திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

"இரு'மைக்கும் உதவிய அல்லி!

பெண்களின் வாழ்வில் இளமை, தாய்மை என்பன மிகவும் இனிமை தரக்கூடியன. ஆனால், முதுமையும் கைம்மையும் மிகவும் கொடியன என்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

News image
Updated On :23 பிப்ரவரி 2019, 9:17 pm

பெண்களின் வாழ்வில் இளமை, தாய்மை என்பன மிகவும் இனிமை தரக்கூடியன. ஆனால், முதுமையும் கைம்மையும் மிகவும் கொடியன என்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

பொதுவாக, மலர்கள் பெண்களின் வாழ்க்கை நிலைகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாகும்.  அதேபோல  நல்லன, கெட்டன என்ற இருநிலை நிகழ்வுகளுக்கும் உதவுவன அம்மலர்கள். நல்லாசிரியரின் இலக்கணம் கூற வந்த நன்னூலார், "மலர்நிகர் மாட்சியும்' என்று கூறி, எல்லா வகையிலும் மேன்மையுடைய மலரின் மாண்பினை நல்லாசிரியருக்கு உவமையாகக் கூறியுள்ளார்.

பூக்களைப் பொருத்தவரை, செடிப்பூ, கொடிப்பூ, கோட்டு (மரக்கிளை)ப்பூ என்று அவற்றைப் பலவகைப்படுத்துவர் சான்றோர். அவற்றுள் "அல்லி' என்பது, நீர் நிலைகளில் வளர்ந்து அழகுறக் காட்சியளிக்கும் கொடிப்பூ வகையாகும். செம்மை, வெண்மை என்ற இருவேறு வண்ணங்களில் பேசப்பட்டாலும், பயன்தரும் தன்மைகளில் அவ்வல்லிகள் ஒத்த தன்மையனவே ஆகும்.

சங்ககாலப் பெண்டிர் தழையாடை உடுத்துவது வழக்கம். தழைகள் உரியவாறு தொடுக்கப்பட்டு, அத் தொடையலைப் பெண்கள் தமது ஆடையாக அணிந்து வந்தனர். இதற்குப் பயன்படும் தழைகளைத் தந்து உதவிய தாவர வகைகளுள் ஒன்று அல்லிக் கொடி. வெள்ளையல்லிக் கொடியில் செழுமையாக வளர்ந்திருந்த தழைகளால் ஆகிய ஆடையினை, அக்கால மகளிர் அணிந்திருந்தனர். இச்செய்தியைக் குறுந்தொகைப் பாடலொன்று,

அயலவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
வரிமே சேயிழை அந்தில்
கொழுநற் காணிய வருமே (பா.293)
என்ற அடிகளில் சுட்டுகின்றது. இவ்வாறு, அல்லிக் கொடியானது, 
மகளிர் அவர்தம் இளமையில் ஆடையாக அணிவதற்கெனத் தழையினைத் தந்தது என்பது, அந்த அல்லிக்குப் பெருமைதான்!
இளமைக் காலத்தில் பெண்ணின் மானம் காக்க உதவும் அந்த அல்லியானது, ஒருவேளை அந்தப் பெண்ணே தன் ஆருயிர்க் கணவனை இழந்து "கைம்மை' நோன்பு நோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டால், அப்பொழுது அவள், உண்டு உயிர்த்திருப்பதற்குத் தனது புல்லரிசியைத் தந்தும் உதவும் என்கிறது ஒரு பாடல்.

இவ்வாறு இருவேறு நிலைகளில் உதவும் அவ் அல்லியைப் பார்த்து ஒரு பெண் இரங்கிப் பாடுவது போலப் பாடுகின்றார் ஓக்கூர் மாசாத்தியார் என்ற புலவர். புறநானூறு இலக்கியத்தில் வரும் அப்பாடல் இதோ:

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே, இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே(248)
அதாவது, "நான் இளமையினளாக இருந்த முற்காலத்தில் அல்லிக் கொடிகள், ஆடையாகத் தொடுத்து அணிவதற்காக எனக்குத் தமது தழைகளைத் கொடுத்து உதவின. ஆனால், பெரிய செல்வந்தனான என் தலைவன் இறந்து போய்விட்டதனால், நான் கைம்பெண்ணாகித் துன்புற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் எனக்கு, நான் உண்பதற்கெனத் தன்னிடத்தில் உண்டாகும் அரிசியைத் தந்து உதவும் அல்லியானவை, இரங்கத்தக்கன' என்று வருத்தமுறும் கைம்பெண் ஒருத்தியின் இயல்பில் நின்று பாடுகின்றார் அப்புலவர்.

பெண்ணின் இளமைக்கும், கைம்மைக்கும் முறையே தழையினையும், புன்மையான அரிசியினையும் தந்து உதவும் வெள்ளையல்லிக் கொடியின் பண்பினை அதே புறநானூறு இலக்கியம்,
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத் 
தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியாத
சிறுவெள் ளாம்பல் அல்லி யுண்ணும்
கழிகல மகளிர் போல
வழிநினைந் திருத்தல் அதனினும் அரிதே (280)
என்ற மற்றொரு பாடற்பகுதியிலும் சுட்டுகின்றது.

ஒருவரின் வாழ்விலும், அவரது தாழ்விலும் ஒருங்கேயிருந்து உதவி 
செய்பவன்தான் உன்னதமான மனிதன். ஆறறிவுடைய இவ்வுன்னதமான மனிதனைப் போலவே, ஓரறிவு உடைய உயிரினமான அல்லிக் கொடியும், சங்ககால மகளிரின் வாழ்விலும், தாழ்விலும் உதவிற்று என்பதை இத்தகைய பாடல்களின் வழி அறியும்பொழுது எந்த மனமும் நெகிழாதிருக்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.