'விழுமியம்' எனும் சொல் இன்று தமிழ்மொழி வழக்கில் மிகுந்து காணப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த குணங்கள், பண்பு நலன்கள், அவன் மேற்கொள்ளும் அறங்கள் முதலானவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே விழுமியம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால், இச்சொல்லின் பொருள் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம் ஆகியவற்றில் வேறு வகையில் இடம்பெற்றுள்ளது.
தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் விழு என்பதே - விழுமியம் என்ற சொல்லின் வேர்ச்சொல்லாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்தில் விழு எனும் சொல் சிறப்பான, உயர்வான, மேன்மையான, பெரிய முதலான ஒத்த பொருள்களைத் தரும் பெயரடையாகத்தான் பயன்படுத்தப்பட்டது.
விழு எனும் வேர்ச்சொல்:
தொல்காப்பிய நூற்பா, ""விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்'' (தொல்.சொல்.உரி.55) என்பதாகும். இந்நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், ""விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்'' என்கிறார். இதற்கு உரையெழுதும் இளம்பூரணர், ""விழுமியர் என்றக்கால் சீரியர் என்பதாம். விழுமமுற்றிருந்தார் என்றக்கால் இடும்பை யுற்றிருந்தார் என்பதாம்'' எனக் கூறுகிறார். விழுமம் என்ற சொல்லிலிருந்து விழுமியர் என்ற சொல்லை இளம்பூரணர் தருவித்துக் கொள்கிறார்.
இந்நூற்பாவிற்குச் சேனாவரையர், ""விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு'' (நாலடி 159) எனவும், ""வேற்றுமை இல்லா விழுத்திணை பிறந்து'' (புறம் 27) எனவும், ""நின்னுறு விழுமம் களைந்தோன்'' (அகம் 170) எனவும், ""விழுமம் முறையானே சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு'' எனவும் உரை வகுக்கிறார். ÷
சேனாவரையர் விழுமியோர், விழுத்திணை என்ற இரு சொற்களை விழுமம் என்ற சொல்லிலிருந்து தருவித்துக் கொள்கிறார். நச்சினார்க்கினியரும் சேனாவரையரையே பின்பற்றுகிறார். இவற்றை நோக்கும் போது "விழு' என்பதே இவற்றுக்கான அடிப்படை வேர்ச் சொல்லாகும் என்பது தெளிவாகிறது. சொல்லதிகாரத்தின் உரியியலில் விழுமம் என்ற உரிச்சொல்லின் மூவகைப் பொருள் நிலைகளைச் சுட்டிய தொல்காப்பியர், பொருளதிகாரத்தில் விழுமம் என்ற சொல்லை நான்கு இடங்களிலும், விழு எனும் சொல்லை ஓரிடத்திலும், விழுமியது என்ற சொல்லை மற்றோர் இடத்திலும் கையாள்கிறார்.
"தலைவரும் விழுமநிலை
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும்
தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்'
என வரும் நான்கு இடங்களிலும் தொல்காப்பியர் விழுமம் என்ற சொல்லைத் துன்பம் என்ற பொருளிலும், விழு எனும் சொல்லைச் சிறந்த எனும் பொருளிலில் பெயரடையாகக் கையாள்கிறார். விழுமியது எனும் சொல்லைச் சிறந்தது எனும் பொருளில் கையாள்கிறார்.
தொல்காப்பியத்தில் விழு என்ற சொல் பெயரடையாகவும் விழுமம் என்பது குறிப்புப்பொருள் உணர்த்தும் உரிச்சொல்லாகத் துன்பம் என்ற பொருளிலும் விழுமியது என்ற சொல் சிறப்பானது எனும் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சீர்மை, இடும்பை ஆகிய இரண்டை மட்டுமே விழுமம் என்ற உரிச்சொல்லின் பொருள்களாக இளம்பூரணர் கொள்கிறார். ஆனால், சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் அவற்றோடு சிறப்பு என்ற பொருளை மூன்றாவதாகச் சேர்த்துக் கொள்கின்றனர். தொல்காப்பியர் விழுப்புகழ் என்ற ஒரு சொல்லைப் புறத்திணையியலில் (தாவா விழுப்புகழ்) சிறப்பான, மேன்மையான, உயர்வான, புகழ் எனும் பொருள்களில் பயன்படுத்துகிறார்.
