கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்குரை காதைக் காட்சி இது. 
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?


நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்குரை காதைக் காட்சி இது. 

"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே' 
.............   ............    .............   ............  ...........  ..........  ...........
கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, 
மணியே- மணி கண்டு'  (வழக்.65-72)

தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்ற உண்மையை உலகுக்கும், பாண்டிய வேந்தனுக்கும் உணர்த்துவதற்குக் கண்ணகிக்குப் பெருந்துணையாய் விளங்கியது, அவள்தன் காற்சிலம்பில் இடப்பெற்றிருந்த அரியே (பரலே). அவ்வரி மணி அரியே என்பதை, இளங்கோவடிகள் மேற்கண்ட பாடலடிகளில் பலமுறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் "என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே' என்ற கண்ணகியின் கூற்றுக்கு, "என்காற் பொற்சிலம்பின் அரி மாணிக்கம்' எனக் குறிப்புரைக்கும் சிலப்பதிகாரத்தின் முதல் அச்சுப் பதிப்பான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. வுடைய பதிப்பிலிருந்து(1892), மணியும் மாணிக்கமும் ஒரே பொருளுடைய சொற்களாகவே இன்றுவரை கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.

எனவே, காலம்தோறும் சிலப்பதிகார உரைகளிலும், கண்ணகி கதைகளிலும், வழக்காற்றுப் பாடல்களிலும் கண்ணகி உடைத்த சிலம்பிலிருந்து மாணிக்கப்பரல் தெறித்ததாகவே கூறப்பட்டு வருகிறது. "மணி' என்ற சொல்லுக்கு "மாணிக்கம்' எனப் பொருளுரைப்பது சரியா? 

செவ்விலக்கியங்களில், "மணி' என்ற சொல்லாட்சி "நீலக்கல்லை' மட்டுமே குறிக்கிறது. கருநீல நிறமுடைய தும்பி, மயில் தோகை, நெய்தற்பூ, கூந்தல், மலை முதலானவற்றைக் குறிக்குமிடங்களில், "மணி'  நீல நிறத்தையும், கருமையையும் குறிக்கும் நிற உவமமாகப் பல்வேறு இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

நஞ்சினை உண்டதால் கருநீல கண்டத்தை உடையவரான சிவபெருமானை மணி மிடற்று அந்தணன்(அகம்.0:15), மணி மிடற்றோன் (புறம்.56:2), நீலமணி மிடற்று ஒருவன் (புறம்.91:6), மணி மிடற்று அண்ணல் (பரி.9:7) என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும், மணிநீர் (குறள்:742, திணைமொழி.ஐம்.44:2), மணிநிற மாமலை (ஐந்.ஐம்.2:2), மணிநிற நெய்தல் (ஐந்.
எழுபது.60:1, கைந்.51:1) என்றெல்லாம் மணி என்பது நீலக்கல்லைக் குறித்த சொல்லாகவே குறிக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்திலும் மணி என்பது நீலநிற மணியே என்பதை உணர்த்துமாறு மணிநிற மஞ்ஞை (மனை.53), மணிவண்ணன் (நாடுகாண்:10) முதலான பல தொடர்கள் உள்ளன. பிங்கல நிகண்டும், "நீல மணிப்பெயர் மணியென நிகழ்த்துப' (1214) எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்றளவும் சிவபெருமானை நீலகண்டன் என்றும், திருமாலை மணிவண்ணன் என்றும் குறிப்பிடுவதும், கருநீல வண்ணப் புறாவினத்தை மணிப்புறா என்பதும், குயிலை மணிக்குயில் எனக் கூறுவதும், கருநீல நிறமுடைய பழத்தை மணித்தக்காளி (கீரைவகை) என்று வழங்குவதும் "மணி' என்பது நீலமணியே என்பதற்கான நற்சான்றுகள். 

வைரம், வைடூரியம் முதலான ஒன்பது வகையான விலைமதிப்புமிக்க கற்களுள் மணி என்பது நீலநிறக் கல்லையும், மாணிக்கம் என்பது சிவப்புநிறக் கல்லையும் குறிக்கும் சொல்லாட்சிகளாகும். இவற்றுள் "மாணிக்கம்' என்பது எக்காலத்தும் சிவப்புநிறக் கல்லை மட்டுமே குறித்துவரும் சொல்லாகவே வழங்கப்பெற்று வருகிறது. அவ்வாறே மணி என்ற சொல்லும், பழங்காலத்தில் நீலநிறக் கல்லை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பெற்றது. 

ஆனால், காலப்போக்கில் பல்மணி, நவமணி, வயிரமணி, மரகதமணி என விலைமதிப்புயர்ந்த ஒன்பது கற்களையும் குறிக்கும் வகையில் பொதுச்சொல்லாக மாற்றம் பெறுகிறது. மொழிகளில் இத்தகைய பொருள் விரிவுகள் நிகழுதல் இயல்பே.

மணி என்பது நீலமணிக்கு மட்டுமின்றி, அதனோடு தொடர்புடைய கல்வகை அனைத்தையும் குறிக்கும் ஆகுபெயராக ஆகிவிட்ட நிலையில், உயர்ந்த விலைமதிப்புடைய நீலமணியானது இவ்வாறு மத்தகமணி, திருமணி, மாமணி என்றெல்லாம் குறிப்பிடப்பெறலாயிற்று. கண்ணகியின் சிலம்பில் இடப்பெற்றிருந்த மணி நீலமணியே என்பதை மேலும் இருபெரும் சான்றுகள்வழி உறுதிப்படுத்தலாம். 

