இந்த வார கலாரசிகன்

சில நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்று மனது துடித்தாலும், வேலைப்பளு தடுத்துவிடுகிறது. அப்படிப் போக முடியாமல் போன நிகழ்ச்சிகளில் ஒன்று "முல்லைச்சரம்' கவிதை இலக்கிய மாத இதழின் பொன்விழா நிகழ்வு.
இந்த வார கலாரசிகன்

சில நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்று மனது துடித்தாலும், வேலைப்பளு தடுத்துவிடுகிறது. அப்படிப் போக முடியாமல் போன நிகழ்ச்சிகளில் ஒன்று "முல்லைச்சரம்' கவிதை இலக்கிய மாத இதழின் பொன்விழா நிகழ்வு.
பாவேந்தர் பாரதிதாசனின் அன்புக்குகந்த சீடராகத் திகழ்ந்தவர் கவிஞர் பொன்னடியான். பாவேந்தரின் இறுதிக்காலம் வரை அவரது "குயில்' ஏட்டின் உதவியாசிரியராகவும், அவரது முழு நம்பிக்கையைப் பெற்ற உதவியாளராகவும் இருந்தவர். பாவேந்தரின் மறைவுக்குப் பிறகு, அவரைப் போலவே இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதில் இன்றுவரை முனைப்புடன் செயல்பட்டு வருபவர்.
இவர் 1966இல் தொடங்கிய "முல்லைச்சரம்' கவிதை இலக்கிய மாத இதழ் தனது அரை நூற்றாண்டுப் பயணத்தில் பல கவிஞர்களை, இலக்கியவாதிகளை உருவாக்கி இருக்கிறது. கவிஞர் பொன்னடியான் அடிமை கொள்ளாத கவி நெஞ்சங்களே இல்லை என்று சொன்னால்கூடத் தவறில்லை.
தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் கவிஞர் ஒருவர், முழுக்க முழுக்க கவிதைக்காகவும், இலக்கியத்துக்காகவும் மாத இதழ் வெளிக்கொணர்வது என்பது எளிதானதல்ல. பாவேந்தர் பாரதிதாசனும், கவியரசு கண்ணதாசனும் கூட இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. "முல்லைச்சரம்' இதழை வெளிக்கொணர்ந்ததை விட, கவிஞர் பொன்னடியானுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கடந்த 46 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து நடத்திவரும் "கடற்கரைக் கவியரங்கம்' மிகப்பெரிய சாதனை. இதில் பங்கு பெறுவது என்பது ஒவ்வொரு தமிழ்க் கவிஞனுக்கும் வாழ்நாள் பெருமை.
தமிழக அரசின் பாரதியார் விருதையும், பாவேந்தர் பாரதிதாசன் விருதையும் பெற்ற கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் தொடங்கிய தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருவது தன் குருவுக்குச் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த வாரம் நடந்த "முல்லைச்சரம்' பொன்விழா நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து நண்பர் ஏ.பி.ராமனால் வந்து கலந்துகொள்ள முடிந்தது. ஆனால், சென்னை அம்பத்தூரிலிருந்து அண்ணா சாலை, ராணி சீதை அரங்கத்தில் நடந்த விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்தை இந்தப் பதிவின் மூலம் தீர்த்துக்கொள்ள முயல்கிறேன், அவ்வளவே!

பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி என்னைப் பார்க்க அலுவலகம் வரும் போதெல்லாம், மறக்காமல் ஏதாவது புத்தகத்தையும் கொண்டு வந்து தருவார். அவரது தேர்வு என்று சொன்னால் அதை உடனடியாகப் படித்து விடுவேன். இந்த வாரம் அவர், நண்பர் மதுரை சிதம்பர பாரதியுடன் வந்திருந்தபோது என்னிடம் தந்த புத்தகம் கவிஞர் சிற்பி எழுதியிருக்கும் "கருணைக்கடல் இராமாநுசர் காவியம்' என்கிற புத்தகம்.
உடையவர் ஸ்ரீஇராமாநுஜர் பற்றியது, அதுவும் கவிஞர் சிற்பியின் கவிதை வரிகளில் என்றால் கேட்கவா வேண்டும். கவிஞர் மீரா கூறுவதுபோல, "வானம்பாடி இயக்கத்தில் வந்ததொரு ஞானம்பாடி' அல்லவா கவிஞர் சிற்பி. காவியத்திற்குள் நுழைவதற்கு முன்னால், இந்நூலுக்கு முனைவர் தெ.ஞானசுந்தரமும், நவபாரதியும் வழங்கியிருக்கும் அணிந்துரைகளைப் படித்துவிட்டு அப்படியே சில மணித்துளிகள் பிரமிப்பில் ஆழ்ந்தேன்.
எந்த அளவுக்கு இந்தக் காவியம் அவர்களைக் கவர்ந்திருந்தால், பாதித்திருந்தால் அவர்கள் இப்படியொரு அற்புதமான அணிந்துரைகளை எழுதியிருக்க முடியும் என்கிற எனது
பிரமிப்புதான் அதற்குக் காரணம்.
மகாகவி பாரதி எழுதிய வசன கவிதை வேறு. இப்போதெல்லாம் எழுதப்படும் வசன கவிதைகளில், வார்த்தை வித்தகத்திற்குத் தரப்படும் முக்கியத்துவம் கவிதை நயத்துக்கும் காவியத்துக்கும் தரப்படுவதில்லை என்பது எனது குறை. முனைவர் தெ.ஞானசுந்தரம் தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல, கவிஞர் சிற்பி மரபுக் கவிதை பாடுவதில் வல்ல புதுக்கவிதை விற்பன்னர் என்பதை "கருணைக்கடல் இராமாநுசர் காவியம்' மூலம் நிரூபித்திருக்கிறார்.
தொண்டை மண்டலம் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, சோழ மண்டலம் திருவரங்கத்தில் வாழ்ந்த இளையாழ்வார் ஸ்ரீஇராமாநுஜரின் காவியத்தைக் கவிஞர் சிற்பி, தான் பிறந்த கொங்கு நாட்டிலிருந்து தொடங்கி இருப்பதுதான் இந்தக் காவியத்தின் தனிச்சிறப்பு. "காட்டு வழிதனிலே' என்கிற முதல் பகுதி, ஸ்ரீஇராமாநுஜரின் பிறப்பிலிருந்து தொடங்கவில்லை. சோழ மன்னர் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, மேல்கோட்டை நோக்கிப் பயணிப்பதில் இருந்து தமது காவியத்தைத் தொடங்குகிறார் கவிஞர்.
வசன நடையில் படித்தால்கூட இந்த அளவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. கவிஞர் சிற்பியின் கவி நடையில் கம்பனும், பாரதியும் ஒருங்கிணைந்து பிரவாகம் எடுத்தாற் போன்ற ஜிலுஜிலுப்பு. வார்த்தைகள் ஏதோ அருவியில் வெள்ளம் வந்து கொட்டுவதுபோல, கவிஞரின் இதயத்திலிருந்து ஊற்றெனத் துள்ளியோடி வருகின்றன. காவியத்துக்குள் நுழைந்த பிறகு, முழுவதும் படித்து முடித்த பின்தான் புத்தகத்தை மூடினேன்.
அடுத்த அரை மணி நேரம், ஆங்காங்கே குறித்து வைத்திருந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன். ஆங்கிலத்தில் "மாஸ்டர் பீஸ்' என்று கூறுவார்கள். "அதி சிறப்பு வாய்ந்த' என்று இதைத் தமிழ்ப்படுத்தலாம். கவிஞர் சிற்பியின் படைப்புகளில் "கருணைக்கடல் இராமாநுசர் காவியம்'தான் அவரது மாஸ்டர் பீஸாகத் திகழும்.
புத்தகத்தின் வடிவமைப்பும் சரி, இதில் இடம் பெற்றிருக்கும் ஓவியங்களும் சரி அற்புதமாக அமைந்திருக்கின்றன. அமையாதா பின்னே? படைத்திருப்பது மானுட இனத்தை உய்விக்க வந்த மகான் கருணைக்கடல் இராமாநுசரின் காவியமாயிற்றே!

""ஓய்வொழிவில்லாமல் படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், பயணிக்கிறீர்கள். எப்படி உங்களால் இப்படிச் செயல்பட முடிகிறது என்று தெரியவில்லை. ஒரு பத்து நாள் ஓய்வெடுங்களேன்'' } இப்படி என்னிடம் நண்பர்கள் பரிவுடன் கூறுவதுண்டு. இதை நண்பர், கவிஞர், பேராசிரியர் ஹாஜாகனியிடம் சொன்னபோது, அவர் மாவோவின் சீன மொழிக் கவிதை ஒன்றை நினைவுபடுத்தினார்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மரங்கள்
விரும்பினாலும்
ஓய்வெடுக்க
காற்று
அனுமதிப்பதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com