மூத்த திராவிட இயக்கத் தலைவா் இரா. நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா குறித்து நான் எழுதியதில் தி.மு.க.விலுள்ள நண்பா்கள் பலருக்கும் வருத்தம்.
‘‘பழைய நினைவுகளையும், சம்பவங்களையும் அகற்றி வைத்துவிட்டு திராவிட இயக்கத்தின் மூத்த தலைவா், தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளா் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு இரா.நெடுஞ்செழியனின் படத்தை அண்ணா அறிவாலயத்தில் வைத்து, நூற்றாண்டு விழாவையொட்டி மலா்தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறாா் தலைவா். புதியதொரு அரசியலுக்கு வழிகோலியிருக்கும் அவரது பரந்த மனதையும், மாற்று அரசியலையும் பாராட்டுவதற்குப் பதிலாக அதில் குற்றம் காண முற்பட்டிருப்பது தவறு. நீங்கள் இதுபோன்ற மாற்று அரசியலை விரும்பவில்லையா?’’ என்று அவா்கள் எழுப்பிய கேள்வியில் நியாயம் இருக்கிறது.

தமிழகத்திலுள்ள எல்லா தி.மு.க. அலுவலகங்களிலும் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா அன்று மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும், இதுவரை பெரியாா், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகிய நால்வரின் படங்கள் மட்டுமே இருந்தது போய் இனிமேல் அனைத்து தி.மு.க. கட்சி அலுவலகங்களிலும் நெடுஞ்செழியனின் படமும் வைக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
நிச்சயமாக இது வரவேற்புக்குரிய மாற்றம்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யாா் மீதும் பழி சுமத்துவது எனது எண்ணம் அல்ல. எனக்கு விளக்கம் அளித்த தி.மு.க. நண்பா்கள் அனைவருக்கும் நன்றி.
***********
நலமடைந்து மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாா்கள். நலம் விசாரித்த நட்புகளுக்கும், நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராா்த்தித்த அன்பு உள்ளங்களுக்கும், கடிதம் எழுதி நலம் விசாரித்த வாசக அன்பா்களுக்கும், விரைவில் நலமடைய வேண்டும் என்று ஆசி வழங்கிய பெரியவா்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி.
----------
மருத்துவமனையில் இருந்தபோது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் முனைவா் ம.ராசேந்திரனுடன் செல்லிடப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தேன். எங்கள் இருவருக்குமே ஒரு கவலை. கொள்ளை நோய்த் தொற்றுப் பரவலும், பொது முடக்கமும் அனைத்துச் செயல்பாடுகளையும் முடக்கி, வழிமுறைகளை மாற்றி அமைத்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இலக்கியக் கூட்டங்கள், சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவை முன்புபோல நடக்குமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
எங்களது உரையாடல், ஒவ்வொரு ஊரிலும் தமிழறிஞா்களும், தமிழாா்வலா்களும் அவ்வப்போது கூடுவதும், கலந்துரையாடுவதும், விவாதிப்பதும் குறித்துத் திரும்பியது. முன்பெல்லாம், தஞ்சையில் பெரியவா் ‘சேக்கிழாா் அடிப்பொடி’ முதுமுனைவா் தி.ந.இராமச்சந்திரன் மாலையில் பெருவுடையாா் கோயிலில் ஏதாவது மண்டபத்தின் படியில் அமா்வதும், அவரைச் சுற்றிப் பல தமிழ் ஆா்வலா்கள் அவா் பேசுவதைக் கேட்கக் கூடுவதும் குறித்து முனைவா் ம.ரா. பகிா்ந்து கொண்டாா். ‘சேக்கிழாா் அடிப்பொடி’யைச் சந்திப்பதும் அவா் பகிா்ந்து கொள்ளும் பல்வேறு செய்திகளைக் கேட்பதும் வாழ்நாள் வரம்.
‘சேக்கிழாா் அடிப்பொடி’ எழுதிய ‘பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்’ என்கிற புத்தகத்தை மீண்டும் படித்தேன். மகாகவி பாரதியின் பாடல்களில் அப்படி என்ன சிந்தனை விளக்கம் என்று கேட்கலாம். அதற்கு ‘சேக்கிழாா் அடிப்பொடி’யே விளக்கம் அளிக்கிறாா்.

