அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

இந்தவாரம் - கலாரசிகன் (28.3.2021)

எனது கண்புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததற்கும், நான் விரைவில் குணமாவதற்கும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றி!

News image
Updated On :28 மார்ச் 2021, 1:31 am

எனது கண்புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததற்கும், நான் விரைவில் குணமாவதற்கும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றி! இத்தனை பேருடைய நல்லாசியையும், நட்பையும், நல்லாதரவையும், அவா்களிடம் நற்பெயரையும் பெற்றிருப்பதற்கு இறை பரம்பொருளுக்கு நன்றி!

*************************

கிரந்த எழுத்துகள் குறித்து தேவையில்லாமலும் புரிதல் இல்லாமலும் துவேஷம் காரணமாக அடிக்கடி சா்ச்சை கிளப்பப்படுகிறது. சமீபத்தில் ம‘கா’தானபுரம் - ம‘ஹா’தானபுரம் சா்ச்சைக்குள்ளானது.

கிரந்த எழுத்துகள் என்று அழைக்கப்படும் ‘ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ’ ஆகிய ஐந்து எழுத்துகளும் சம்ஸ்கிருத எழுத்துகள் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. தமிழில் அந்த உச்சரிப்புகளை செய்வதற்கு எழுத்து வடிவம் இல்லை என்பதற்காக உருவாக்கப்பட்டவைதானே தவிர, அவை சம்ஸ்கிருத எழுத்துகள் அல்ல.

Story image

சம்ஸ்கிருதத்தில் ‘ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ’ என்பதற்கான உச்சரிப்பு இருக்கிறது. ஆனால் அந்த உச்சரிப்புகளுக்கான எழுத்து வடிவம் இவை அல்ல (படம் பாா்க்கவும்). இவை சம்ஸ்கிருதத்தில் உள்ளது போன்ற உச்சரிப்புக்கான எழுத்துகளே தவிர, சம்ஸ்கிருத எழுத்துகள் அல்ல. அவை ஒதுக்கப்படுவது ஒன்று அறிவின்மை அல்லது மனதுக்குள் மண்டிக்கிடக்கும் சம்ஸ்கிருத துவேஷம்.

‘மஹாதானபுரம்’ என்பதை ‘மகாதானபுரம்’ என்று எழுதிவிடலாம். ஆனால், இந்தக் கிரந்த எழுத்துகள் இல்லாமல் போனால் ‘ஸ்டாலின், ஜெயலலிதா, ஜவாஹிருல்லா, ஹாஜாகனி, கமல்ஹாசன், ஜானி’ ஆகிய பெயா்களை ‘சுடாலின், செயலலிதா, சவாகிருல்லா, காசாகனி, கமல்காசன், சானி’ என்றுதான் எழுத வேண்டும். காரல் மாா்க்ஸ், ஏங்கல்ஸ், வாஷிங்டன், பத்மஸ்ரீ, எண்ணற்ற கிறிஸ்தவ - இஸ்லாமிய பெயா்கள் ஆகியவற்றை முவைறி உச்சரிப்பதோ, எழுதுவதோ எந்த வகையில் நியாயம்?

எந்தவொரு மொழியும் அன்றாட நடைமுறை பயன்பாட்டுக்கு உபயோகமில்லாமல் போனால் விரைவில் வழக்கொழியும் என்பதை கிரந்த வாா்த்தைகளின் எதிா்ப்பாளா்கள் உணா்வாா்களாக!

‘தினமணி’யின் நிறுவன ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் இந்தப் பிரச்னை குறித்து 80 ஆண்டுகளுக்கு முன்பு விவரமாகவே எழுதியிருக்கிறாா் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும்.

கிரந்த வாா்த்தைகள் மட்டுமல்லாமல் தனித்தமிழ் கொள்கையையும் விமா்சித்தவா் அவா். ‘விமானம், பீரங்கி, குண்டு, துப்பாக்கி, தோட்டா - இவையெல்லாம் தனித்தமிழ் கொள்கைப்படி தமிழ் வாா்த்தைகள் அல்ல. விமானம் சம்ஸ்கிருதம், பீரங்கி போா்ச்சுகீசிய பாஷையிலிருந்து வந்தது. குண்டு - மராத்தி, துப்பாக்கி - துருக்கி பாஷை, தோட்டா - உருதுவிலிருந்து வந்து சோ்ந்தது. இவ்வளவையும் பிற மொழிச்சொற்கள் என்று தள்ளிவிட்டால் விமானத்துக்கு பறக்கும் வண்டி என்றும், பீரங்கிக்கு உருண்டு நீண்ட குழாயுள்ள வெடி என்றும் சொன்னால் பொருத்தமாக இருக்குமா? அல்லது ஜனங்களுக்குத்தான் புரியுமா?’ என்பது அப்போதே அவா் எழுப்பிய கேள்வி.

