வறுமையிலும் வண் தமிழ்!

புலவர் ஒருவர்; தமிழ் மொழியின் ஆழமும் அகலமும் ஆளுமையும் நன்கு அறிந்தவர்; நினைத்த மாத்திரத்தில் கவிபாடும் ஆற்றல் உடையவர்; தெலுங்கு மொழியிலும் நன்கு வல்லமை பெற்றவர்; என்ன இருந்து என்ன செய்ய?
வறுமையிலும் வண் தமிழ்!

புலவர் ஒருவர்; தமிழ் மொழியின் ஆழமும் அகலமும் ஆளுமையும் நன்கு அறிந்தவர்; நினைத்த மாத்திரத்தில் கவிபாடும் ஆற்றல் உடையவர்; தெலுங்கு மொழியிலும் நன்கு வல்லமை பெற்றவர்; என்ன இருந்து என்ன செய்ய? புலவர்களுக்கே உண்டான வறுமை, இவரையும் விட்டு வைக்கவில்லை.

அவர் வாழ்ந்த ஊரில் அவரைஆதரிப்பார் யாரும் இல்லாததால், புறப்பட்டு சென்னையை அடைந்தார். அப்போதும் புலவரின் வறுமை தீரவில்லை. பல நாள்கள் பட்டினியாக இருந்தார்; தெருவோரங்களில் படுத்து உறங்கினார்.

உடலில் அழுக்கு படிந்து, எண்ணெய் காணாத தலைமுடி திரண்டு சடையாகிவிட்டது. மேலும், உடம்பில் சிரங்கு உருவானது.

ஒரு நாள், புலவர் வீதி வழியாகச் சென்று கொண்டிருக்கையில், புலவரின் ஊரைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், புலவரைக் கண்டார்; "என்ன புலவரே! இப்போது உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது? சென்னை மாநகரம் பெரும் ஊராயிற்றே! இங்கு வந்ததால், தகுந்த பலனை அடைந்தீர்களா?'எனக் கேட்டார். அடுத்த வேளைக்கே சோற்றுக்கு வழியில்லாமல் சீர்கெட்டுத் திண்டாடும் அந்நிலையிலும் புலவரின் தமிழாற்றல் சீர்கெட வில்லை. பாடலிலேயே பதிலளித்தார் அவர்.

"ஓ! முன்பைவிட இப்போது என் நிலை எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது. சென்னைக்கு வந்தபிறகு நான், பெரும் சிறப்போடு சிவபெருமானைப் போலவே உயர்ந்துவிட்டேன். எப்படியென்றால், சிவபெருமான் அன்னத்தால் (அன்னப்பறவை வடிவ ங்கொண்ட பிரம்ம தேவரால்) அறியப்படாதவர்; நானும் அன்னத்தால் (சோறால்) அறியப்படாத சிறப்பை உடையவனாக இருக்கிறேன்.

"சிவபெருமான் சிரங்கை (சிரம் கை - பிரம்மதேவரின் தலையை) கையில் கொண்டிருக்கிறார். நானும் சிரங்கை (சிரங்குப் புண்களை) கொண்டிருக்கிறேன். சிவபெருமான் அரைச் சோமன் (பாதி பிறை) அணிந்திருக்கிறார். நானும் அரைச்சோமன் (இடுப்பில் கிழிந்து போன பாதித் துணியை) அணிந்திருக்கிறேன்.

"சிவபெருமானுக்குச் சடை உண்டு. என் தலையிலும் சடைபிடித்திருக்கிறது. சிவபெருமான் உடம்பு முழுதும் நீறு (திருநீறு) அணிந்திருக்கிறார். என் உடலும் நீறால் (குப்பை-தூசித் துகள்களால்) நிறைந்து இருக்கிறது' என்று சிரித்தபடியே, தன் மனத் துயரைத் தமிழ்ப் பாடலாகவே பாடினார்.

சென்ன புரிவந்து சிவமானேன் நல்லவொரு
அன்னமது காணா தவனாகி - மன்னு சிரங்
கைக்கொண் டரைச்சோமன் கட்டிச்சடை முறுக்கி
மெய்க்கொண்ட நீறணிந்து மே!

வறுமையை வண் தமிழில் வெளிப்படுத்திய புலவரின் இப்பாடலில் உள்ள சுவையை, நுணுக்கத்தை, அச் செல்வந்தர் அறிய வில்லை என்றாலும் சிறிதளவு பொருள் கொடுத்துவிட்டுச் சென்றார். அதைப் பெற்ற புலவர், "இந்த ஊருக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது; திரும்பிப் போய்விட வேண்டியதுதான்' என்று ஊர் திரும்பினார். அப்புலவரின் பெயர் இராமகவிராயர். அவர் பாடிய பாடல்கள் பல தனிப்பாடல் திரட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com