ஆனால், விழுமம் என்ற உரிச்சொல்லைத் தனிச் சொல்லாகப் பயன்படுத்தும் தொல்காப்பியர் அதை இடும்பை, துன்பம் என்ற பொருளிலேயே பொருளதிகாரத்தில் பயன்படுத்துகிறார். மற்ற இரண்டு பொருள்களான சீர்மை, சிறப்பு என்ற பொருளில் எங்கும் இச்சொல் தொல்காப்பியரால் பயன்படுத்தப்படவில்லை.
சங்க இலக்கியத்தில் "விழுமியம்' எனும் சொல்லாட்சி:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் விழு என்ற என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட விழு, விழும், விழுமம், விழுமிதின், விழுமிது, விழுமிய, விழுமியோர், விழுமியோன், விழுமியம் ஆகிய ஒன்பது சொற்கள் இடம்பெற்றுள்ளன. விழு எனும் சொல் சங்க இலக்கியப் பாடல்களில் மிகுந்த அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் ஒரு சொல்லின் முன்னொட்டாக (Prefix) நின்று ஒரு சொல் நீர்மைத்ததாக அச்சொல்லின் மேன்மையைக் குறிக்கும் வகையில் சிறப்பான, உயர்வான, மேன்மையான, சீர்மையான, சீரிய, பெரிய, விழுமிய முதலான ஒத்த பொருள்களைப் பயந்தே நிற்கும் உயர்தகவுச் சொல்லாக அமைகிறது.
அடுத்த நிலையில், "விழுமம்' என்ற சொல் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் இடும்பை, துன்பம், துயரம், வருத்தம் முதலான பொருள்களில்தாம் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய சீர்மை, சிறப்பு எனும் பொருள்களில் எங்கும் இடம்பெறவில்லை. மேலும், இச்சொல்லின் அடிப்படையில் விழுமியோர், விழுமியோன், விழுமியம் என வரும் சொற்கள் படர்க்கையிலும் தன்மையிலும் பெயர்ச் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.
விழுமியம் - இன்றைய பொருள் தகுதி:
விழுமியம் என்ற சொல்லுக்கான பொருளாக மதிப்பு என்பது இக்காலத்தில் வழங்கப்படுகிறது. மதிப்பு அல்லது விழுமியம் என்பதற்கான நேரடியான ஆங்கிலச் சொல்லாக Value என்பது அமைகிறது. அ.சிதம்பரநாதன் செட்டியார் பதிப்பித்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்-அகராதியில் Value என்ற ஆங்கிலச் சொல்லுக்கு விழுமியம் என்ற சொல் இடம்பெறவில்லை. இந்த அகராதி 1965ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு பாலூர் கண்ணப்ப முதலியார் தொகுத்து எழுதிய தமிழ் இலக்கிய அகராதியில் விழுமியம் என்ற சொல்லே இடம்பெறவில்லை. எனவே, தமிழ் இலக்கிய அகராதிகளில் 1957 வரை இப்போது வழங்கப்படும் பொருளில் விழுமியம் என்ற சொல் இடம்பெறவில்லை என்பதும், அதுபோல் 1965 வரை Value எனும் ஆங்கிலச் சொல்லுக்கு விழுமியம் எனும் தமிழ்ச்சொல் பொருளாகக் கூறப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
"மதிப்புகள்' என்ற பொருளைத் தரும் "விழுமியம்' என்ற சொல் மிகப்பழைய சொல்லாக இருந்தாலும் அன்றைக்கு அதன் பொருள் நிலை வேறாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அதன் பொருள்நிலை அடிப்படையிலிருந்து விலகாத ஆனால், விரிவடைந்த வேறொரு பொருள் நிலையைக் கொண்டு விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









