சென்றவாரத் தொடர்ச்சி...
(ஆ) அடுத்து தந்துள்ள நான்கு சொற்களுக்கான மேற்கோள்கள்:
அடி: "ஊழ் அடி முட்டமும்' (= முறையான வழி/பாதை இல்லாத முட்டு) (குறிஞ்சி.258.)
ஆறு: "ஆறு மயங்கு அருஞ் சுரம்' (கலி.5.3); "நன்றே காதலர் சென்ற ஆறே' (ஐங்.438.1)
இடை: "அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட' (மலைபடு.437)
நெறி: "அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி' (அகநா.258.10)
÷இந்நான்கு சொற்களும் இக்காலத் தமிழில் வழங்கும் சொற்களே. ஆனால், ஒவ்வொன்றின் பயன்பாடும் வேறுபடுவதால் பொருளும் வேறுபடக் காண்கிறோம்.
அடி என்பது இக்காலத் தமிழில் பெயர்ச் சொல்லாகப் பயன்படும்போது அதற்கு வந்து சேர்ந்த பல பொருள்களின் காரணமாக வழி என்னும் பொருள் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஆறு என்பது இக்காலத் தமிழில் பெயரெச்சத்தின் பின் இணைக்கப்படும் பின்னொட்டாக மாறிக் குறிப்பிட்ட வண்ணம் / படி என்னும் பொருளில் வழங்குவது மிகுதி.
அவர் கூறியவாறு செய்
இனி நிகழாதவாறு பார்த்துக்கொள்
இடை என்பது இக்காலத் தமிழில் இடையே அல்லது இடையில் என்னும் வடிவங்களில் பலர் அல்லது பலவற்றின் நடுவில், இடைப்பட்ட இடத்தில் முதலிய பொருள்பட வழங்கக் காணலாம்.
நம்மிடையே ஒற்றுமை இல்லை
இரு கால்களுக்கிடையே நாய் படுத்திருந்தது
நெறி என்பது கண்ணால் காணக்கூடிய பாதையைக் குறிப்பிடாமல், மனத்தால் கருதிப் பார்க்க வேண்டிய வழியைக் குறிப்பதே இன்று மிகுதி. முக்தி நெறி, நன்னெறி.
(இ) பதினைந்தாவதாகத் தரப்பட்டிருக்கும் வழி என்பதற்கான ஒரு சங்க இலக்கிய மேற்கோள்: "பாலை நெடு வழி' (சிறுபாண்.11). வழி என்னும் சொல்தான் இக்காலத் தமிழிலும் பாதையைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்திலிருந்து தொடர்ந்து இன்றுவரை வழங்கி வருகிறது. "கோயிலுக்குப் போக மூன்று வழிகள் உண்டு.'
÷ மேலே கூறியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் பாதையைக் குறிக்கப் பதினைந்து சொற்கள் வழங்கி வந்துள்ளன. இந்தப் பதினைந்து சொற்களுள் பத்துச் சொற்கள் (அத்தம், அதர், இயவு, கடறு, கவலை, சுரம், நடவை, படுகர், புழை, முடுக்கர்) நமக்குப் பழக்கமற்ற சொற்கள்; இக்காலத் தமிழிற்கு வந்து சேராத சொற்கள். சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பத்துச் சொற்களைப் பழக்கப்படுத்திக் கொள்வது பாதை என்பதைப் பொறுத்தவரை தேவை.
÷சங்க இலக்கியத்தில் பாதையைக் குறிக்கும் அடி, ஆறு, இடை, நெறி ஆகிய நான்கும் இக்காலத் தமிழில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் அடி என்பது பல பொருள் தரும் ஒரு சொல்லாக இருந்தாலும், வழி என்னும் பொருள் அதற்கு இன்று வழங்கவில்லை; ஆறு -
பின்னொட்டாக, "படி' "வண்ணம்' என்னும் பொருளிலும் இடை, நெறி ஆகிய இரண்டும் கருத்தளவான இடப் பொருளிலும் வழங்குகின்றன. வழி ஒன்றுதான் அன்றும் இன்றும் பாதையைக் குறிப்பதால் புரியாத சொல், மாறிவிட்ட பயன்பாடு என்னும் தடுமாற்றம் இல்லாத சொல்லாக உள்ளது.
