Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் கலாரசிகன்

  By DIN  |   Published on : 14th April 2019 01:53 AM  |   அ+அ அ-   |    |  

  mm1

  நமது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை எத்தனை பேரையோ சந்திக்கிறோம்; பலருடன் பழகுகிறோம். ஆனால், ஒரு சிலர் மட்டுமே நமது நினைவுகளில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போது ஏற்படுகின்ற துக்கமும் விசனமும் வார்த்தைகளில் வடிக்கக்கூடியவை அல்ல.
   கடந்த இரண்டு வாரங்களாக ஒருவர்பின் ஒருவராக மிகவும் நெருக்கமானவர்கள் என்னைவிட்டுப் பிரிந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசியது, பழகியது, அவர்களது ஆளுமையால் ஈர்க்கப்பட்டு வியந்தது - இவை எல்லாம் நினைவுப் பாதையில் ஊர்வலம் போகின்றன. அந்த வரிசையில் எனது இதழியல் ஆசானாக நான் கருதும் ஆசிரியர் "சாவி'யின் மகன் பாச்சாவும் சேர்ந்துகொள்கிறார்.
   அமெரிக்காவில் அவர் குடியேறிய பிறகு, எங்களுக்குள் கடந்த 30 ஆண்டுகளாக நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், ஓரிரு முறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறோம். இரண்டு முறை அமெரிக்காவுக்குப் போனபோதும்கூட அவரைச் சந்திக்க இயலாமல் போனது. மூன்று நாள்களுக்கு முன்பு சியாட்டிலில் பாச்சா மறைந்த செய்தியை நண்பர் ராணி மைந்தன் தெரிவித்தபோது, சிறிது நேரம் செயலிழந்து சிந்தனை வயப்பட்டேன்.
   ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞராக வலம் வந்திருக்க வேண்டியவர். பதிப்பாளராக மட்டுமல்ல, பத்திரிகையின் ஆசிரியராக இருப்பதற்கான எல்லாத் தகுதிகளையும் பெற்றவர். புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர் சாவிக்கு எள்ளளவும் சளைத்தவர் அல்ல பாச்சா. பாலச்சந்திரன் என்கிற இயற்பெயரை "பாச்சா' என்று சுருக்கிக்கொண்ட அவர் எடுத்த பல புகைப்படங்கள் அன்றைய நாள் "தினமணி' கதிரில் வெளிவந்து வாசகர்களை வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
   பாச்சாவுடனும், அவரது சகோதரர் மணியுடனும் பயணித்த நாள்கள், செலவழித்த கணங்கள், பங்கு போட்டுக்கொண்ட நிகழ்வுகள் - இவையெல்லாம் மறக்கக் கூடியவையா என்ன?
   
   தஞ்சாவூர் சென்றால் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லாமல் இருப்பதில்லை. கடந்த மாதம் தஞ்சைக்குச் சென்றபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, புதிய துணை வேந்தர் கோ.பாலசுப்ரமணியனை சந்தித்தேன். ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள "திராவிடப் பல்கலை'யில் இணைத் துணை வேந்தராக இருந்தவர். திராவிட மற்றும் கணினி மொழியியல் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். 16 ஆண்டுகள் "கோழிக்கோடு பல்கலை'யிலும், இரண்டு ஆண்டுகள் போலந்து நாட்டின் "வார்சா பல்கலை'யிலும் இந்தியவியல் துறையில் பணியாற்றிய அனுபவசாலி. இத்தனை பெருமைகளுக்கும் உரிய ஒருவரைச் சந்தித்து அளவளாவியது பெரு மகிழ்ச்சி அளித்தது.
   எங்களது சந்திப்பின் நினைவாக முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர் எழுதிய "மொழியியல் ஒப்பு நோக்கு' என்கிற புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். தமிழ் மொழியியல் குறித்த என்னுடைய பல ஐயப்பாடுகளுக்கு விடையளிக்கும் விதத்தில் அதில் இருந்த கட்டுரைகள் அமைந்திருந்தன.
   மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் ஆய்விதழ்களில்தான் வெளியிடப்படுகின்றன. அனைவருக்கும் அவை சென்றடைய வேண்டுமானால், அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவம் பெற வேண்டும். "மொழியியல் ஒப்பு நோக்கு' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஏழு கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் ஆய்விதழ்களில் வெளிவந்தவை. ஏனைய நான்கு கட்டுரைகள் கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை. அதனால், இந்தப் புத்தகம் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாமல், என்னைப் போன்ற தமிழார்வலர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது.
   தமிழ் மொழியியல் வரவும் வளர்ச்சியும்; தமிழ் மலையாள மொழிகளில் ஆங்கிலக் கலப்பு; கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பில் நீக்கப்பட்ட மொழியியல் கருத்துகள் உள்ளிட்ட கட்டுரைகள் சுவாரஸ்யமான வாசிப்புகள்.
   மொழியியல் கலப்பு சரியா - தவறா? என்பது குறித்த பதிவு விரிவான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றத் தரமான ஆங்கில மொழிக் கல்வி அவசியம் என்கிற அவருடைய கட்டுரையை, தீவிர விவாதத்துக்கு சமுதாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
   
    இந்த மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை வரவேற்புக்குரிய ஒரு மாற்றம் காணப்படுகிறது. எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று முதன் முறையாகப் பலருக்கு நமது அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கின்றன. அவர்களில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்க பாண்டியனும் ஒருவர்.
   10 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் விமர்சனத்துக்காக அவரால் தரப்பட்ட கவிதைத் தொகுப்பு "மஞ்சணத்தி'. அவரது அதற்கு முந்தைய கவிதைத் தொகுப்புகளான "எஞ்சோட்டுப் பெண்', "வனப்பேச்சி' ஆகியவற்றை ஏற்கெனவே படித்திருக்கிறேன். "மஞ்சணத்தி'யைப் படித்தது மட்டுமல்லாமல், சில இடங்களில் மேற்கோள் காட்டியும் பேசியிருக்கிறேன். தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டபோது, அவரது கவிதைத் தொகுப்புகளை மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தோன்றியது.
   மண் வாசனையுடன் கூடிய தமிழச்சியின் கவிதைகள் யதார்த்தத்தின் நகலெடுப்புகள். அடி மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் அசாதாரணமான உணர்வுகளின் வெளிப்பாடுகள். வார்த்தை ஜோடனைகளால் அலங்கரித்துக் கொள்ளாத நிர்மலமான நிதர்சனங்களின் வெளிப்பாடுகள்.
   அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் நிறைந்து விட்டிருக்கும் தென் சென்னையில், மக்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு அந்தக் குடியிருப்புகளில் வாழும் நடுத்தர மக்களின் பிரச்னைகள் தெரிந்திருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பே, "மஞ்சணத்தி' கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் "பகுத்தல்' - அந்தத் தகுதி கவிதாயினி தமிழச்சிக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
   குடியிருப்பில்
   அவரவர் கதவு இலக்கம்
   அவரவர் மின் கட்டணப் பெட்டி
   அவரவர் வண்டி நிறுத்துமிடம்
   அவரவர் பால், தபால் பைகள்
   எல்லாமும் பிரித்தாயிற்று.
   திடீரென அடைத்துக்கொள்ள -
   எப்படிப் பிரிக்க அவரவர் சாக்கடையை?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai