திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

"ஆயிழை பாகன்' என யாம் அஞ்சினோம்!

கோவை நூல்களுள் ஒன்று பொய்யாமொழிப் புலவர் இயற்றிய "தஞ்சைவாணன் கோவை'.

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 8:46 pm

கோவை நூல்களுள் ஒன்று பொய்யாமொழிப் புலவர் இயற்றிய "தஞ்சைவாணன் கோவை'. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தஞ்சாக்கூர் என்னும் ஊரை ஆண்ட சிற்றரசனான சந்திரவாணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட கோவை இது.
தலைவியின் களவு வாழ்க்கையைத் தோழி செவிலிவுக்கு அறிவிக்கும் பொருட்டு "களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்' என்ற துறையில் அமைந்த பாடல் ஒன்று, தலைவனை மாதொரு பாகனாக - ஆயிழை பாகனாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
இயற்கைப் புணர்ச்சியின் மூலம் தலைவன் - தலைவி இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. காதல் ஏக்கத்தால் தலைவியின் உடல் மெலிகிறது. மகள் காதல் வயப்பட்டதை அறியாத தலைவியின் தாய், தன் மகளுக்கு ஏதோ நோயொன்று தாக்கியுள்ளது என்று தவறாக நினைத்து, அதற்குப் பரிகாரம் காண முற்படுகிறாள். அப்பொழுது தோழி தலைவியின் களவு வாழ்வை வெளிப்படுத்த "அறத்தொடு நிற்கும்'படியாக நேரிடுகிறது.
அப்பொழுது செவிலியிடம், ""ஒருநாள், நானும் தலைவியும் செழுமையான ஒரு சோலையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது, மதம் பிடித்த யானை ஒன்று எங்களை நோக்கி விரைந்து ஓடி வந்தது. அதைக் கண்டு நாங்கள் மிகவும் அஞ்சி ஓடினோம். பெருங் கூச்சலுமிட்டோம்; பயனில்லை.
அப்பொழுது காளை போன்ற ஓர் இளைஞன் எங்களது அருகில் வந்து, நம் தலைவியைத் தனது இடது புறத்தில் சேர்த்திழுத்துப் பற்றிக்கொண்டான். அத்துடன், அந்த யானையின் மேல் தனது வேலினையும் எறிந்தான். அந்த வேல் பட்ட அளவிலேயே யானையின் உடம்பிலிருந்து குருதி பீரிட்டுப் பாய்ந்தது. அதனால், அவனது மார்பின் வலதுபுறம் செந்நிறமானது. உன் மகளோ அவனது இடது தோளின்மீது சாய்ந்து கிடந்தாள். அவ்வாறு அச்சம் காரணமாகச் சாய்ந்திருந்த அவளுடைய கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணீர், அவளுடைய கண்களில் தீட்டியிருந்த கரிய மையுடன் கலந்து கருநிறமாகி, அந்த இளைஞனது மார்பின் இடது பகுதியைக் கருநிறமாக்கியது. அம்மையே! மை கலந்த கண்ணீர் வழிந்ததால் கருத்திருந்த இடது பாகத்துடனும், யானையின் குருதியால் செக்கச் சிவந்திருந்த வலது பாகத்துடனும் இருந்த அந்த இளைஞன், உமாதேவியைத் தனது இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமான் (மாதொருபாகன் - ஆயிழை பாகன் - அர்த்தநாரீசுவரன்) போலவே காட்சியளித்தான். அதாவது, ஆணுருவும் பெண்ணுருவும் ஒன்றாய்த் தோன்றியவனாய் அவன் காட்சியளித்ததால், அவனை "ஆயிழை பாகன்' என யாம் அஞ்சினோம்'' என்று தோழி, தலைவியின் காதலுண்மையை நயம்பட அவள் தாய்க்கு (செவிலி) எடுத்துக்கூறி அறத்தொடு நிற்கிறாள். இந்நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்தும் அப்பாடல் வருமாறு:

""மண்ணலை யாமல் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவெற்பில்
அண்ணலை யாழிழை பாகனென் றஞ்சின மஞ்சனந்தோய்
கண்ணலை நீரிடப் பாகமு மேல்வந்த கைக்களிற்றின்
புண்ணலை நீர்வலப் பாகமுந் தோயப் பொருதஅன்றே!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.