சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உலா வந்த சேரனுக்கு ஊர்ப்பழி!

இராமபிரான் உலா வருகின்றார். காணவந்த பெண்களின் நிலையைக் கம்பர் கழறுகிறார் உலாவியற்படலத்தில்.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 8:23 am

இராமபிரான் உலா வருகின்றார். காணவந்த பெண்களின் நிலையைக் கம்பர் கழறுகிறார் உலாவியற்படலத்தில். அதில் ஒரு பாடல் இது.
 களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப, கள்ளம்
 ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு உள் ஊறி
 வெளுப்பன, கறுப்ப, ஆன வேல்கணாள் ஒருத்தி, உள்ளம்
 குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடு கோயில் புக்காள்.
 களிப்புடையனவும், செழிப்புடையனவும், செவியளவு நீண்டவையும், கள்ள உள்ளத்தை ஒளிப்பனவும், இமைக்கு வெளியேவந்து ஓடப் பார்ப்பனவும், விழிக்குள் இருக்கும் சிவப்பு நரம்பின் ரேகை சில இடங்களில் தெரியுமாறும், சில இடங்களில் வெளுத்தும், சில இடங்களில் கறுத்தும் விளங்குகின்ற வேல்போன்ற கண்களையுடைய ஒருத்தி உலா வந்த ராமனைக் காண குளிர்ச்சியோடு வந்தாள். காதல் என்னும் வெப்பத்தை வாங்கிக்கொண்டு மாளிகைக்குச் சென்றாள்.
 இதேபோல் முத்தொள்ளாயிரத்தில் சேரன் உலா வருகின்றான். காரிகையர் குளிர்ந்த விழியோடு காணவந்து-காதலால் வெப்பமுற்ற மனத்தினராயினர். வழியே சென்ற மன்னவனை விழிக்குள் கொண்டு சென்றது மங்கையர்தாம். ஆனால் பழி சொல்வது சேரனை. என்ன பழி?
 இனிய சொல்லினளே என் தலைவியே!
 இவன் என் வனப்பைப் பறித்துக்கொண்ட கள்வன்;
 மனத்தின் உறுதியைக் கொள்ளையிட்ட கள்வன் என்று கொற்றவன் சென்ற பாதையெல்லாம் பேதைப் பெண்கள் அவன்மீது குற்றம் சுமத்துகிறார்கள். சுமத்துகிறவர்கள் நிறைய பேர் என்பதனால் பழி பெரிதாகிறது.
 இவனென் நலங்கவர்ந்த கள்வன் இவனெனது
 நெஞ்சம் நிறையழித்த கள்வனென்(று)-அஞ்சொலாய்
 செல்லும் நெறியெல்லாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
 சொல்லும் பழியோ பெரிது.
 ஏன் இதை தோழி தலைவியிடம் சொல்கிறாள்? உலாவந்த கோதையைக் கண்டு காலை நேரத்து நிலா போல் நீ மட்டும் எழில் வெளிறிப் போகவில்லை. உள்ளம் தளர்ந்து போகவில்லை. ஊரிலுள்ள பெண்களின் நிலையும் உனைப்போல்தான் என உரைத்துத் தேற்றுகின்றாள். துன்பத்தில் பங்குபோட பலர் இருக்கிறார்கள் என்றால் ஒருவகை ஆறுதல்தானே!
 "செல்லும் நெறியெல்லாம்' என்றால், "செல்கின்ற வழியெல்லாம்' என்ற நேரடிப் பொருள்தான் இங்கே என்றாலும், திருக்குறளில் ஒருத்தி சொல்கிறாள், "பிரிந்து சென்ற என் காதலர் எனது பொற்பையும் வெட்கத்தையும் எடுத்துக்கொண்டார். அதற்குக் கைம்மாறாகப் பருவரலையும் (துன்பத்தையும்)
 பசலையையும் (பசலை நோய்) கொடுத்துவிட்டார்.
 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
 நோயும் பசலையும் தந்து (1183)
 கம்ப காவியத்தில் ஒருத்தி குளிர்ச்சியை இழந்துவிட்டுப் போகின்றாள்; முத்தொள்ளாயிரத்தில் இன்னொருத்தி அழகை இழந்துவிட்டுப் போகின்றாள். திருக்குறள் தலைவியோ, என் தலைவன் பொற்பையும் வெட்கத்தையும்
 எடுத்துக்கொண்டதாகப் புலம்புகின்றாள்.
 -கே.ஜி.ராஜேந்திரபாபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.