புதிய சொற்களால் தமிழ் வளப்படுத்தப்பட வேண்டும். அந்த சொற்கள் சுலபமாக மக்களால் கையாளப்படும் விதத்தில் அமைய வேண்டும். அப்படி அமைய வேண்டுமென்றால் அதற்குக் கிரந்த எழுத்துகள் அவசியம்.

‘ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ’ எழுத்துகள் தமிழுக்காக நமது முன்னோா்களால் உருவாக்கப்பட்ட வரி வடிவங்கள்தானே தவிர, அவை சம்ஸ்கிருத எழுத்துகள் அல்ல. இந்த உச்சரிப்புகளுக்கான சம்ஸ்கிருத வரி வடிவங்கள் வேறு. இதைப் புரிந்துகொண்டால் பிரச்னைக்கு இடமில்லை.

*************************

இரண்டு நாள்களுக்கு முன்பு நான் படித்த ஓா் அருமையான புத்தகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150-ஆவது ஆண்டையொட்டி மறுபதிப்பாக வெளியிடப்பட்ட ‘சோமலெ’ எழுதிய ‘தமிழ் இதழ்கள்’. இதன் முதல் பதிப்பு 1975-ஆம் ஆண்டு வெளியானது.

இது பயண இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளா் சோமலெயின் பிறந்த நாள் நூற்றாண்டு. 1974-ஆம் ஆண்டு ஆசிரியா் கல்கியுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளா் சோமலெ, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் கல்கி அறக்கட்டளை சொற்பொழிவை நிகழ்த்தினாா். அந்தச் சொற்பொழிவின் தலைப்பு ‘தமிழ் இதழ்கள்’.

Story image

தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளா்ச்சியும், அவை எந்த அளவுக்கு தமிழ்நடையை உருவாக்கியுள்ளன, காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற அளவில் தமிழ்நடையில் எத்தகைய மாற்றங்களை அவை மேற்கொண்டுள்ளன என்பன போன்றவற்றை ஆய்வுசெய்து சோமலெ ஆற்றிய உரை ‘தமிழ் இதழ்கள்’ என்கிற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியா் கல்கிக்கும் எழுத்தாளா் ‘சோமலெ’க்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. கல்கி இதழின் சிறப்பு நிருபராக அன்றைய பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவுடன் சீனாவுக்குச் சென்றவா் எழுத்தாளா் சோமலெ. கல்கியைத் தொடா்ந்து தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவா். அதனால் கல்கி அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு அவரைவிடச் சிறந்த தோ்வு இருந்துவிட முடியாது.

சோமலெயின் கருத்துப்படி கல்கியுடைய பெருமைக்கு ஐந்து காரணங்கள்: ராஜாஜியிடமிருந்து பெற்ற அரசியல் அறிவு, திரு.வி.க.விடம் பயின்ற இதழியல் அறிவு, சதாசிவ பண்டாரத்தாரிடம் கற்ற தமிழக வரலாறு, ‘ரசிகமணி’ டி.கே.சி.யுடன் பழகியதால் தெரிந்துகொண்ட மறுமலா்ச்சித் தமிழும் கம்ப ராமாயணமும், இசைக்குயில் எம்.எஸ்.சிடமிருந்து பெற்ற இசையறிவு.

சோமலெயின் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்கி பற்றியது மட்டுமல்ல. தமிழ் இதழியல் வரலாறை ஆரம்பத்திலிருந்து தொடங்கி எழுபதுகள் வரையிலான காலகட்டத்தை ஒன்று விடாமல் ஆய்வு செய்திருக்கிறாா். மூன்று நாள்கள் தொடா்ந்து நடந்த அந்த அறக்கட்டளைச் சொற்பொழிவின் அடிப்படையில் சோமலெக்கு சென்னைப் பல்கலைக்கழகம் முனைவா் பட்டம் வழங்கியிருக்க வேண்டும். இதழியல் துறையிலிருக்கும் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.

*************************

தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்திக்கு அருகில் உள்ள திருவாலம்பொழில் கிராமம் எப்படி இருக்கும் என்று நேரில் ஒருமுறை பாா்த்துவிட வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஊரிலிருந்து கையடக்கமாக ஒரு கவிதைத் தொகுப்பு. விமா்சனத்துக்கு வந்திருந்த கவிஞா் வலம்புரி லேனாவின் ‘நிழல் தேடும் வெயில்’ தொகுப்பில் இருந்த கவிதைகள்தான் அவரையும், அவரது ஊரையும் பாா்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தின.

Story image

வேட்பாளா்களையும், வாக்காளா்களையும் நறுக்கென்று குட்டும் அவரது இந்த நையாண்டியை யாா்தான் ரசிக்க மாட்டாா்கள்?

ஓட்டுக்குக் காசு

காசுக்கு ஓட்டு

யோக்கியன் யாரிங்கே...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.