வேங்கையும் புலி ஈன்றன!

பண்டைத்தமிழர் அகவாழ்வில், களவும் கற்பும் இருபெரு நெறிகளாகக் கருதப்பட்டன. நற்றிணையின் 389-ஆம் பாடல் பழந்தமிழர் களவொழுக்க நெறியை அறியப் பெரிதும் துணை நிற்கிறது. 
வேங்கையும் புலி ஈன்றன!

பண்டைத்தமிழர் அகவாழ்வில், களவும் கற்பும் இருபெரு நெறிகளாகக் கருதப்பட்டன. நற்றிணையின் 389-ஆம் பாடல் பழந்தமிழர் களவொழுக்க நெறியை அறியப் பெரிதும் துணை நிற்கிறது. 
இப்பாடலின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் எனும் புலவராவார். குறிஞ்சித்திணையின் கீழ் பகற்குறி வந்தொழுகா நின்ற காலத்து தலைமகன் கேட்பச் சொல்லியது என்ற துறையின் கீழ் இப்பாடல் அமைகிறது. பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனைத் தோழி, கண்டும் காணாததுபோல் பாவித்து, "சந்திப்பு போதும், திருமணத்திற்கு ஏற்பாடு செய்க' எனத் தலைவிக்குக் கூறுவது போல் தலைவனுக்கு அறிவுறுத்தியது என்பது இதன் பொருளாகும். 
"யானையின் முகத்தைப் பிளக்கக் கூடிய கூரிய அம்பைக் கொண்டு, கொலைத்தொழிலன்றி வேறு தொழிலே தெரியாத வீரர்களுடன் எம் தந்தை வேட்டையாடச் சென்றுவிட்டான். அதனால் காவல் இல்லாதுபோக, பால் அரும்பி நிற்கும் தினைப்புனத்தைக் கொத்த வரும் சிறு கிளிகளிடமிருந்து காக்க தாய் எங்களைத் தினைப்புனக் காவலுக்கு அனுப்பினாள். அதுமுதலாக நாங்கள் இப்பணியைச் செய்து வருகிறோம். 
அப்போது ஒரு நாள் தலைவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக தலைவியைச் சந்திக்கிறான். அவன் தேன் மணக்கும் அருவி பாயும் மலைக்குத் தலைவன்; கோழி தம் சேவலுடன் தம் விரிந்த நகத்தால் இரை தேட கொல்லையின் மேற்புறத்து மண்ணைக் கிளறும் புழுதியினிடையே நல்ல பல பொன் ஒளிரும் செழிப்பு மிக்க நாட்டுக்குத் தலைவன். அத்தகைய பெருமைமிகு தலைவன் தலைவியைப் பிரியாத வகையில் காதல் கொண்டான். 
காலம் கடந்தது. புலிபோலும் புள்ளிகளையுடைய பூக்களைச் சொரிந்து நின்றன வேங்கை. தினை முற்றியதால் அறுவடை செய்யும் காலமும் வந்தது. தினை கொய்யும் காலமும் மணம் புரியும் காலமும் ஒருசேர வந்தமை கருதி போலும் அன்னை என்னை கூர்ந்து நோக்கினள். இனி இத்தொடர்பு எப்படி முடியுமோ அறியேன் என்று கலங்குகிறாள். 
இதனை,
வேங்கை யும்புலி ஈன்றன அருவியும்
தேம்படு நெடுவரை மணியின் மானும் 
அன்னையும் அமர்ந்துநோக் கினளே 
        என்னையும்
களிற்றுமுகந் திறந்த கல்லா 
        விழுத்தொடை
ஏவல் இளையரொடு மாவழிப் 
        பட்டெனச்
சிறுகிளி முரணிய பெருங்குரல் ஏனல்
காவல் இனியென் றோளே சேவலொடு
சிலம்பில் போகிய சிதர்கால் வாரணம்
முதைச்சுவல் கிளைத்தபூழி மிகப்பல
நன்பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைந்தனம் தொடர்பே  
(நற்றிணை : 389)

என்ற பாடல் வழி அறியலாம். 