கிரேக்க அறிஞர் பிளினி, "மணியும் பவளமும் எந்த அளவு இந்தியர்களால் மதிக்கப்பெற்றனவோ, அந்த அளவிற்கு முத்துக்களை உரோமப் பெண்டிர் மதித்தனர்' எனத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  "வார்மிங்ட்டன்:  தி காமர்ஸ் பிட்வீன் தி ரோமன் எம்பயர் அண்டு இண்டியா, மேற்கோள்: 1985, பக்.252). இந்தியர்கள் மணியையும் பவளத்தையும் மதித்தனர் எனப் பிளினி பொதுவாகக் கூறியிருப்பினும், தமிழர்களில் குறிப்பாகச் செல்வ வளம்மிக்க நாடான சோழநாட்டைச் சார்ந்த மகளிரே விலையுயர்ந்த மணி, பவளங்களால் ஆன அணிகலன்களில் விருப்பமுடையவராக விளங்கினர் என்பதை இரட்டைக் காப்பியங்கள் தெளிவுறுத்துகின்றன. 

அதாவது  எக்காலத்தும் சோழமண்டலக் கடற்கரையை ஒட்டிய கடற் பகுதிகளில்தான் பவளப்பாறைகள் மிகுதி. கருநீலமணிகளும் செம்பவளமும் கலந்த அழகிய நிறமுரணுடைய அணிகலன்களை சோழநாட்டுச் செல்வந்த வணிகர்குல மகளிர் மிகவும் விரும்பினர். பட்டினப்பாலையிலும் (185-187)  புலவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சங்க காலத்தில், இந்தியா மட்டுமின்றி, மேலை நாடுகளும் "யானைகளுக்குச் சேரநாடு; மணிக்கும் பவளத்திற்கும் சோழநாடு; முத்துக்குப் பாண்டியநாடு' என அடையாளம் கூறும் அளவிற்கு மூன்று நாடுகளும் கடல்வணிகத்தால் பெரும்புகழுடன் விளங்கின. 

பெருமைக்குரிய இவ்வணிகச் செய்தியை மனத்திற்கொண்டே, அகநானூற்றை மூன்று தொகுதிகளாக்கி, அத்தொகுதிகளுக்குப் பழந்தமிழகத்தின் முப்பெரும் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளைச் சிறப்பிக்கும் வகையில் முறையே "களிற்றியானை நிரை', "மணிமிடைபவளம்', "நித்திலக்கோவை' எனப் பெயர்களை இட்டுச் சிறப்பித்துள்ளனர் (விரிவாகக் காண்க-நூல்: "செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்').

கருநீலக் காயாம்பூவுக்கு ஒப்புமையாக மணியும், செம்மூதாய்ப் பூச்சிக்கு உவமையாகப் பவளத்தையும் கூறும் மணிமிடைபவளம் என்ற அகநானூற்றுத் தொடரைக்கொண்டே, சோழநாட்டைச் சிறப்பிக்கும் இவ்வகநானூற்றுத் தொகுதிப் பெயரீடு அமைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு சோழரொடு தொடர்புடைய பொருண்மைகளுக்கு இப்பெயரீடுகள் அமைக்கப் பெற்றிருப்பதிலிருந்து "மணி' என்பது நீலமணியைக் குறிக்கும் சொல்லாட்சியே என்பதும், சோழநாட்டுக்கும் நீலமணிக்குமான நெருங்கிய பிணைப்பும் புலப்படுகிறது. 

வழக்காடு காதையில் கண்ணகி உரைத்த அடிகள், உட்பொருள் கொண்டவை. அதாவது, செல்வ வளமுடைய சோழநாடு மணிவளம் உடையது. சோழநாட்டுச் செல்வ வணிகக் குடியினரே பெரும்பாலும் மணிகளைப் பரல்களாகப் பயன்படுத்துவர் என்பதும், முத்து வளமுடைய பாண்டிய நாட்டினர் விலைமதிப்புமிக்க முத்தினையே பரல்களாகக் கொண்டிருப்பர் என்பதும் கண்ணகியின் முடிவு. அந்த முடிவால்தான், அவ்வளவு சினத்துடன், தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பினைக் கையோடு எடுத்துச்சென்று, தன் கணவனைக் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க இயலும் என்ற உறுதியுடன் அரண்மனைக்குத் துணிந்து செல்கிறாள்; வழக்காடுகிறாள்; உண்மையை மெய்ப்பிக்கிறாள்.

இலக்கிய உலகின் புகழ்பெற்ற இவ்வழக்காடல் "பாண்டிய நாடு முத்துவளம் உடையது' என்ற உண்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழவில்லை; வளநாடான சோழநாடு, இறக்குமதியால் மணிவளம் உடையதாக விளங்கிய உண்மையையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த வழக்காடல் ஆகும். எனவே, கண்ணகியின் சிலம்பிலிருந்து தெறித்தது மணியே; மாணிக்கம் அன்று!

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com