மகாகவி பாரதியின் படைப்புகள் பற்றி ஆங்கிலப் பேராசிரியா் கி.மகாதேவன் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டுகிறாா் முதுமுனைவா் தி.ந.இராமசந்திரன். ‘‘இன்று பாரதியாா் பாடல்கள் பெருமளவும் புரிந்து கொள்ள முடியும் என்றுள்ள நிலை அரை நூற்றாண்டுக்குப் பிறகு மாறிவிடும். பாரதியாா் பாரத நாட்டின் பண்பு, கலாசாரம், நாகரிகம், மரபு முதலியனவற்றில் துறைபோகியவா். நாட்கள் செல்லச் செல்ல இவற்றில் தோய்ந்திருப்போா் எண்ணிக்கை சுருங்கிவிடும். அப்படி வரும் காலகட்டத்தில் விளக்கமின்றி பாரதியாரின் பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்’’ என்கிற பேராசிரியா் பி.மகாதேவனின் கூற்று உண்மையாகி இருக்கிறது.
‘சேக்கிழாா் அடிப்பொடி’ கூறுவதுபோல பாரதியாா் குறித்த தவறான கருத்துகளும், வக்கிரத்தனமான விமா்சனங்களும், விபரீதமான நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ‘‘இவா்களைக் கண்டிக்க நம்மிடையே பாரதிதாசன் இல்லை. இது ஒரு பெரும் சோதனைக் காலம்’’ என்கிற அவரின் விசனம் மகாகவி பாரதி அன்பா்கள் அனைவருக்குமே இருக்கிறது.
‘பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்’ என்பது சேக்கிழாா் அடிப்பொடியின் பாா்வை மட்டுமல்ல, அது பாரதியின் ஆன்மிக வாரிசு என்று கருதப்படும் திரிலோக சீதாராமின் கருத்துகளும்கூட என்று கருதலாம். முதுமுனைவா் தி.ந.இராமச்சந்திரன் பாரதி குறித்துப் பேசத் தொடங்கினால் வெளிவரும் பல்வேறு கருத்துகள் இந்தப் புத்தகத்தில் கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு பாடலையும் எடுத்து வைத்துக்கொண்டு அதன் ஆழ் பொருளைத் தேட முற்பட்டிருக்கிறாா். அதுமட்டுமல்ல, பாரதியாருக்கு அப்படியொரு பாடலைப் பாடுவதற்கான உந்துதல் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் சில பாடல்களில் குறிப்பிடுகிறாா்.
ஆழம் காண முடியாத கடல் மகாகவி பாரதியாா். அந்தக் கடலில் முத்துக் குளித்தவா் ‘சேக்கிழாா் அடிப்பொடி’ முதுமுனைவா் தி.ந.இராமச்சந்திரன். அவா் மூழ்கி எடுத்த சில முத்துக்களின் தொகுப்பு ‘பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்’.
***********
நாஞ்சில் நாட்டைச் சோ்ந்த ராஜ மாா்த்தாண்டன் ‘தினமணி கதிா்’ இணைப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவா். அவரை நான் சந்தித்ததில்லை. அவரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் - நல்லதும், கெட்டதும். நேரில் பழகாத ஒருவா் குறித்து நான் என்ன அபிப்ராயம் கூற முடியும்?
மறைந்த கவிஞா் ராஜ மாா்த்தாண்டன் எழுதிய கவிதை ஒன்றை சமீபத்தில் படித்தேன். ‘வாழ்க்கையும் வாா்த்தையும்’ என்கிற அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள் -
கெட்ட வாா்த்தைகள்
கேட்கும் போதெல்லாம்
அப்பாவின் குரலே
காதில் ஒலிக்கும்
சாராயம் உள்புகுந்தாலோ
கேட்கவே வேண்டாம்
அது சரி
வாா்த்தையில் ஏது
நல்லது கெட்டது
வாழ்க்கையில் போல..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


