தஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

"நாநார்த்த தீபிகை' - ஒரு சொற் பல்பொருள் அகராதி!

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கண - இலக்கியங்களைக் கற்க விரும்பினால் முதல் முயற்சியாக "நிகண்டு' நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:35 pm IST

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கண - இலக்கியங்களைக் கற்க விரும்பினால் முதல் முயற்சியாக "நிகண்டு' நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். இன்று "அகராதிகள்' என அழைக்கப்பெறும் சொற்பொருள் விளக்கம் கூறும் நூல்களே அன்று "நிகண்டுகள்' எனப்பெற்றன. அவை செய்யுளிலேயே எழுதப்பெற்றிருக்கும். இந்நிகண்டு நூல்களே
இலக்கண - இலக்கியங்களைக் கற்பதற்குரிய கருவி நூல்களாகும்.
அவ்வகையில் மாணாக்கர்கள் மனனம் செய்த நிகண்டு நூல்களாக சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு, பிங்கில நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வரிசையில் அமைந்ததுதான் "நாநார்த்த தீபிகை' என்னும் நிகண்டு நூலாகும். இந்நூல் 1102 விருத்தப்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது. 5452 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்நூல் ஒரு சொற் பல்பொருள் உரைக்கும் நிகண்டு நூலாகும். இந்நிகண்டு நூலை திருநெல்வேலியைச் சார்ந்த கவிராயர் முத்துசுவாமிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். இவர், திருநெல்வேலிக்கு வந்திருந்த "ஸார்ஜன்ஹ்' உள்ளிட்ட ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், திருவாவடுதுறை மடத்தின் சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர் என அறியப்படுகிறார். முத்துசுவாமிப்பிள்ளை தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது முதலிய மொழிகளைக் கற்றறிந்துள்ளார் என்பது "நாநார்த்த தீபிகை'யின் வழி தெரியவருகிறது.
இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்டிதராய் விளங்கிய சு.அனவரதவிநாயகம் பிள்ளையாவார். 1936-இல் இத்தீபிகை பதிப்பிக்கப்பட்டுள்ளது. ""இப்பதிப்பிற்கு, நூலாசிரியர் மகன் சோமசுந்தரம் பிள்ளையவர்கள் கையால் எழுதிய காகிதப் பிரதியே
ஆதாரமாகும்'' எனப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ""அவர் இந்நூலை பூர்த்தி செய்யாது சிறிது குறையாய் விட்டிருந்தாரோ என்றூகித்தற்கு நியாயஞ்சிலவுண்டு. 149-வது செய்யுளிற் பொருட்பிறழ்ச்சியும், 229, 382-வது செய்யுள்கள் பொருள் தெளிவின்றியிருப்பதும் 159-வது செய்யுளில் ஒரு சொல் ஒரு பொருளோடிருத்தலும், அவரம், ஏட்டை, கடமை, காயல், கிரந்தம், சீவநீ, நேயம், பிரதேசம், மைதுனம் என்னும் சொற்கள் இரண்டு இடங்களில் பொருளுரைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியருக்குத் தாமியற்றிய செய்யுள்களை மீண்டும் நோக்கித் திருத்துவதற்கு அவகாசமில்லாது போயிற்றோ என்றும், செய்யுள்களிற் சில ஆசிரியர் வைத்துப்போன குறிப்புகளைக் கொண்டு பிறர் இயற்றியனவோ என்றும் சங்கையுறச் செய்யும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பில் 689 பக்கங்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்நூல் எப்பொழுது எழுதப்பெற்றது என்ற குறிப்பின்றி உள்ளது. பறந்தலை, பறம்பு, குறிஞ்சி, குறும்பு, குறும்பொறை ஆகிய சொற்களுக்குப் பொருள் கூறும் விருத்தப்பாடல் ஒன்று வருமாறு:

""பறந்தலை பிணஞ்சேர் காடு செம்புலமாம்
பறம்பென்ப பருப்பதங்கொங்கை
குறிஞ்சி செம்முள்ளி போர்மரமோர்பண்
குன்றுசார் நிலத்தொடோ ரிராகம்
குறும்பு பொல்லாங்கு கொடுஞ்சமம்
பாலை நிலத்தினூர் குறும்பரணிருக்கை
குறும்பொறை குறிஞ்சி நிலத்தொடந் நிலத்தூர்
குன்றுகா டென்னநாற் பெயரே'' (செய்.1041)

இச்செய்யுள் காட்டும் பொருள் வருமாறு:
பறந்தலை - பிணஞ்சேர்காடு, பொருகளம்.
பறம்பு - மலை, கொங்கை.
குறிஞ்சி - செம்முள்ளி, ஓர்மரம், ஓர்பண், குன்றுசார் நிலம், ஓர் இராகம்.
குறும்பு - பொல்லாங்கு, போர், பாலை நிலத்தூர், குறும்பர் அரணிருக்கை.
குறும்பொறை - குறிஞ்சி நிலம், குறிஞ்சி நிலத்தூர், குன்று, காடு.
இதுபோன்ற அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பெறுவது இன்றைய இன்றியமையாத் தேவையாகும். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியின் சொல்லாராய்ச்சிக்கும், சொல்வளத்திற்கும் அப்பதிப்பு பெரிதும் பயன்தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.