன்ற அறிவுஜீவிகள் தமிழில் எழுதுவது, தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது என்பதெல்லாம் கெளரவக் குறைச்சல் என்று எண்ணுவதைப் பார்க்கிறேன். எனக்குத் தமிழில் எழுத வராதே என்று பெருமை அடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப்போல இல்லாமல், தமிழ் இதழியலைத் தனது நேரடிப் பத்திரிகைப் பணிக்கு அவர் தேர்ந்தெடுத்ததற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். குருமூர்த்தி "துக்ளக்' இதழில் தொடர்ந்து எழுதிய "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்' கட்டுரைகள் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் தகவல் பொக்கிஷம். அவர் தொடாத பிரச்னைகளே கிடையாது. அதற்குத் தீர்வு தராமல் இருந்ததும் கிடையாது.
"உலகிலேயே அதிகக் கடன் வாங்கியுள்ள நாடு அமெரிக்கா!', "பத்திரிகைகளின் போக்கு', "கோலாக்கள் - பொருளாதார, கலாச்சார, சுகாதார விஷம்', "ஆசியாவைத் தாக்கும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல்', "வங்கிகளில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படலாமா?', "உலக வர்த்தக ஒப்பந்தம் - பலிகடா நமது விவசாயம்', "பணப்புழக்கம், பண வீக்கம், விலைவாசி - தொடர்பு என்ன?', "விவசாயிகளின் கடன் பிரச்னை', "சட்டம் குடும்பங்களைப் பிளக்கிறது', "அமெரிக்கா எப்படி உலகப் பொருளாதார சக்தியாக உயர்ந்தது?' உள்ளிட்ட கட்டுரைகளை நான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்துத் தெளிவு பெறுகிறேன்.
எஸ். குருமூர்த்தியின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளலாம், ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். ஆனால், அவர் கூறும் நியாயங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. "துக்ளக்' ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் எஸ். குருமூர்த்திக்கு வாழ்த்துகள்!

கடந்த மாதம் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது எழுத்தாளர் "சித்தார்த்தனைச் சந்தித்தேன். சிவசுப்ரமணியன்தான் சித்தார்த்தன் என்கிற புனைபெயரில் "ஸம்ராட் அசோகன்' சரித்திர நாவலை எழுதியவர் என்பது தெரிந்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சித்தார்த்தன் எழுதிய "ஸம்ராட் அசோகன்' விமர்சனத்திற்கு வந்திருந்தது. சரித்திர நாவல் என்பதாலும், ஸம்ராட் அசோகன் பற்றியது என்பதாலும் ஆர்வத்துடன் அதைப் படிக்கத் தொடங்கினேன். பிறகுதான் தெரிந்தது நான்கு பாகங்களுள்ள அந்தச் சரித்திர நாவலின் மூன்றாவது பாகமான "மழை' அனுப்பித்தரப்படவில்லை என்பது. ஓர் அற்புதமான நாவலின் ஒரு பகுதி விடுபட்டுப் போனால் ஏற்படும் வருத்தத்தைச் சொல்லி மாளாது.
எனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்ட அடுத்த நாளே "ஸம்ராட் அசோகன்' நான்கு பாகங்களும் சித்தார்த்தனால் அனுப்பித் தரப்பட்டுவிட்டது. மீண்டும் ஒரு முறை படித்து முடிக்க ஒரு மாதமாகி விட்டது. மூத்த எழுத்தாளர், நாடக ஆசிரியர் என்பதால் சரளமான நடை.
ஆங்காங்கே சுவாரஸ்யமான திருப்பங்கள். நறுக்குத் தெரித்தாற்போல விறுவிறுப்பான உரையாடல்கள். மௌரிய சாம்ராஜ்யத்தின் மாண்புகளையும், அன்றைய அரசியல் சூழலின் நடைமுறைகளையும் எடுத்தியம்பும் கதைப் போக்கு. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு சுவாரஸ்யமான சரித்திர நாவலைப் படித்த திருப்தி.
நாடக உலகில் எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சித்தார்த்தன் "யாதும் ஊரே', "வைசாலி', "காட்டுத்தீ', "செவ்வானம்' உள்ளிட்ட பல நாவல்களையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதிக் குவித்திருப்பவர். இசையிலும் தேர்ச்சியுடையவர். "இயல், இசை, நாடக மாமணி' என்று பட்டமளித்துப் பாராட்டப்பட வேண்டியவர்.
"மணிக்கொடி' கால மூத்த எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயாவின் ஆசியுரையுடன் வெளிவந்திருக்கும் "ஸம்ராட் அசோகன்' நாவலைப் படித்தபோது, நாடகம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.

"தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்' என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார் கவிஞர் மு. முருகேஷ். இதைப் புத்தகம் என்று கூறுவதைவிட ஆய்வு நூல் என்றோ, ஆவணப்பதிவு என்றோ சொன்னால் கூடத் தவறில்லை.


தமிழில் ஹைக்கூ தொடர்பாக நிகழ்ந்த முக்கியமான 100 பதிவுகள், ஹைக்கூவின் நோக்கமும் தமிழில் அதன் தாக்கமும், அவரைக் கவர்ந்த 100 தமிழ் ஹைக்கூக்கள், தமிழில் வெளிவந்திருக்கும் ஹைக்கூ நூல்கள், ஹைக்கூ சிறப்பிதழ்கள் என்று சிரமப்பட்டு அனைத்தையும் அற்புதமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் கவிஞர் மு.முருகேஷ்.
அவரைக் கவர்ந்த 100 ஹைக்கூக்களில் என்னைக் கவர்ந்த ஹைக்கூ, பாப்பனாப்பட்டு வி. முருகன் எழுதியது:

இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றிச் செல்கின்றன
நகரத்திற்கு மின்கம்பிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com