பரிபாடல் காட்டும் உகரச்சுட்டு!

சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். இசை பரிந்து வரும் பாடல்களைக் கொண்டதால் இது பரிபாடல் எனப்படுகிறது.
பரிபாடல் காட்டும் உகரச்சுட்டு!

சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். இசை பரிந்து வரும் பாடல்களைக் கொண்டதால் இது பரிபாடல் எனப்படுகிறது. இப்படி இசை பரிந்து வரும் பாடல்கள் மொத்தம் எழுபது என்று இறையனார் அகப்பொருள் உரையில் நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். இந்த எழுபது பாடல்களில் திருமாலைப் பற்றி எட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றி முப்பத்தொரு பாடல்களும் கொற்றவைக்கு ஒரு பாடலும் வையை பற்றி இருபத்தாறு பாடல்களும் மதுரை பற்றி நான்கு பாடல்களும் என எழுபது பாடல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு இப்போது இருபத்திரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

இவற்றில் ஆறு பாடல்கள் திருமாலைக் குறிக்கின்றன. எட்டுப் பாடல்கள் முருகனைப் போற்றுகின்றன. எட்டுப் பாடல்கள் வையை பற்றி வந்துள்ளன. பரிபாடலின் பன்னிரண்டாம் பாடல் வையை பற்றிய பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் நல்வழுதியார். பாலைப் பண்ணில் அமைந்துள்ள இப்பாடல் 102 அடிகளைக் கொண்டுள்ளது.

மேகம் இடைவிடாமல் திரண்டு இருளைப் பரப்பி மலையில் முற்றுகை இட்டுள்ளது. அதனால் தொடர்ந்து மழை பெய்கிறது. வையை ஆற்றில் வெள்ளம், கடல்போல் கரைபுரண்டு ஓடுகிறது. அது மலையிலிருந்து மணமுள்ள மலர்கள் பலவற்றை இழுத்துக் கொண்டு வருவதால் தண்ணீரில் மணம் மிகுந்துள்ளது. 

ஆண்களும் பெண்களும் அந்த வையையில் நீராடுவதற்காகப் புறப்படுகின்றனர். பெண்கள் அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டனர். அவர்களில் சிலர், வேகமில்லாமல் மிதமாக நடக்கும் குதிரைகளில் ஏறிச் சென்றனர். அன்னம் போன்ற அழகிய பெண்கள் சிலர் பெண் யானையின் மீது ஏறிச் சென்றனர். 

இப்படி வையையின் கரைகளில் இடைவிடாமல் ஆண்களும் பெண்களும் குவிந்திருந்த காரணத்தால் அது, வையையின் மனிதக் கரைபோல் தோற்றம் அளித்ததாம்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் கரையில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரே நேரத்தில் பேசியதால் அங்கே பேச்சரவம் கேட்டதே அல்லாமல் எவரின் பேச்சும் முழுமையாகக் கேட்கவில்லை. அப்படிக் கேட்க முடியாத சூழல் அமைந்ததற்குக் காரணம் அங்கே ஒலித்த இசைக் கருவிகளின் ஒலி ஆகும். அப்படிப்பட்ட ஒலிகளுக்கு இடையே கேட்டவற்றை உங்களுக்குச் சொல்கிறேன் என்று அடக்கத்துடன் சொல்கிறார் நல்வழுதியார். 

இதோ நம்முடன் நீராடிக் கொண்டிருக்கிறாளே! இவள் என்ன செய்தாள் தெரியுமா? நாம் நீராடுவதற்கு வரும்போது ஒருவன், இவள் அணிந்துருக்கும் முத்துமாலையைப் பார்ப்பதுபோல் இவளது மார்பினைப் பார்த்தான். அவன் பார்ப்பதைப் பார்த்த பிறகும் இவள் அதற்காக வெட்கப்படவில்லை என்று தங்களுடன் நீராடிக் கொண்டிருந்த பெண்ணை தோழிகள் கேலி செய்தனர்.

