சோழ நாடாகிய சோழ மண்டலத்திற்கும், தொண்டை மண்டலத்திற்கும் இடையிலுள்ள நிலப்பகுதியை அறிஞர் 'நடுநாடு' என்று அழைப்பர். அந்நடு நாட்டின் மேற்குப் பகுதி மலைப்பகுதியோடு விளங்கியமையால் அதை 'மலைநாடு' அல்லது 'மலையமான் நாடு' என்று வழங்கினர். அந்நாடு பிற்காலத்தில் 'ஜனநாத வளநாடு' என்றும், 'மகதநாடு' என்றும் அழைக்கப்பெற்றது.
அம்மகத நாட்டில் 'வீரை' என்கின்ற ஊரில் அந்தணர் குலத்தில், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அறிஞர் பெருமக்கள் இருவர் வாழ்ந்திருந்தனர். ஆனால், அவ்விருவரின் இயற்பெயர் தெரியவில்லை. இருப்பினும், அவ்விருவருடைய சிறப்புப்பெயர் சொரூபானந்தர் என்றும், தத்துவராயர் என்றும் அறியப்படுகிறது. மேலும், அவ்விருவரும் மாமனும் மருமகனும் ஆகிய உறவு முறையினை உடையவர் என்றும், இரட்டைப் புலவர் போல ஒத்து இயங்கி வாழ்ந்து வந்தனர் என்றும் அறிய முடிகிறது.
இத்தகு காலத்தில் சிவப்பிரகாசர் என்னும் பெயருடைய மிகப்பெரிய ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருப்பைஞ்ஞிலி, திருவல்லரை என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையில் 'கோபத்தம்' என்னும் ஊருக்கு அருகில் மரங்கள் அடர்ந்த பகுதியில் தவச்சாலை ஒன்றை நிறுவி, தவஞ்செய்து வாழ்ந்து வந்தார்.
சிவப்பிரகாசரின் பெருமையை நன்குணர்ந்த சொரூபானந்தரும், தத்துவராயரும் அவரைக் கண்டு வணங்கி, அருளுபதேசம் பெற்றனர். மேலும், அவ்விருவரும் பிற்காலத்தில் தில்லைக்கும் (சிதம்பரம்) திருமுதுகுன்றத்துக்கும் (விருத்தாசலம்) இடையிலுள்ள 'எறும்பூர்' என்னும் பதியில் திருமடம் அமைத்துக்கொண்டு அங்கு தவவாழ்வு வாழ்ந்து வந்தனர்.
சொரூபானந்தர், தமிழிலுள்ள பல ஞான நூல்களை எல்லாம் கற்றுத்தேர்ந்து அவற்றிலுள்ள சிறந்த பாடல்களை எல்லாம் எடுத்து, முறைப்படுத்தி ஒரு திரட்டு நூலை உருவாக்கினார். அத்திரட்டு நூலுக்குத் தம்முடைய குருவின் பெயரை வைத்து 'சிவப்பிரகாசப் பெருந்திரட்டு' என்னும் பெயரில் வெளிப்படுத்தினார்.
'சிவப்பிரகாசப் பெருந்திரட்டு' என்னும் ஞான நூல் 'பெருந்திரட்டு' என்னும் பெயரில் வழக்கில் இருந்து வருகிறது. இப்பெருந்திரட்டு கலைக்கட்டளை என்றும், அனுபவக்கட்டளை என்றும் இரண்டு பிரிவாக அமைந்துள்ளது. இவற்றுள் கலைக்கட்டளைப் பொது என்று கூறி அது அபர ஞானத்தை உணர்த்தும் என்றும் கூறுவர்.
'சிவப்பிரகாசப் பெருந்திரட்டு' முற்றிலும் திருமந்திரத்தைப் பின்பற்றியதாகும். திருமூலரின் தத்துவங்களை ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர் பெருந்திரட்டைப் பெருந்துணையாகக் கொள்ள வேண்டும். மூதறிஞர் அடிகளாசிரியர் பெருந்திரட்டில் நடுநாயக மணிபோல் விளங்கும் உபதேசப் பணையை விளக்கத்துடன் 2008இல் பதிப்பித்துள்ளார்.
