உமையம்மை விரும்பிய உழவுத் தொழில்
கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியும் அதனால் பிறந்த ஒரு பாடலும் அவர் கற்பனை வளத்துக்கு சிறந்ததொரு சான்று.


கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியும் அதனால் பிறந்த ஒரு பாடலும் அவர் கற்பனை வளத்துக்கு சிறந்ததொரு சான்று.
சிவப்பிரகாச சுவாமிகள் தான் துறவை விரும்பி மேற்கொண்டு, தன் தம்பியர்க்குத் திருமணம் செய்விக்கிறார். துறவியானாலும் புலவராயிற்றே!மணவாழ்த்துப் பாடல் இல்லாமலா? ஐந்து செய்யுள்களால் இடம்பெறும் அவ்வாழ்த்துப் பாக்கள் அவரை "கற்பனைக் களஞ்சியம்' என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன. அவ்வைந்து பாடல்களுள் ஒன்றில், சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்ட உமையம்மை, உழவுத் தொழிலை மேற்கொள்ள எம்பெருமானுக்குஅழைப்பு விடுப்பது புதுமையிலும் புதுமை.
""நாம் உழவுத் தொழிலை மேற்கொள்ளலாம்; திருமால் நமக்கு அதற்கான நிலத்தைத் தருவார். உமது தோழனாகிய குபேரனிடமிருந்து விதைப்பதற்கான விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம்; பலராமனிடம் இருந்து உழவுக்கு இன்றியமையாத கலப்பையைப் பெற்றுக் கொள்வோம்; உழுவதற்கு எமனிடமிருந்து எருமைக்கடாவினை வாங்கிக் கொள்ளலாம்; அதற்கு இணையாக உழுவதற்கு நம்மிடம்தான் இன்னொரு எருது இருக்கிறதே... அதைப் பயன்படுத்திக் கொள்வோம்; கலப்பையில் இணைப்பதற்கு உம்மிடம் உள்ள மும்முனைகளையுடைய சூலத்தைக் கொழுவாக ஆக்கிக் கொள்வோம்; உழவுப் பணிகளுக்குத் தேவையான கயிறு உள்ளிட்ட ஏனைய பொருள்களை நம் அன்பர்களிடமிருந்து இரந்து கொள்வோம்; நாம் விரும்புகின்ற இளைய பிள்ளையாகிய முருகன் இனிமையோடு மாடு மேய்ப்பான். இனிமேலாவது பிச்சை பெற்று வாழும் உமது பழைய தொழிலை விட்டுவிடுங்கள்; உழுது பயிரிட்டு வாழ்தலே நன்று, மிக நன்று'' என்று சிவபெருமானிடம் கூறினாளாம்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்னும் திருக்குறளை மனத்தில் நிறுத்தும் இப்பாடலைக் கற்பனை நயத்துடன் வாழ்த்தாகப் பாடி, "உமையம்மை விரும்பியவாறு உழவுத் தொழிலை மேற்கொண்டு இல்லறத்தில் சிறப்பீர்களாக!' என்று மணமக்களை வாழ்த்துகிறார் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த அறிவுரையும் வாழ்த்தும் நமக்கும்தான்! இதோ அந்தப் பாடல்.
அச்சுதன் அளிப்பவன் நிலம்உமது நேயன்வித்தை
அருளுவன் பலபத் திரன்
அலமுதவு வன்சமன் பகடுஈவன் நம்தமக்கு
ஆனதோர் எருதும் உண்டே
முச்சிரம் அயிற்படையினைக் கொழுவ தாக்குவோம்
மொய்ம்புடன் இழுத் திறுக்க
முந்திய வடக்கயிற் றுடன்மற்றும் நமதுஅன்பர்
முன்போய் இரந்து கொள்வோம்
இச்சையுடை நமதுஇளைய தனயன்ஆ கியகந்தன்
இனிமை யொடுமாடு மேய்ப்பன்
இனிஉழுது பயிரிடுதல் நன்றுநன்று இதைவிட்டு
இரந்துண்பது ஈனம் எனவே
கச்சுமுலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக்
கைக்கொண் டுள்ளத்தில் இதுநற்
காரியமெனக் கருதி மெத்தக் களித்திடும்
கண்ணுதல் உமைக் காக்கவே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...