பூண்ஆரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான் உவன்
நாணாள் அவனை இந்நாரிகை என்மரும் 
(12: 55-56)

என்னும் அடிகளில் அவர்கள் கூறிய நிகழ்ச்சி இங்கே இப்போது நடக்கும் நிகழ்ச்சி இல்லை. அவர்கள் நீராடுவதற்கு வரும்போது வழியில் நடந்த நிகழ்ச்சி. அதை இப்போது நீராடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் சொல்லி நகைத்தனர். 

தொலைவில் ஒருவன் பார்த்த அந்தப் பார்வை பற்றிய தகவலை இப்போது குறிப்பிட்டுக் கூறுவதற்கு நல்வழுதியார் உவன் என்னும் சுட்டுப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் என்று இலக்கணம் உணர்த்துகிறது. 

இவற்றில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துகளை மட்டும் நாம் பயன்படுத்துகிறோம். அ என்பது தொலைவில் இருக்கும் பொருளையும் இ என்பது அருகில் இருக்கும் பொருளையும் சுட்டுவதற்கு நம்மால் பயன்படுத்தப்படுகிறது. அவன், இவன் என்று இவை சுட்டுப் பெயராக வருகின்றன.

உ என்னும் சுட்டெழுத்தை நாம் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் பயன்படுத்துவதில்லை. ஆனால் சங்க இலக்கியங்களிலும் திருக்குறள் முதலான பிற நூல்களிலும் இந்த உகரச் சுட்டு, பல இடங்களில் வந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. தமிழ் லெக்சிகன் என்னும் பேரகராதி இந்த உகரச் சுட்டினை அண்மைக்கும் சேய்மைக்கும் இடையில் உள்ள "இடைமைச் சுட்டு' என எடுத்துரைக்கிறது. ஆனால் இது, இப்படி இடைமைப் பொருளைத் தருவதில்லை. 

முன்பு நிகழ்ந்த அந்த நிகழ்வில் இந்தப் பெண்ணின் மார்பினைப் பார்த்தவன் இங்கே இப்போது இல்லை. அவன் இப்போது கண்ணுக்குப் புலப்படவில்லை. கண்ணுக்குப் புலப்படாத ஒருவனைச் சுட்டுவதற்கு உவன் என்னும் சுட்டுப் பெயரினை நல்வழுதியார், பரிபாடலில் பயன்படுத்தியுள்ளார். 

இதைப் போலவே சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள உகரச் சுட்டும் கண்ணுக்குப் புலப்படாத இடத்தைச் சுட்டுவதற்கே வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர் 

என்னும் திருக்குறளில் (620), நாம் முயற்சி செய்தால் விதியையும் புறந்தள்ளி வெற்றி கொள்ள முடியும் என்னும் பொருள் வந்துள்ளது. 

புறந்தள்ளி என்பது முதுகு இருக்கும் பின்பக்கத்தில் தள்ளி என்னும் விளக்கத்தைக் கொண்டுள்ளது. உப்பக்கம் என்னும் சொல்லும் கண்ணுக்குத் தெரியாத முதுகு என்னும் பகுதியைக் குறிக்கவே வந்துள்ளது என்பதையும் எண்ணிப் பார்த்தால் உகரச் சுட்டு, கண்ணுக்குப் புலப்படாத இடத்தையோ பொருளையோ சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள இயலும்.

எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வை நீராடிக் கொண்டிருக்கும் பெண்கள் நினைவுபடுத்தி அதை இப்போது தங்கள் உரையாடலுக்குள் கொண்டு வந்ததோடு மட்டும் அல்லாமல் அதைத் தங்கள் தோழியைக் கேலி செய்வதற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிந்து மகிழ முடிகிறது. 

ஒத்த பருவத்தைக் கொண்ட பெண்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்பதைக் காதால் கேட்டதைப் போல் நல்வழுதியார் நமக்கு இந்தப் பாடலில் காட்சிப் படுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com