வினா-உத்தரம்

அணி இலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தில், மாலைமாற்று என்னும் சொல்லணிக்கு எடுத்துக்காட்டாக மூன்று குறள் வெண்பாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் வினா-உத்தரம் பற்றிக் காண்போம்.
வினா-உத்தரம்


அணி இலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தில், மாலைமாற்று என்னும் சொல்லணிக்கு எடுத்துக்காட்டாக மூன்று குறள் வெண்பாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் வினா-உத்தரம் பற்றிக் காண்போம்.

ஒரே பாடலில் வரிசையாக வினாக்களை எழுப்பி, இறுதியில் அவற்றுக்கு விடை கூறுதல் ("உத்தரம்-விடை'). இதற்கு எடுத்துக்காட்டாக தண்டியாசிரியர் ஒரு வெண்பாவைப்பாடியுள்ளார்.

"பூமகள் யார்? போவான் ஏதுரைக்கும்?
நாமம் பொரு சரத்திற்கு ஏதென்பார்? - தாமழகின்
பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
சேர் வென்? - திருவேகம் பம்'

பூமகள்-திரு; போவான் ஏதுரைக்கும் -ஏகு; சரத்திற்கு ஏது - அம்பு; அழகின் பேர் - அம்; பிறைசூடும் பெம்மான் உவந்து உறையும் ஊர் (சேர்வு) - (திரு+ஏகு+
அம்பு+அம்) திருவேகம்பம்.

இதேபோல், "திருப்போரூர் சந்நிதி முறை' பாடிய சிதம்பர சுவாமிகள் வினா-
உத்தரம் அமைப்பில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

"இல்லறத் தான் அல்லேன்; இயற்கைத் துறவியல்லேன்;
நல்லறத்து ஞானியல் லேன்; நாயினேன் - சொல்லறத்துள்
ஒன்றேனும் அல்லேன்; உயர்ந்த திருப்போரூரா
என்றே நான் ஈடேறுவேன்?'

உயர்ந்த திருப்போரூரில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமானே! நான் இல்லற நெறியில் வாழ்பவனல்லன்; இயற்கை நிலையில் துறவறம் மேற்கொண்டவனல்லன்; அறநெறியில் ஒழுகும் ஞானியுமல்லேன்; நாயினும் கடையனான யான் மேற்குறிப்பிட்ட நன்னெறிகளில் ஒன்றிலும் நிலை பெற்றவன் அல்லன்; இந்நிலையிலுள்ள நான் எவ்வாறு கடைத்தேறுவது?- என்பது வினா.

"உயர்ந்த திருப்போரூரா என்றே, நான் ஈடேறுவன்' - என்பது விடை. "உயர்ந்த திருப்போரூர் முருகப் பெருமானே! என்று யான் இடையறாமல் உன்னைத் துதித்துக் கடைத்தேறுவேன்' - என்று பொருள் தருமாறு இவ்வடிகளையே விடையாகவும் அமைத்துப் பாடியுள்ளதே வினா- உத்தரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com