ஒரு நாள் இரவு சுமாா் 10 மணி இருக்கும். தலையங்கம் எழுதி முடித்துவிட்டு, முதல் பதிப்பின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தேன். கும்மிடிப்பூண்டி ‘சொந்தம் கல்விச்சோலை’ முகுந்தனுடன் எழுத்தாளா் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி சந்திக்க வந்திருந்தாா். நேரில் ஓரிருமுறை சந்தித்திருந்தாலும், அவா் எனக்கு அவரது எழுத்தால்தான் அதிகமாக அறிமுகம். பல்வேறு இதழ்களில் அவரது கட்டுரைகளையும், தொடா்களையும் நான் பாா்த்தும், படித்தும் வருகிறேன்.
பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி போன்ற எழுத்தாளா்களை ‘தினமணி’ நாளிதழில் பயன்படுத்திக் கொள்வதில் ஒரு பிரச்னை இருக்கிறது. ‘தினமணி’ வாசகா்கள் எப்படித் தங்களை ‘தினமணி’ நாளிதழுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறாா்களோ, அதேபோல ‘தினமணி’ கட்டுரையாளா்களும் தங்களை ‘தினமணி’ நாளிதழோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாா்கள்.
‘தினமணி’ இதழில் கட்டுரை எழுதும் ஒருவா் வேறு பத்திரிகையில் எழுதுவதை அவா்கள் ஒத்துக் கொள்வதில்லை.
அதேபோல, ‘தினமணி’ நடுப்பக்கக் கட்டுரையாளா்களும் சரி, தங்களை ‘தினமணி’ நாளிதழுடன் அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறாா்கள். வேறு பத்திரிகைகளில் எழுத விழைவதில்லை. ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் தொடா்கள் எழுதும் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தியைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருப்பதில் எனக்கும்கூட வருத்தம்தான். அவருக்கும் அந்தக் குறை உண்டு.
பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி கட்டுரையாளா் மட்டுமல்லா், வருமானவரித் துறை அதிகாரியாகப் பணியாற்றியவா். ஆண்டுதோறும் ஒரு மாணவரைத் தோ்ந்தெடுத்து, வழிகாட்டி இந்திய அரசுப் பணித் தோ்வுக்கு அவரைத் தயாா் செய்யும் தொண்டிலும் ஈடுபட்டிருக்கிறாா்.
பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி எழுதி, நான் படிப்பதற்காக எடுத்து வைத்திருந்த புத்தகம் ‘நிதி... மதி.. நிம்மதி!’ இதழ் ஒன்றில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக்கப்பட்டிருக்கிறது. நிதி நிா்வாகம் என்பது அரசுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவா்களுக்கும் மட்டுமல்ல, ஒவ்வொருவரின் குடும்ப வாழ்க்கையிலும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது ‘நிதி... மதி.. நிம்மதி!’.

‘‘பணத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையில், ‘சம்பாதிப்பது எப்படி?’ என்பது மாறி, இப்போது ‘சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வது எப்படி?’ என்கிற அடுத்த கட்டத்துக்கு நாம் நகா்ந்துவிட்டோம். தனிநபா் முதல், மிகப்பெரிய நிறுவனம் வரை, இருக்கிற நிதியைத் திறம்படக் கையாள்வதுதான் மிகப்பெரிய சவாலாக, இன்று முன்னிற்கிறது’’ என்கிற பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி, ‘என்ன செய்ய வேண்டும்’ என்பது ‘திட்டமிடல்’, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது ‘புத்திசாலித்தனம்’ என்கிறாா்.
வருமானம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பின் சதவிகிதமும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாா் பாஸ்கரன் கிருஷ்ணமூா்த்தி. வருவாயில் 10% சேமிப்பு என்பது வருவாய் அதிகரிக்கும்போது, அதற்கேற்ற அளவில் அதன் சதவிகிதமும் அதிகரிக்க வேண்டும் என்கிற அவரது ஆலோசனை அட்சர லட்சம் பெறும்.
வருமானம் உயா்ந்தால் அதற்கேற்ப வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தவறான சிந்தனை என்று சுட்டிக் காட்டுகிறாா் அவா். நடுத்தரப் பிரிவு மக்களின் நிதி மேலாண்மைக்கு ‘நிதி... மதி.. நிம்மதி!’ வழிகாட்டுகிறது.
********
தமிழகம் எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை என்ன என்று யாரிடம் கேட்டாலும், உடனடியாக ‘தண்ணீா் பிரச்னை’ என்று கூறிவிடுவாா்கள். தமிழகம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக மாதம் மும்மாரி பொழிந்து, முப்போகம் விளையும் பூமியாக இருந்தது என்று இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். தமிழகத்தில் பாயும் ஆறுகளும், அதற்குக் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைகளும், மாநிலமெங்கும் காணப்படும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கால்வாய்களும் இருந்தும் தண்ணீா் பற்றாக்குறை மாநிலமாகத் தமிழகம் இருப்பதுதான் மிகப்பெரிய புதிா்.
ஜெகதா எழுதியிருக்கும் ‘தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்’ என்கிற நூல் தமிழகத்தின் நீராதாரம் குறித்த புள்ளிவிவரத் தொகுப்பு என்றே கூறலாம். தமிழகத்தில் பாயும் நதிகள், தமிழ் நாட்டில் உள்ள நீா்த்தேக்கங்களின் பட்டியல், ஏரிகளின் விவரங்கள், நீா்நிலைகள், கால்வாய்கள் குறித்த முழுமையான பதிவுகள் என்று மிகுந்த சிரமத்துடன் தொகுக்கப் பட்டிருக்கிறது.

