இந்த வாரம் கலாரசிகன் - 27-09-2023

கடுமையான வசைமொழியை நான் பயன்படுத்துவதற்காக என்னை தயவுசெய்து மன்னிக்கவும். மனதின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க விழையும்போது, வார்த்தைகள் எல்லை மீறி விடுகின்றன.
இந்த வாரம் கலாரசிகன் - 27-09-2023
Updated on
2 min read

கடுமையான வசைமொழியை நான் பயன்படுத்துவதற்காக என்னை தயவுசெய்து மன்னிக்கவும். மனதின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க விழையும்போது, வார்த்தைகள் எல்லை மீறி விடுகின்றன. அப்படியென்ன வசைமொழி என்றால் - "தமிழன் நன்றி கொன்றவன்'! 

எதற்காக இப்படிச் சொல்கிறேன் என்று தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக என்னை மன்னிப்பீர்கள். மன்னிப்பது மட்டுமல்ல, நான் சொல்வதை நீங்களும் வழிமொழிந்து ஆமோதிப்பீர்கள். இதுதான் காரணம் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்கிற வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாள் செப்டம்பர் 5-ஆம் தேதி. அவரது 150-ஆவது பிறந்தநாள் முடிந்து 151-ஆவது பிறந்தநாளும் நிறைவடையப் போகிறது. அவர் பிறந்த ஆண்டு 1872. 

தமிழக வரலாற்றில், தமிழனின் பெருமையையும், தாயகமாம் இந்தியாவின் தன்மானத்தையும் உயர்த்திப் பிடித்த மாமனிதர் வ.உ.சி. அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு சவால்விட்டு, 1906-இல் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கியதால் "கப்பலோட்டிய தமிழன்' என்று போற்றப்படுபவர். கோரல் மில் நூற்பாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்துக்கு வித்திட்ட பெருமைக்கு உரியவர்.

பிரிட்டிஷாருக்கு எதிராக அவரும், தியாகி சுப்பிரமணிய சிவாவும் மக்களை ஒருங்கிணைத்த குற்றத்துக்காக அவர்கள் மீது தேச விரோதச் சட்டம் பாய்ந்தது. ஆங்கிலேயர்களின் நீதிமன்றம் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. கோவை சிறைச்சாலையில் காளை மாடுகளுக்கு பதிலாக கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், எண்ணெய் செக்கை இழுக்க வைத்தனர்.

இந்திய விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், சைவ சித்தாந்தத்தின் மகிமைக்காகவும் அளப்பரிய தொண்டாற்றியவர் "செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனார் என்று நான் சொல்லித்தான் தமிழகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவரது பங்களிப்பு குறித்து பள்ளிச் சிறுவர்களுக்குக்கூடத் தெரியும்.

வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்ததினத்தை கோலாகலமாக தமிழகம் கொண்டாட வேண்டும் என்று நான் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்தேன். தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமாவது செப்டம்பர் 5-ஆம் தேதியைக் கொண்டாடினார்களா என்றால், இல்லை. ஒருவேளை, திராவிட இயக்கத்தில் இணையாமல் கடைசிவரை தேசியவாதியாகவே இருந்ததுதான் அவர் செய்த தவறோ என்னவோ, தெரியவில்லை. 

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...' என்கிற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளைப் பாடச்சொல்லி அதைக் கேட்டபடியே உயிர்நீத்த அந்த தேசியவாதியை, திராவிட இயக்கத்தினர் புறக்கணிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தேசியம் பேசும் காங்கிரஸூம், பாரதியம் பேசும் பாஜகவும்கூட பொருட்படுத்தாமல் இருப்பதை என்னவென்று சொல்ல?

அதெல்லாம்போகட்டும், அரசியல் சாராத நம்மைப் போன்ற தமிழர்கள்கூட நினைக்க மறுக்கிறோமே...

இப்போது சொல்லுங்கள் எனது கோபம் நியாயம்தானே?

 -------------------------------------------


கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காகச் சென்றிருந்த நானும், சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்திருந்த எம்.ஏ. முஸ்தபாவும் தற்செயலாக சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சங்கீதா உணவு விடுதியில் சந்தித்துக் கொண்டோம். உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஃப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லாவை சந்திக்கப்போவதாக அவர் தெரிவித்தபோது, நானும் அவருடன் இணைந்துகொண்டேன். 

நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லாவின் தந்தை நீதிபதி ஃபக்கீர் முகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். நேர்மைக்கும், திறமைக்கும், நற்பண்புகளுக்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவரது நினைவாக, நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா 1940-இல் வெளியான ஒரு புத்தகத்தை மறுபதிப்பு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும், மாணவர்களுக்கும் அதை இலவசமாக வழங்கியிருக்கிறார். அதன் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். 

இந்திய விடுதலைக்கு முற்பட்ட 1940-ஆம் ஆண்டு மதராஸ் பார் கவுன்சிலால் வெளியிடப்பட்ட, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய "தொழில்முறை ஒழுக்கமும் வழக்குரைஞர் பணியும்' (ப்ரொஃபஷனல் காண்டக்ட் அண்ட் அட்வொகசி) என்ற புத்தகத்துக்கு, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சர். லயோனல் லீச் அணிந்துரை அளித்திருக்கிறார்.

அந்தப் புத்தகத்தை படித்துப் பார்த்து, பிழைதிருத்தம் செய்து உதவியவர் சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் கே. சுவாமிநாதன். அதற்கு சொல்லடைவு, பொருளடைவைத் தொகுத்து கொடுத்தவர் "நூலகவியலின் தந்தை' என்று போற்றப்படும் ராவ்சாகேப் எஸ்.ஆர். ரங்கநாதன்.

"வழக்குரைஞர் தொழிலும் அதன் கடமைகளும்' என்பதில் தொடங்குகிறது அந்தப் புத்தகம். ஒரு வழக்குரைஞர் தன்னை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும், சட்டப் படிப்புக்கான சில யோசனைகள், பயிற்சிக்கான களங்கள், கட்சிக்காரர்களை சந்திப்பது எப்படி, வாதத்துக்கான தயாரிப்பு, சாட்சிகள் குறுக்கு விசாரணை, நீதிமன்ற ஒழுங்குகள் என்று ஒவ்வொரு வழக்குரைஞரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை இலக்கணங்களை, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் பட்டியலிடுகிறது அந்தப் புத்தகம், மன்னிக்க வேண்டும், கையேடு...

அத்துடன் நின்றுவிடுகிறதா என்றால் இல்லை.  நீதித்துறை தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் தொட்டுக்காட்டி விளக்கி, நீதித்துறை வருங்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் சவால்களையும் சுட்டிக்காட்டி நிறைவு பெறுகிறது அந்தப் புத்தகம். அதைப் படித்ததன் விளைவு, நாம் வழக்குரைஞர் ஆகவில்லையே என்கிற ஏக்கம் ஏற்படுகிறது. 

இப்புத்தகம் கட்டாயமாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். சட்டம் படிக்கும் அனைத்து மாணவர்களும், வழக்குரைஞர்களும் இதை படிக்காமல் இருந்துவிடக்கூடாது. இந்த 1940-ஆம் ஆண்டு புத்தகத்தின் மீது புதுவெளிச்சம் பாய்ச்சியதற்காக, நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லாவுக்கு நீதித்துறை நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது.  


----------------------------------------

"நச்'சென்று இருந்தது ஆனைமலையிலிருந்து கவிஞர் அம்சப்ரியா வெளிக்கொணரும்  "புன்னகை' தனிச்சுற்று இதழில் வெளிவந்திருக்கும் 
கு.ஆனந்தனின் கவிதை.
நெடுஞ்சாலை ஓரங்களில் 
இருந்தன மரங்கள்
அசோகர் காலத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com