டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கவி பாடலாம் வாங்க - 11: அகவல்

ஒசையே பாட்டின் உருவத்தைச் செவ்வை ஆக்குகிறது. பழகிய காதுக்குப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில், தவறு இருந்தால் உடனே புலப்படும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:13 pm

கி.வா. ஜகந்நாதன்

ஒசையே பாட்டின் உருவத்தைச் செவ்வை ஆக்குகிறது. பழகிய காதுக்குப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில், தவறு இருந்தால் உடனே புலப்படும். பாட்டுக்குச் சரியான உரைகல் பாட்டுக் கேட்டுப் பயின்ற காது. அதனால்தான் கவி பாடப் புகுகிறவர்கள் பல பாடல்களை வாயாரப் பாடிப் பழக வேண்டுமென்று சொல்கிறேன். பொருள், இலக்கணம் ஆகியவற்றைப் பின்பு கவனித்துக் கொள்ளலாம். ஓசை சரியாக இருந்தால் இலக்கணமும் சரியாக இருக்கும். கவியின் ஓசையை விருத்தத்தில் தெளிவாகக் காணலாம். அதனால்தான் ஆசிரிய விருத்தங்களைப் பற்றியே இதுவரையில் எழுதி வந்தேன்.
தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும். அவற்றை நாற்கவி யென்று சொல்வார்கள். வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை அவை. யாப்பிலக்கண நூல்களில் அந்த வரிசையில் இலக்கணத்தைச் சொல்லியிருப்பார்கள். பாவுக்கு இனமாகச் சில பாடல்கள் உண்டு. அவற்றைப் பாவினம் என்று புலவர் கூறுவர். அவை தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று வகை. ஒவ்வொரு பாவுக்கும் இந்த மூன்று இனங்களும் உண்டு. இதுவரையில் நாம் கவனித்தவற்றின் பெயரே அவை இன்ன பாவின் இனம் என்பதை உணர்த்தும். 
ஆசிரியப்பாவின் இனமாதலின் ஆசிரிய விருத்தம் என்று பெயர் வந்தது. பிற்காலத்துக் காப்பியங்களிலும் பிற வகை நூல்களிலும் புலவர்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களையே ஆண்டிருக்கிறார்கள். தேவார காலத்துக்குப் பிறகு காவிய காலம் தொடங்கியது. அது முதல் கவிதையுலகில் ஆசிரிய விருத்தமே அரசாட்சி செய்து வருகிறது.
பாரதியார் இயற்பாட்டைப் போலவே இசைப் பாட்டையும் எளிதில் ஆண்டார். இசைப் பாடல்களில் இசைக்குத் தலைமை இருக்கும்; கவிச்சுவை இரண்டாம் பட்சமாக இருக்கும். பாரதியார் செய்த பெரிய புரட்சி, இசைப் பாடல்களாகிய கண்ணிகளையும் சிந்துகளையும் இலக்கியச் சுவை உடையனவாகச் செய்தது. தேவாரம் எப்படிப் பண் அமைந்து இசைப்பாவாகவும், சிறந்த கவிச்சுவை அமைந்து இலக்கியப் பனுவலாகவும் இருக்கிறதோ அவ்வாறு பாரதியார் இசைப்பாட்டு வகைகளைக் கவிச்சுவை உடையனவாக அமைத்தார். அவர் பாடல்களிலும் ஆசிரிய விருத்தங்கள் பல உண்டு.
சங்க காலத்தல் ஆசிரியப்பாவே மிகுதியாக இருந்தது, இன்று கிடைக்கும் சங்க காலத்து நூல்களில் உள்ள பாடல்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசிரியப் பாக்களே முதலிடம் பெறுவதைக் காணலாம்.
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்வார்கள். அகவல் என்பதற்கு அழைத்தல் என்று பொருள். ஒருவரை வரவேற்பதற்கும் அழைப்பதற்கும் ஏற்ற ஓசையமைப்பை உடையது அகவல். அகவலில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும். அதனால் அவற்றை ஆசிரியச்சீர், அகவற்சீர் என்று வழங்குவர்; இயற்சீர் என்றும் அதைக் கூறுவது உண்டு.
ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியும் நான்கு ஈரசைச் சீர்களால் அமைந்திருக்கும். இடையிலே காய்ச்சீர் - நேரில் முடியும் மூவகைச் சீர்கள் - வரலாம். அகவல் மூன்றடி முதல் பல அடிகளால் வரும்.

""வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மைவந் தெய்துக தீதெலாம் நலிக...''

இந்தப் பாரதியார் பாட்டு அகவல் அல்லது ஆசிரியப்பா. அகவலில் ஒவ்வோரடியிலும் மூன்றாவது சீரில் மோனை அமைந்தால் அழகாக இருக்கும். எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா என்று பெயர் பெறும். கடைசி அடிக்கு முன் அடி மாத்திரம் மூன்று சீர்களால் அமைய, மற்ற அடிகளெல்லாம் நாற்சீர் அடிகளாக இருப்பது நேரிசை யாசிரியப்பா. இந்த இரண்டுமே நூல்களில் அதிகமாக உள்ளவை நடு நடுவே இரண்டு சீரடி, மூன்று சீரடியாகச் சிலவற்றைப் பெற்று மற்றவை நாற்சீரடியாக இருப்பது இணைக்குறளாசிரியப்பா. எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக அமைய, எந்த அடியை எங்கே மாற்றி வைத்தாலும் பொருள் மாறாமல் இருப்பது அடிமறி மண்டில ஆசிரியப்பா. இந்த இரு வகைளும் இலக்கியத்தில் மிகுதியாக வருவதில்லை.

""நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே''

இது குறுந்தொகையென்னும் சங்கநூற் பாட்டு. இதில் ஈற்றயலடியாகிய மூன்றாவது அடி முச்சீர் அமைந்தது. அதனால் இது நேரிசை ஆசிரியப்பா. சங்க காலத்து அகவலின் ஓசையே ஒரு தனிச்சிறப்புடையது. இந்தப் பாட்டின் அடிகளுக்கு ஓசை யூட்டிப் பார்க்கலாம்.

""நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
கருவிளம் புளிமா கூவிளம் புளிமாங்காய் 
நீரினு மாரள வின்றே சாரல்
கூவிளம் கூவிளம் தேமா தேமா 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
புளிமா புளிமா தேமாங்காய் 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
புளிமா புளிமா கூவிளங்காய் தேமா'' 

இந்த ஆசிரியப்பாவில் கூவிளம், கருவிளம், தேமா, புளிமா என்ற நான்கு ஈரசைச் சீர்களும் வந்தன. மூன்று இடங்களில் காய்ச்சீர்கள் வந்தன. முதல் அடியில் நான்காம் சீரும், மூன்றாம் அடியிலும் கடைசி அடியிலும் மூன்றாம் சீரும் காய்ச்சீராக அமைந்ததைக் காண்க. இரண்டு இரண்டு அடிகளில் எதுகை அமைந்தால் ஆசிரியப்பா அழகாக அமையும்.

""அகவற் பாக்க ளவைநான் காகும்;
தகநாற் சீர்கள் சார்ந்து நடக்கும்;
இரண்டிரண் டடிகளில் எதுகை யமைந்தால்
திரண்டநல் ஓசை சிறந்தமை வுறுமே''

இதில் இரண்டடிகளில் ஓரெதுகையாக அமைந்திருப்பதைக் காண்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா.

""மாந்தர்கள் அன்பார் வாழ்வடை வாரே;
சாந்தியே பெரிய தாரகம் ஆமே;
ஆந்துயர் பொறுத்தல் அரும்பெருந் தவமே;
காந்திவாழ் வெடுத்துக் காட்டா மன்றே''

இதில் நான்கு அடிகளில் எதை எங்கே வைத்து எழுதினாலும் பொருள் மாறுவதில்லை. அடியை எப்படியும் மறித்துப் போடலாம். இது அடிமறி மண்டில ஆசிரியப்பா. அகவலில் மோனை இடத்தில் எதுகை வருவதுண்டு.

""வீரரும் வேந்தரும் போரினிற் புக்கார்;
மக்களெல் லோரும் தொக்குவாழ்த் தினரே;
வெற்றிமா மகள்கைப் பற்றினன் அரசன்;
சால்விற லின்றித் தோல்வியுற் றவர்கள்
புவியுடல் போட்டன ரவிந்தொழிந் தாரே''

இந்த ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியிலும் மூன்றாம் சீரில் எதுகை வந்தது; அதாவது முதற்சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக இணைந்து வந்தன. இதற்குப் பொழிப் பெதுகை என்று பெயர். எதுகை வந்தால் அங்கே மோனை இல்லையே என்ற குறை இராது.

(தொடர்ந்து பாடுவோம்...) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.