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, 1912ஆம் ஆண்டில் சென்னை கோமளேசுவரன் பேட்டை, சச்சிதானந்த அச்சுக் கூடத்தில் ஐநூற்றி எண்பத்தெட்டு பக்கங்களுடன் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. பெருந்திரட்டில் அஞ்ஞான விருத்தி, அருனெறி விளக்கம், அனந்த போதம், ஆனந்தபோதம், ஆன்மப் பிரகாசம், தத்துவசித்தி, மூலசித்தி, யோகசித்தி, விஞ்ஞான நிலையம், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், திருவாய்மொழி உள்ளிட்ட 146 நூல்களிலிருந்து 2821 பாடல்களைத் திரட்டி வழங்கியுள்ளனர். மேலும் நூலின் முகவுரையில், ''இப்பெருந்திரட்டிற்காட்டிய நூல்களுள் மாண்டொழிந்தன பலவாம்; ஜீவத்திருப்பன சிலவாம்; ஜீவித்திருப்பனவற்றுள்ளும், அச்சு வாகனமேறியிருப்பவை மிகமிகச் சிலவேயாம்'' என்ற குறிப்பு (பக்.1,1.12.1911) உள்ளது.
பெருந்திரட்டில் குறிப்பிடப்பெற்ற 146 நூல்களில் பல நூல்கள் அழிந்தன போலும். ஆதலால், 146 நூல்களிலிருந்து திரட்டப்பெற்ற 2821 பாடல்களை மறுபதிப்பாகப் பதிப்பித்து வழங்குதல் பெருங்கடமையாகும். இப்பொழுது இருப்பது இப்பதிப்பு ஒன்றுதான். ஆதலால், அதை அடியாகவும் மூலமாகவும் வைத்துக்கொண்டு அனைத்துப் பாடல்களையும் பதிப்பிக்க வேண்டும்.
பெருந்திரட்டு, 'விஞ்ஞான நிலையம்' என்னும் பெயரில் ஒரு நூலைக் எடுத்துக்கூறி, அந்நூலிலிருந்து ஐந்து பாடல்களை மட்டும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், நம் தமிழ்மொழியில் விஞ்ஞான நிலையம் என்னும் பெயருடைய அந்நூல் எங்கும் கிடைக்கவில்லை என்பதும், அழிந்துபட்ட நூல்களுள் அதுவும் ஒன்று என்பதும் தெரிகிறது. இந்நூலில், தாயின் வயிற்றில் ஆண் குழந்தை உண்டாவதற்கும், பெண் குழந்தை உண்டாவதற்குமான நுட்பமான பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. இந்நூல் பல அரிய அறிவியல் உண்மைகளையும் உணர்த்துகிறது.
உயிர் உடம்பைவிட்டு வெளியே புறப்படும்போது எவ்வாறு போகும் என வினவின், மூக்கின் வழியாகவோ அல்லது வாயின் வழியாகவோ அல்லது கண்ணின் வழியாகவோ உயிர் பிரியுமாம். இச்செய்தியை, ''பிராணன் புறப்படுங்கால் மூக்கினொடே வாக்கினூடே முன்கண்ணோடே'' என்றவாறு பெருந்திரட்டு (பா.108) குறிப்பிட்டுள்ளது.
பழைய நூல்களில் காணப்பெறும் கருத்துகளையும், மக்கள் பயிலாத நூல்களில் காணப்பெறும் கருத்துகளையும் தேடித் தொகுத்து விளக்குவது பெருந்தொண்டாகும். அவ்வகையில், சிவப்பிரகாசப் பெருந்திரட்டை உயிர்ப்பிக்க வேண்டும்.
-முனைவர் அ. சிவபெருமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


