இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும்-1

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெரிந்து கொள்வது
 இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும்-1
Updated on
2 min read

கவி பாடலாம் வாங்க - 18
நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெரிந்து கொள்வது மிக எளிது. நான்கு அடிகளை உடைய வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள் அல்லாதன இன்னிசை வெண்பாக்களாம். இன்னிசை வெண்பாக்களில் வெண்பாவுக்குரிய பொது இலக்கணம் அமைந்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
 1. வெண்டளையே வருதல், 2. ஈற்றடி முச்சீரால் வருதல், 3. ஈற்றுச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்பாட்டில் அமைதல் என்ற மூன்று அடிப்படையான இலக்கணங்கள் இன்னிசை வெண்பாவிலும் அமைய வேண்டும்.
 நேரிசை வெண்பாவில் இரண்டாவது அடியின் நான்காஞ் சீர் தனிச் சொல்லாக இருக்கும்; பாட்டு முழுவதும் ஓரெதுகையாகவேனும், முன் இரண்டடி ஓரெதுகை பின்னிரண்டடி மற்றோர் எதுகையாக இரண்டெதுகையாகவேனும் வரும். இந்த இலக்கணங்களில் எது வேறுபட்டாலும் அது இன்னிசை வெண்பா ஆகிவிடும். அப்படி வரும் இன்னிசை வெண்பாக்களை ஒருவாறு பின்கண்ட வண்ணம் வகுக்கலாம்.
 
 1. தனிச்சொல் இல்லாமல் ஓரெதுகையால் வருதல்.
 
 வண்ணத்தைத் தேடி மலியத் தொகுத்துவைத்துக்
 கிண்ணத்தி லூற்றிக் கிழியெடுத்துத் தூரிகையை
 நண்ணவைத்துத் தீட்டும் நயமில்லா ஓவியனே
 எண்ணமெங்கே வைத்தாய் இசை.
 
 இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா. இந்தப் பாடலில் இரண்டாம் அடி இறுதியில் தனிச்சொல் வந்திருந்தால் அது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.
 2. தனிச் சொல்லே இன்றி இரண்டு, மூன்று, நான்கு விகற்பங்களால் வருதல்.
 
 தெள்ளுதமிழ் நூலுள் திருவள் ளுவர்தந்த
 ஒள்ளியநூ லாங்குறள்போல் உள்ளதுவேறுண்டோசொல்
 வையம் புகழ்ந்து மதிக்கும் கருத்துடைத்தால்
 செய்யதமிழ்ப் பாவும் சிறந்து.
 
 இது இரண்டு விகற்பத்தால் வந்தது.
 
 அருணகிரி நாதர் அயில்வேல் முருகன்
 தருணஇளந் தாமரைத்தாள் சார்ந்தின்பம் பெற்றதனை
 வண்ணத் திருப்புகழால் வாய்மலர்ந்தார் இவ்வுலகில்
 பாடிமகிழ் வுற்றார் பலர்.
 
 இந்த வெண்பா முன் இரண்டடியும் ஓரெதுகையாய், பின் இரண்டடியும் தனித்தனி எதுகையாய் வந்தமையின் மூன்று விகற்பமுடைய இன்னிசை வெண்பா ஆயிற்று.
 
 கன்னிக் குமரி கவின்சேரும் தென்னெல்லை
 வேங்கடமாம் குன்றம் விளங்கும் வடவெல்லை
 இவ்விரண்டி னூடே எழில்பெறவே ஓங்குதமிழ்
 சான்றோர் வழிபட்ட தாய்.
 
 இந்த இன்னிசை வெண்பா, நான்கு அடிகளும் வெவ்வேறு எதுகையாக வந்தமையின் நான்கு விகற்பம் உடையதாயிற்று. இங்கே காட்டிய மூன்றும் பலவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 
 3. தனிச்சொல் இரண்டாம் அடியிலன்றி மற்ற அடிகளில் வருதல்.
 
 குன்றம் கவினும் குறிஞ்சியிலே - நின்றபிரான்
 வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்
 அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென
 நண்ணுவார்க் கெய்தும் நலம்.
 
 இதில் முதலடியில் தனிச்சொல் வந்தது.
 
 கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை
 மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோ லங்கொண்டு
 வல்ல முருகன் வருமெழிலை - நல்லபடி
 பார்த்தார் உளம்போம் பறி.
 
 இதில் மூன்றாம் அடியில் தனிச்சொல் வந்தது.
 
 மழையின்றி மாநிலர்த்தார்க் கில்லை மழையும்
 தவமிலா ரில்வழி இல்லைத் - தவமும்
 அரசிலா ரில்வழி யில்லை - அரசனும்
 இவ்வாழ்வா ரில்வழி இல்.
 
 இதில் அடிதோறும் தனிச்சொல் வந்தது.
 
 4. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தாலும் நான்கு விகற்பத்தாலும் வருதல்.
 
 காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான்
 பூவிரிதாள் போற்றுகின்ற புண்ணியர்க்கு - நாவிரியும்
 பலபுகழும் நீளும் பரந்த பொருளடையும்
 ஏற்றமன்றித் துன்பம் இலை.
 
 இது இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று, மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 
 நல்லன வெல்லாம் நனிசெய்வோம் என்றிருத்தல்
 பூவில் இயலும் பொருளன்றே - ஆவதனால்
 நாஞ்செய்த யாவையுமே நல்லனவென் றாக
 ஒழுகினால் மேன்மை யுறும்.
 
 இது இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று நான்கு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 வெண்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்து நேரிசை வெண்பாவுக்கு வேறுபட்டு நிற்கும் நாலடியுள்ள எல்லா வெண்பாக்களும் இன்னிசை வெண்பாக்கள் ஆம். இந்த வேறுபாடு எதுகையாகப் பார்த்தால் தெரிய வரும்.
 
 (தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com