இந்த வாரம் கலாரசிகன் - (03-12-2023)

இந்த ஆண்டுக்கான தினமணி நாளிதழின் மகாகவி பாரதியார் விருதுக்கு, பாரதியியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ய. மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வாரம் கலாரசிகன் - (03-12-2023)

இந்த ஆண்டுக்கான தினமணி நாளிதழின் மகாகவி பாரதியார் விருதுக்கு, பாரதியியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ய. மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர் சீனி. விசுவநாதனின் அடிச்சுவட்டில் பயணித்தவர்களில் முனைவர் ய. மணிகண்டன் முக்கியமானவர். 

முந்தைய தலைமுறையில் சீனி. விசுவநாதன் - இளசை மணியன் என்றால், இன்றைய தலைமுறையில் ய. மணிகண்டன் -  ஆ.இரா. வேங்கடாசலபதி என்று துணிந்து கூறலாம். அந்த அளவுக்குத் தங்களை பாரதி ஆய்வில் தோய்த்துக் கொண்டவர்கள் இவர்கள்.  தனது சொந்தச் செலவில் தில்லிக்குச் சென்று, பல மாதங்கள் தங்கியிருந்து, தேசிய ஆவணக் காப்பகத்தில், வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவதுபோல, பாரதியார் குறித்த சின்னச் சின்னத் தகவல்களைக்கூட விடாமல் சேகரித்து ஆவணப்படுத்திய பெருமை முனைவர் ய. மணிகண்டனைச் சாரும்.

"மகாகவி பாரதியார் விருது' வழங்க இருக்கும் இடமும் தனிச்சிறப்புக்குரியது. மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தான் பாண்டித்துரைத் தேவரின் முனைப்பால் 1901-இல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. 1904-ஆம் ஆண்டில், சில மாதங்கள் மகாகவி பாரதியார் அந்தப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியிருக்கிறார். 

அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், இந்த ஆண்டு முதல், தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் நிகழ்ச்சியை மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடத்த முடிவு செய்தோம். வருங்காலத்தில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் பெருமைகளில் ஒன்றாக இந்த விருது வழங்கப்படுவதும் சேரக்கூடும்.

விருதுபெறும் முனைவர் ய.மணிகண்டனின் பின்னணி குறித்தும் இங்கு நான் சொல்லியாக வேண்டும். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஓலைச்சுவடிகளுக்கு இடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். தமிழ்ப் பண்டிதராக சரஸ்வதி மஹால் நூலகத்தில் தொடங்கிய அவரது தமிழ்ப் பயணம் இப்போது அவரை பெருமைமிகு சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை தலைவராக உயர்த்தியிருக்கிறது. தனது மானசீக குருவாக மகாகவி பாரதியாரையும், தனது பாரதியியல் ஆய்வு முன்னோடியாக பெரியவர் சீனி. விசுவநாதனையும் கருதும் முனைவர் ய. மணிகண்டனின் வழிகாட்டியாக இருந்தவர் "சேக்கிழார் அடிப்பொடி'  டி.என். இராமச்சந்திரன்.

தகுதியான ஒருவருக்கு, தகுதியான ஒருவரின் முன்னிலையில் தகுதியான ஒருவரால் ஆண்டுதோறும் தினமணியின் "மகாகவி பாரதியார் விருது' வழங்கப்படுகிறது என்று நான் சொன்னால், ஏனைய இருவர் யார் என்று வினவக்கூடும். தகுதியானவர் - முனைவர் ய. மணிகண்டன்; தகுதியான முன்னிலை - நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன்; விருது வழங்கும் தகுதியாளர் - சி.பி. இராதாகிருஷ்ணன், மேதகு ஆளுநர், ஜார்க்கண்ட் மாநிலம். 

டிசம்பர் 11-ஆம் தேதி காலை, எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, குழுமியிருக்கும் பாரதி அன்பர்கள் புடைசூழ ஊர்வலமாக பாரதியார் மணி மண்டபத்துக்கு வழக்கம்போல செல்கிறோம். மணிமண்டபத்தில் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நிற்கும் மகாகவியின் முழுஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். எழுத்தாளர் சோ. தர்மன் உள்ளிட்ட  எழுத்தாளர்களையும், பாரதி அன்பர்களையும் மணிமண்டப வளாகத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். 

