சுடச்சுட

  
  tm1

  பண்டைத் தமிழ் மக்கள் பலராமனை வழிபட்டு வந்ததை சங்க இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. வைணவர்களால் போற்றப்படும் திருமாலின் அவதாரங்கள் பத்து. எடுக்கப்போகும் பத்தாவது அவதாரமான "கல்கி' அவதார மூர்த்திக்கு சிலையோ, கோயிலோ கிடையாது. ஆனால், மற்ற ஒன்பது அவதாரங்களில் எட்டாவது அவதாரமான பலராமர் அவதாரத்திற்கு ஏன் இன்று தமிழகத்தில் கோயில்கள் இல்லை? தசாவதாரத் தொகுதியில் ஓரிரு கோயில்கள் தவிர அவருக்குச் சிலையும் இல்லையே! இது ஏன்?
   பதினெட்டுப் புராணங்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்று. வசுதேவர் புத்திரனாகக் கண்ணன் அவதரித்துத் திருவிளையாடல்கள் புரிந்து உலகத்தை உய்வித்த கதை பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது.
   பலராமன் கண்ணனுடைய அண்ணன் என்பதால், கண்ணனுடைய கதையுடன் பலராமனுடைய கதையும் சேர்ந்துவிடுகிறது. பாகவத காலத்திற்கு முன்பே கண்ணன், பலராமன் கதைகள் தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்தன. அதனால், இலக்கியங்கள் அவற்றை எடுத்தாண்டிருக்கின்றன. அத்துடன் பலராமன், கண்ணன் இருவருக்கும் தனித்தனியாகக் கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். கண்ணனுடைய செயல்கள் மக்களைக் கவர்ந்ததால் கண்ணனுக்கு அக்கால மக்கள் முக்கியத்துவம் தரத்தர பலராமனை வழிபடுவதை மெல்ல மெல்ல விட்டுவிட்டனர் என்பதை நம் இலக்கியங்கள் மூலம் நன்கு அறியலாம்.
   வடக்கே ஆயர்பாடியில் அவன் செய்த செயல்கள் அக்கால மக்களுக்குப் புதிராகவே இருந்தன. ஆகவே, கண்ணனைக் கடவுளாக எண்ணி வழிபட்டனர். கண்ணனின் தமையனாக பலராமர் இருந்ததால், கண்ணனுடன் சேர்த்து பலராமனையும் கடவுளாகக் கருதினர். அந்தத் தாக்கம் தமிழகத்திலும் பரவியிருந்தது.
   நற்றிணையில் 32-ஆவது பாடல் கபிலரால் பாடப்பட்டது. அப்பாடலில் முதலிரண்டு வரிகள் பலராமனையும், கண்ணனையும் உவமை வாயிலாக எடுத்துக் காட்டுகின்றன. நீலமலை - அதிலிருந்து விழுகின்ற அருவியின் நிறம் வெண்மை. நீல நிறம் போன்றமலை என்பதால் ""மாயோன் அன்ன மால்வரை'' என்றும், வெண்மை நிறமுடைய அருவியை ""வாலியோனன்னன் வயங்கு வெள்ளருவி'' என்றும் கூறப்படுகிறது.
   பலராமனை வெண்மை நிறமானவன் என்று புராணம் கூறுகிறது. எனவே, தமிழர்களும் வெண்மை நிறமுடைய பலராமனை "வாலியோன்' என்னும் பெயர் கொண்டு அழைத்தனர்.
   புறநானூற்றுப் பாடலான 56-ஆவது பாடல் வாலியோனை உவமை வாயிலாக எடுத்துக் கூறுகிறது. இப்பாடலைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் என்பவர். இவர் பாண்டிய மன்னனான நன்மாறனின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக பலராமனைக் காட்டுகிறார்.
   "வலியொத்தியே வாலியோனை'' என்பது அது. இதனால் பலராமனுக்கு நம் முன்னோர் முதன்முதல் வைத்த பெயர் "வாலியோன்' என்பதாகும். மேலும் அதே பாடலில், வாலியோன் நிறம் வெண்மை என்பதை, "கடல்வளர் புரிவேளை புரைமேனி'' எனக் கூறுவதால் அறியலாம். அதாவது, "கடலில் தோன்றிய சங்கு போன்று வெண்மை நிறமுடையவன் வாலியோன்'' என்பது பொருள்.
   இளங்கோவடிகள், பலராமனை வாலியோன் என்றே அழைத்துள்ளார். ""வால்வளை மேனி வாலியோன்'' (சிலம்பு, இந்திரவிழவூரெடுத்த காதை). மேலும், பலராமனைப் புலவர்கள் பலர் "பால்நிற வண்ணன்' என்றும் அழைத்துள்ளனர்.
   ""வானுற வோங்கிய வயங்கொளிர்
   பனைக்கொடி பால்நிற வண்ணன்''
   என்று முல்லைக்கலி 4-ஆவது பாடலும்,
   ""பால் நிறவண்ணன் பலராமன்'' என்று சீவக சிந்தாமணியும் (நாமகள் இலம்பகம், 209),
   ""பால் அன்ன மேனியான்'' என்று நெய்தற்கலியில் உள்ள 7-ஆவது பாடலும் எடுத்துரைக்கின்றன.
   "வெள்ளை' என்ற பெயராலும் நம் முன்னோர் பலராமனை அழைத்துள்ளனர்.