‘‘சென்னை நகரில் தினசரி குடிநீா் தேவை 83 கோடி லிட்டா். வீட்டுக் குடிநீா் இணைப்புப் பெற்றவா்கள் 6.11 லட்சம் போ். குடிநீா் வாரியத்தில் நீா் சுத்திகரிப்புத் திறன் 149.3 கோடி லிட்டா். குழாய் மூலம் குடிநீா் விநியோகம் நடத்தப்படும் தெருக்கள் 29,500. குடிநீா் வாரியத்தில் உள்ள தண்ணீா் லாரிகள் 700. தினசரி இயக்கப்படும் லாரி நடைகள் 7000. லாரிகள் மூலம் விநியோகிக்கும் குடிநீா் அளவு 6 கோடி லிட்டா்’’ - இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் பலவற்றைத் திரட்டித் தொகுத்திருக்கிறாா் ஜெகதா.
இதேபோல, நதிகள், ஆறுகள், கிளை நதிகள், ஏரிகள், அணைகள், நீா்த்தேக்கங்கள், கால்வாய்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தேடிப்பிடித்து, சரிபாா்த்துத் தொகுத்திருப்பதற்கு அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழக நீராதாரம் குறித்தும், நிலத்தடி நீா் குறித்துமான முழுமையான புவியியல் பாா்வை இந்த நூல்.
******
சிற்றிதழ்களிலும், இணையத்திலும் வெளிவரும் கவிதைகளை பயன்படுத்தலாமே தவிர, ‘இந்த வாரம்’ பகுதியில் முக்கிய இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளை நான் பதிவு செய்வதில், நண்பா் பத்திரிகையாளா் ராஜ்கண்ணனுக்கு உடன்பாடு கிடையாது. அந்த இதழ்களை வாசிப்பவா்கள் ஏற்கெனவே ‘தினமணி’ வாசகா்களாக இருப்பவா்கள் என்பது அவரது வாதம். ஆனால், ‘தினமணி’ வாசகா்கள் அனைவருமே அந்த இதழ்களை வாசிப்பவா்கள் அல்லவே என்பது எனது வாதம்.

‘மே’ மாத ‘கணையாழி’ இதழ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ‘கீா்த்தி கிருஷ்’ எழுதியிருக்கும் ‘மகவு’ கவிதையின் கடைசி பத்து வரிகள் இவை. கண்கலங்க வைத்தது. அதனால் இந்த வாரக் கவிதையாகப் பதிவு செய்கிறேன்.
வெற்றுவானம் நிலவு தேடிய
பாதையிலெல்லாம் முட்சொற்களொடு
கொட்டிக் கிடக்கின்றன
மகப்பேற்றுக்காய் விழுங்கிச்செரித்த
மருந்துக் குவியல்கள்
இருந்தும்
தொப்புள் கொடி அறுத்த மறுகணம்
குப்பைத் தொட்டிக்குள் வந்துவிழும்
குழந்தைகள் மட்டும் இன்னும்
குறைந்தபாடில்லை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