÷பாதை என்பதைக் குறிக்கும் பொருள் ஒத்த பதினைந்து சொற்களுள் பத்து, சங்க இலக்கியங்களில் தங்கிவிட்ட சொற்களாகவும், ஒரே ஒரு சொல் இக்காலத் தமிழ் அறிந்தோர்க்குத் தடுமாற்றம் ஏதும் தராத சொல்லாகவும் இருக்கக் காண்கிறோம்.
÷சங்க இலக்கியத்தின் கடினத்தன்மையின் ஒரு கூறு "ஒரு பொருள் பல சொற்களில்' அடங்கியுள்ளது. இவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் கடினத்தன்மையின் மற்றொரு கதவு திறக்கப்படுகிறது.
அடுத்தடுத்து வரும் ஒரு பொருள் பல சொற்கள் :
ஒரே பொருளைத் தரும் பல சொற்களைப் பழக்கிக் கொண்டாலும் மேலும் ஒரு சிக்கலைச் சந்திக்க நேரிடுகிறது. சில சங்க இலக்கியப் பாடல்களில் ஒரே அடியில் ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் அடுத்தடுத்து வரக் காண்கிறோம். இவற்றைப் புரிந்து கொள்வதில் தயக்கம் உண்டாகிறது.
÷"அதர்' என்பதும் "நெறி' என்பதும் வழியைக் குறிக்கும் சொற்கள். இவை இரண்டும் பாடலின் ஒரே அடியில், "கல் அதர்ச் சிறுநெறி' (அகநா.202.13) என இடம்பெற்றுள்ளன. இதற்குப் பொருள்: "கற்கள் நிரம்பிய வழியாகிய சிறுவழி' இதில் வழி இருமுறை இடம்பெற்றிருப்பினும் கற்கள் நிரம்பிய சிறு வழி என நம் மனம் வழியை ஒருமுறை மட்டும் பதிவு செய்து கொள்கிறது. ஒரு வரியில் அடுத்தடுத்து வரும் அதர், நெறியில் ஏதேனும் நுட்பம் உள்ளதா, உண்டு என்றால் அந்த நுட்பத்தை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கு நமது நிகண்டுகள் ஓரளவிற்கு உதவுகின்றன. சங்க இலக்கியச் சொற்களான அத்தம், கடறு, சுரம் ஆகிய மூன்றையும் திவாகர நிகண்டு அருநெறி (செல்வதற்கு அரிய வழி) என்று சுட்டிக்காட்டுகிறது. கவலை என்பதை அந்த நிகண்டு கவர்த்த நெறி (கிளைகள் போல் பிரிந்து செல்லும் வழி) என்று கூறுகிறது. படுகர் என்பதை இழிந்து ஏறும் நெறி (இறங்கி ஏறும் வழி) என்று கூறுகிறது. நிகண்டுகள் காட்டும் இத்தகைய நுட்பமான பொருள் வேறுபாடுகளைச் சங்க இலக்கியச் சொல்லாட்சிகளுடன் ஒப்பிட்டு உறுதிசெய்து கொள்வது தனியாக மேற்கொள்ள வேண்டிய ஆய்வாகும்.
÷இது போன்று வேறுசில அடுக்குகளும் உள்ளன. "சிறுகுடிச் செல் நெறி வழியின்' (நற்.239.5) என்பதில் நெறியும் வழியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
÷சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கைப் பொருள்களும் இயற்கை நிகழ்வுகளும் சிறப்பிடம் பெறுகின்றன. மனித உறவுகளையும் பண்புகளையும் காட்ட இயற்கை சிறந்த குறியீடாக, உள்ளுறையாக விளங்குகிறது. சேரநாடு உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்த புலவர்களின் பாடல் தொகுதிகளாக சங்க இலக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது. எனவே, இயற்கைப் பொருள்களையும் நிகழ்வுகளையும் குறிக்கும் சொற்கள் மிகுதியாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இக்கட்டுரையில் எடுத்துக்காட்டாகச் சுட்டிய வழிக்குக் கிடைத்துள்ள பல சொற்கள் போலவே இன்னும் பல சொற்களும் இத்தகைய நிலைமையை உடையவையாக இருக்கலாம். அவற்றைத் தொகுத்து வெளிக்கொண்டு வந்தால் சங்காலத் தமிழின் சொல்வளம் நமக்குத் தெரியவரும்.
-பா.ரா. சுப்பிரமணியன்
-க. அறிவுக்கரசு
(மொழி அறக்கட்டளை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