   ""பொற்பனை வெள்ளையை உன்னாது ஒழுகின் இன்னா'' என்பது இன்னா நாற்பது நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதையெல்லாம் பார்க்கும்போது கண்ணனின் அண்ணனாகிய பலராமனை பால்வண்ணன், வெள்ளையன் என்றெல்லாம் அக்கால மக்கள் அழைத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இன்றும் தமிழ் மக்கள் பலராமன், பலதேவன், வெள்ளை, வெள்ளையன், வெள்ளைச்சாமி என்று தம் மக்களுக்குப் பெயரிட்டு அழைப்பதிலிருந்து இக்கருத்து உண்மை என்பதை உணரலாம்.
   ஆதியில் பலராமனை கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. இதை ஆண்டாள் நாச்சியார், "செம்பொன் கழலடிச் செல்வன் பலதேவனை நந்தகோபன் அரண்மனையில் சென்று எழுப்பும் பாடல்' திருப்பாவையில் இடம்பெற்றுள்ளது.
   புறநானூற்றிலோ 56-ஆவது பாடலில், மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் கடவுள்களை வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலில் சிவனையும், அடுத்து பலதேவனையும், அதற்கடுத்து கண்ணனையும் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறே பலராமனையும் கண்ணனையும் முன்பின்னாக வைத்து மாற்றி வரிசைப்படுத்தும் வழக்கு முல்லைக்கலியில் (4, 5-ஆவது பாடல்கள்) உள்ளன.
   இளங்கோவடிகளும் பூம்புகாரில் உள்ள கோயில்களைப் பற்றிக் கூறும்போது, சிவன் கோயிலை முதலாவதாகவும், முருகன் கோயிலை இரண்டாவதாகவும், பலராமன் கோயிலை மூன்றாவதாகவும் எடுத்துக் கூறுகிறார். மேலும், மதுரை மாநகரில் பலராமனுக்குக் கோயில் இருந்ததை, ""மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்'' என்னும் வரியின் மூலமும் எடுத்துரைக்கிறார்.
   பரிபாடலில் உள்ள 15-ஆவது பாடலைப் பாடியவர் இளம் பெருவழுதியார் என்னும் புலவர். இவர் திருமாலிருஞ் சோலையில் கண்ணன், பலராமன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் இருந்தன என்பதை எடுத்துரைக்கிறார்.
   திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் மாயவனாகிய கண்ணனை மட்டும் கூறி, பலதேவனான கண்ணனை "முன்னோன்' என்ற சொல்லால் சுட்டுகின்றது. ""மாயவனும் தம்முனும்போல'' என்பது அவ்வரி. இதே வழக்கு, "மாயவன்தம் முன்னினொடும்'' (சிலம்.17) என்று சிலப்பதிகாரத்திலும், ""நெடியோன் முன்னொடு நின்றன'' (மணி.19) என்று மணிமேகலையிலும் கையாளப்பட்டுள்ளன.
   முதலில் இருவர்களாகத் தனித்தனியே எடுத்துக் காட்டிய வழக்குப் போய் மாயவனான கண்ணனை மட்டும் சிறப்பித்து "முன்னவன்' என்ற சொல்லால் பலராமனைச் சொல்கிறார்கள். பின்னர் பலராமனும் கண்ணனும் ஒருவரே என்று கருதவும் தொடங்கிவிட்டனர். பரிபாடலில் இவ்வழக்கு பெரும்பாலும் காணப்படுகிறது. இதில் திருமாலுக்குரியவாக ஏழு பாடல்கள் உள்ளன. இவை திருமாலை முன்னிலைப்படுத்தி, கண்ணனையும், பலராமனையும் ஏழு அவதாரங்களில் (பாடல் -1, 2) ஒன்றாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
   மேலும், பலதேவனின் ஆடை, அணிகலன்கள், கொடி, படை, ஆயுதம் முதலியவற்றைப் பற்றியும் இலக்கியங்களில் (பனைக் கொடி உடையவன் - புறநா.56; முல்லைக்கலி- பா.4; நாஞ்சில் எனும் ஆயுதம் கலப்பையாகும் - பாலைக்கலி (36); கார்நாற்பது (19) காணமுடிகிறது.
   திருமால் எடுத்த அவதாரங்களுள் எட்டாவது அவதாரமான பலராமர் அவதாரத்திற்கென்று தனி வரலாறு ஏதுமில்லை. கண்ணனின் தமையராக இருந்த அவர், கண்ணன் வரலாற்றோடேயே முழுக்க முழுக்க இணைந்திருந்ததால், கண்ணன் வரலாறே பலராமன் வரலாராயிற்று. ஒரிஸாவில் "கேன்டாபாரா' என்னுமிடத்தில் பலராமனுக்குக் கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
   ஆதிகாலத்தில் தமிழ் நாடெங்கும் பலராமன் வழிபாடு இருந்ததை சங்க நூல்கள் மட்டும் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன.
   
   -டி.எம். இரத்தினவேல்
   7.5.2019 பலராமர் ஜெயந்தி
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai