அந்தரத்தில் தொங்கும் மலர்கள்

ஒரு நிகழ்வைக் காட்சிப்படுத்திக் காட்டுவதில் கவிஞர்களுக்கு நிகர் கவிஞர்களே.
அந்தரத்தில் தொங்கும் மலர்கள்

ஒரு நிகழ்வைக் காட்சிப்படுத்திக் காட்டுவதில் கவிஞர்களுக்கு நிகர் கவிஞர்களே. அதிலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர், தான் காட்டும் காட்சிகளில் கற்பனை நயத்தை இயற்கையோடு ஒன்றச்செய்து அக்கதாபாத்திரத்தின் திறனுக்கு ஏற்ப அழகியலில் கவிதை புனைந்திருப்பார்.  அதைப் படிக்கும்போது அக்காட்சி எப்போதும், எல்லா காலத்திற்கும் ஏற்ற வகையில் மிகப் பொருத்தமாக அமைத்திருக்கும்;. 

இதோ ஓர்அழகிய காட்சி. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் ஊர்தேடும் படலத்தில் இலங்கையின் பெருமையையும், அரக்கர்களின் திறமையையும் இலங்கேஸ்வரன் வாழும் மாட மாளிகை, கூட கோபுரங்களின் உயர்வையும் கூறிக்கொண்டே வந்த கம்பர், இராமதூதன், சொல்லின் செல்வன், உலகத்திற்கே அச்சாணியான காற்றின் புதல்வன் அனுமன், சீதாப்பிராட்டியைத் தேடிக் கொண்டு இலங்கையில் நுழைந்ததைக் குறிப்பிடுகிறார். 

இலங்கைக்கு வந்த அனுமனை, தேவர்கள் மலர் தூவி வரவேற்கிறார்கள்.  ஆனால் தேவர்கள் தூவிய அந்த மலர்கள் இராவணனுக்கு பயந்து மண்ணில் விழவில்லையாம்; அவை திரும்ப விண்ணுக்கும் செல்லவில்லையாம். அந்தரத்திலேயே நின்று விட்டனவாம். அது எப்படி இருந்தது என்றால், இரவில் வானத்தில் பொலிவுடன் சந்திரனோடு மின்னும் விண்மீன்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல் இருந்ததாம். 

ஆம், இன்றும் நாம் அத்தகைய காட்சியைப் பார்த்து ரசித்திருக்கிறோம். எப்படி என்றால், விழாக் காலத்தில் திருமண மண்டபங்களில் அல்லது நட்சத்திர விடுதிகளில் கண்ணைக் கவரும் அழகில் சிறு சிறு மின் விளக்கு தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த மின்விளக்குகளைப் பார்க்கும் போது, இலங்கையில் நுழைந்த அனுமன் மீது தேவர்கள் தூவிய மலர்கள் இராவணனுக்கு பயந்து மண்மீது விழாமல், விண்ணுக்கும் போகாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப்போல் காட்சியளிக்கும்.

ஒரு கவிதையை படிக்கும் போது, வாசிப்பவனின் கண்முன்னே அக் காட்சியை அப்படியே காட்சிப் படுத்திக் காட்டுவதுதான் கவிஞனின் வெற்றி; கவிதையில் அதுவே உத்தி. கவிச்சக்ரவர்த்தி கம்பரும் அதைத்ததான் காட்டுகிறார். 

இதோ அக்கவிதை:-

எண் உடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணில் வீழ்கில, மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி, ஆய்கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற, மீன்எலாம் 
(கம்ப: 4997)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com