எட்டயபுரம் நிகழ்ச்சியை நிறைவு செய்து மதுரையை நோக்கி விரைந்தாக வேண்டும். மாலை 5.30 மணிக்கு, மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தினமணியின் "மகாகவி பாரதியார் விருது'  வழங்கும் நிகழ்ச்சி. பாரதி அன்பர்கள் இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடிந்தால் அதைவிடச் சிறப்பு எதுவும் இருக்க முடியாது. இல்லாவிட்டால் ஒரு நிகழ்ச்சியிலாவது கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.

தமிழின் அடையாளம் பாரதியார். "தமிழுக்கு தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணி தமிழகம் தவங்கிடக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்' என்பார் பாரதிதாசன். "பாரதியாரைக் கொண்டாடாதவர்களுக்கு, தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை' என்பார் கண்ணதாசன். பாரதியாரின் பிறந்தநாளை நாம் கொண்டாடாமல் இருந்தால் எப்படி?

------------------------------------------------------------------

தினமணி "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் நிகழ்வு குறித்தும், இந்த ஆண்டு முனைவர் ய. மணிகண்டன் அந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைத் தெரிவிப்பதற்கும் சென்ற வாரம் பெரியவர் சீனி. விசுவநாதனை சந்திக்க விழைந்தேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர் அகவை 90-இல் அடியெடுத்து வைக்க இருந்தார். 

அசோக் நகர் பல்லவா மருத்துவமனையில் முழங்கால் வலி சிகிச்சைக்காக டாக்டர் செல்வத்தை பார்க்கச் சென்றபோது, அப்படியே மேற்கு மாம்பலத்தில் பெரியவர் சீனி.விசுவநாதனையும் சந்திக்க முடிவு செய்தேன். எங்கள் மூத்த நிருபர் கோபி கிருஷ்ணாவும் என்னுடன் இணைந்து கொண்டார்.

நடையாய் நடந்து "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் ஓலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து சங்க இலக்கியங்களைப் பதிப்பித்தார் என்றால், சீனி.விசுவநாதனின் பணி அதற்கு சற்றும் குறைந்ததல்ல. பாரதியாரின் படைப்புகளை கால வரிசைப்படுத்தியதிலும், பாரதியார் குறித்த பதிப்புகளின் தொகுப்பை உருவாக்கியதிலும் அவரது பங்களிப்பு சாதாரணமானதா என்ன? அவருக்கு ஏன் இன்னும் தமிழக பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைவர் பட்டம் வழங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

பெரியவரிடம் ஆசிபெற்றபோது நான் அவரிடம் விழைந்தது - "தேதியிட்டு கையொப்பமிட்டு நீங்கள் எழுதிய, மகாகவி பாரதி வரலாறு புத்தகத்தின் முதல் பதிப்பு பிரதியைத் தாருங்கள்'. 1996-இல் முதல் பதிப்பு கண்ட அந்த புத்தகத்தின் பிரதியை பொக்கிஷமாக பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதற்குப் பிறகு எத்தனையோ பிரதிகள் கண்டுவிட்டது என்றாலும், அந்த முதல் பதிப்பின் மதிப்பு அலாதிதானே! 

------------------------------------------------------------------

கவிதைத் தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏதோ ஒன்றிரண்டு கவிதைகள் "அடடா..' போட வைத்துவிட்டால், அதுவேகூட அந்தக் கவிதைத் தொகுப்பின் வெற்றிதான்.
கவிஞர் பாலசாண்டில்யனின் "மழை வரும் அறிகுறி' கவிதைத் தொகுப்பில் நான் படித்து "அட' போட வைத்த கவிதை இது - 
மரத்தை வெட்டி
காகிதம் செய்து
அதன்மீது எழுதுகிறான்
"மரத்தைக் காப்போம்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com