தினை விளைந்துவிட்டால் அறுவடையாகிவிடும். அதன்பின் காவலுக்கு அவசியமில்லை. நாங்கள் ஊர் திரும்பிவிடுவோம். அதன்பிறகு தலைவியை உன்னால் காண இயலாது. ஆகவே காலம்தாழ்த்தாது திருமணத்திற்கான ஏற்பாடுகளை உடனே செய் என்ற குறிப்பை தலைவனுக்கு உணர்த்தும் தோழி மதிநுட்பம் இப்பாடலில் உணர்த்தப்படக் காணலாம்.
இப்பாடலில் அமையும் பல தொடர்கள் நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது சிறப்பாகும். பாடலின் முதலில் இடம்பெறும் வேங்கையும் புலி ஈன்றன என்ற தொடர் ஆழ்ந்த பொருளுடையது. வேங்கை என்கிற மரம் புலியை ஈன்றன என்ற பொருளைத் தந்து நம்மை திகைக்கச் செய்கிறது. வேங்கை என்ற சொல் தமிழில் வேங்கை மரத்தையும் புலியையும் குறிக்கும். ஒன்று மரம்; மற்றது விலங்கு. இரண்டும் வெவ்வேறு இனத்தன. ஆனால் புலவர் இங்கே வேங்கை மரத்தையும் புலியையும் ஒன்றாகவே காண்பதுதான் நுட்பமுடையது. இங்கே புலவர் குறிப்பிடும் புலி என்பது வேங்கை மலர்களைக் குறிக்கிறது. 
அடுத்து சிதர்கால் வாரணம் என்னும் தொடரின் சிறப்பைக் காணலாம். தமிழில் வாரணம் என்ற சொல் யானை, கோழி இரண்டையும் குறிக்கும். சிதர்கால் என்ற சொல்லுக்குப் பிரிந்த காலை உடைய என்பது பொருள். பிரிந்த காலை உடைய வாரணம் (சேவல்) என்றதனால் இச்சொல் பிரியாத காலை உடைய யானையை விலக்கி கோழியைக் குறித்து வேறுபடுத்திக் காட்டுவது புலவரின் புலமைக்கு மற்றொரு சான்று. தொல்காப்பியர் இதனை ஒன்றொழி பொதுச் சொல் என்பார்.
அடுத்து, கோழிகள் புழுதியைக் கிளறும் போது அங்கு கிடக்கும் பொன்னால், அந்த இடமே ஒளிர்ந்து காணப்படுவதாகக் கூறும் கற்பனையை எண்ணிப் பார்க்கலாம். தலைவனது நாட்டின் சிறப்பையும் அவனின் செல்வ வளத்தையும் காட்டவே அவ்வாறு கூறுகிறார் எனலாம். இதனை வாரணம் முதைச்சுவல் கிளைத்த பூமி மிகப்பல நன்பொன் இமைக்கும் நாடன் என்ற வரி உணர்த்தும். 
அன்னையும் அமர்ந்து நோக்கினள் என்ற வரியும் சிந்தனைக்குரியது. தலைவன் தலைவி களவொழுக்கத்தை நற்றாய் ஓரளவு அறிந்திருந்த காரணத்தால் தினை கொய்யும் காலமும் மணம்புணரும் காலமும் ஒருசேர வந்தமை கருதி தோழியைக் கூர்ந்து நோக்கிய குறிப்பை "அன்னையும் அமர்ந்து நோக்கினள்' என்கிறார். 
தாயின் இந்நோக்கு அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தையும் தோழிக்கு ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம். இதுபோலவே ஓர் அன்னையின் செயலை ஐயூர் முடவனார் எனும் புலவர் அன்னையும் நன்னாள் வேங்கையும் மலர்கமா இனியென என்முகம் நோக்கினள் (நற்றிணை 206) என்று கூறுவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
அடுத்து தலைவியின் தந்தையைக் கூறுமிடத்து யானையை நேர் எதிரே பார்த்து அதன் முகத்தில் அம்பெய்து கொல்லும் வீரமுடைய வீரர்களை உடையவன் என் தந்தை, என எச்சரிப்பது போல களிற்று முகந் திறந்த கல்லா விழுத்தொடை ஏவல் இளையர் என்று சொல்வது தலைவனுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் கொள்ளலாம். பாடலின் இறுதியில் வரும் அன்புரு காமம் என்ற சொல்லுக்கேற்ப களவுநெறிக்கு இப்பாடல் சிறந்த காட்டாக அமைவதும் இங்கு எண்ணத்தகும்.
இவ்வாறு தமிழர் களவொழுக்க நெறியை தம் நுண்மாண் நுழைபுலத்தால் சொல்லோவியமாக்கிக் காட்டுவம் புலவர் காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனாரின் புலமைத்திறன் பாராட்டுக்குரியதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com